கடற்புலிகளுக்குச் சொந்தமான ‘கடற்புறா’

305

 

20ம் நூற்றாண்டின் முற்பகுதியின் ஒரு நாள், ரஷ்ய கப்பற்படைத் தொகுதி கிழக்கு நோக்கி தன் நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றது.

யப்பான் நாட்டிற்கெதிராக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட யுத்தமே இப்பயணத்திற்கு காரணமாகும். சர்வதேச சட்டவரம்பிற்கமைய, நடுநிலை நாடுகளின் துறைமுகங்களிற்கு யுத்தத்தில் ஈடுபடும் நாடுகளின் கப்பல்கள் செல்ல முடியாது.

13686637_624553811041918_7331153975198682204_n 13690738_624794517684514_3307120855637936684_n

இந்த யுத்தத்தில் பிரான்ஸ் ஒரு நடுநிலை நாடாக இருந்தபோதும், பிரான்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு ஆபிரிக்கா கரையோரத்தில் அமைந்த, “டாக்கார்” என்ற துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ரஷ்ய கப்பற்படைக் கப்டன் றொஸ்டெஸ் வென்ஸ்கி தன் கப்பற் தொகுதியுடன் சென்று எரிபொருளை நிரப்புகின்றான்.

அந்த நேரம் பிரஞ்சுத்துறைமுக அட்மிரல் எரிபொருள் நிரப்புவதை நிறுத்தி, துறைமுகத்தை விட்டு வெளியேறும்படி ரஷ்ய கப்டனுக்குக் கட்டளையிடுகின்றார். “கரையிலுள்ள உங்கள் பீரங்கித் தொகுதி என்னைத் தடுக்கும் வரை, நான் எரிபொருள் நிரப்புவேன்”, என்ற தீர்க்கமான பதிலை கூறுகின்றான், கப்டன் றொஸ்டெஸ் வென்ஸ்கி. (ஆதாரம்- சூஷிமா கடல் யுத்தம் THE BATTLE OF TSUSHIMA பக்கம் 19-20)

1985 ஏப்ரல் 14ம், திகதி கடற்புலிகளின் அணி வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், பாரிய ஒரு இழப்பைச் சந்தித்த பின்பும், கப்டன் றொஸ்டெஸ் வென்ஸ்கியின் தீர்க்கமான பதிலைப் போன்ற தன்மையில் கடற்புலி அணியினர் மீண்டும் தம் சேவையில் ஈடுபடுகின்றனர். இவர்களின் துணிகர வளர்ச்சிப்பாதையில் 1985ம் ஆண்டு யூன் மாதத்தில் வடமராட்சி கடற்பரப்பில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று குறிப்பிட வேண்டியுள்ளது.

அன்றைய நாளில் தமிழ் நாட்டின் கரையோரத்திலுள்ள மல்லிபட்டினம் கடற்புலிகளின் பிரதான தளங்களில் ஒன்றாகும். வேதாரணியம், கோடியாக்கரை, ராமேஸ்வரம் போன்ற ஏனைய துறைகளில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் மைய நிலையமாக மல்லிபட்டினம் விளங்கியது.

கடல் கடந்த தம் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட படகுகட்டுமானத் தளமொன்றும், மல்லிபட்டின துறையில் அமைந்திருந்தது. “அன்னப்பிலா”, “துர்க்காதேவி”, போன்ற படகுகள் இங்குதான் உருவாக்கப்பட்டன. தமிழீழத்தில் இந்திய இராணுவத்தின் செயற்பாட்டின்போது, சயனைற் அருந்தி வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகளைச் சுமந்து சென்ற கடற்புலிகளுக்குச் சொந்தமான ‘கடற்புறா’ என்ற படகும் அன்னப்பிலா, துர்க்காதேவி ஆகிய படகுகளும் நிரந்தரமாக நங்கூரமிடும் துறையாக மல்லிபட்டினம் விளங்கி வந்தது.

இங்கு குறிப்பிடப்போகும் சம்பவம் நடந்த அன்று, 23 அடி நீளமுடைய பச்சை நிற படகொன்றில் இரண்டு 55 குதிரைவலுவும் ஒரு 40 குதிரைவலுவும் கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்கள் பூட்டப்படுகின்றன. இரண்டு ஜி3 றைபிள்களும் ஒரு எஸ்.எல்.ஆர் றைபிளும,;; சில கைக்குண்டுகளும் பாதுகாப்பிற்காக கொண்டு செல்லும்படி பணிக்கப்படுகின்றது. தமிழீழத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டிய ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருட்கள் என்பன பொலித்தீன் உறையிடப்பட்டு படகில் ஏற்றப்படுகின்றன. அனுபவம் மிக்க, கடற்புலிகளின் அணியைச் சேர்ந்த ரகுவப்பா, பழனி, உட்பட நால்வர் மேற்படி படகை வழிநடத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களோடு பயிற்சி முடித்துத் தாய் மண்ணிற்குத் திரும்பும் பல போராளிகளும் அன்று மதியவேளை தம் பயணத்தை தொடருகின்றனர். நீண்ட ஆழமான கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதிரியின் நடமாட்டத்தை அவதானிக்க, அணியப் பகுதியின் மேற்தட்டில் கம்பீரமாக கடற்புலியொருவர் கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார். மல்லிபட்டினத் திற்கும் தமிழீழத்திற்கும் இடையிலான கடலின் மையப்பகுதியைத் தாண்டி, வண்டி வந்துகொண்டிருக்கும் வேளையில், வானத்தில் தொலை தூரத்தில் வல்லூறு ஒன்று தெரிகின்றது. படகிலுள்ள அத்தனை பேரும் அணியத்தில் நின்று அவதானித்த கடற்புலியின் அறிவுறுத்தலினால், அக்கரிய சிறிய உருவத்தை உற்று நோக்கிய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அது வல்லூறு அல்ல ஓர் உலங்குவானூர்தி என அடையாளம் காணப்படுகின்றது. “செய் அல்லது செத்து மடி” இதில் ஒன்றுதான் படகில் இருந்தவர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாக இருந்தது. கரை தெரியாத ஆழியின் நடுவே கலக்கமற்ற நிலையில், தம்மைச் சுற்றி வட்டமிடும் உலங்குவானூர்தியை எதிர்க்கத் தயாராகின்றனர். அதேவேளை தூரத்தில் சிறிலங்காவின் கடற்படைக்கலங்கள் விரைந்து வருவதையும், வீரர்கள் அவதானிக்கின்றனர்.

வானில் நின்று சரமாரியான குண்டுகள் படகைச் சுற்றி பொழியப்படுகின்றன. தம்மிடம் இருந்த சகல ஆயுதங்களையும் படகில் நின்றோர் பயன்படுத்திய வேளையில், படகோட்டி வானூர்தியின் நகர்வுக்கேற்ற வகையில் படகைச் சாதுரியமாக வளைத்து, நெளித்து ஓட்டிக் கொண்டிருக்கின்றான். படகில் நின்று ஏவப்பட்ட ரவைகளில் சில வானில் நின்ற அந்த வல்லூறின் வயிற்றை ஊடுருவ, புகை கக்கிய நிலையில் உலங்கு வானூர்தி என்ற அந்த வல்லூறு எதிர்ப்பிற்கு முகங்காட்ட முடியாது பின்வாங்குகின்றது. அதேவேளை படகை நெருங்கி வந்த சிறிலங்காவின் கடற்படைக் கலங்கள் தம் பீரங்கிகளின் வாய்களைத் திறக்க சரமாரியான குண்டுகள் படகைச் சுற்றிக் கடற்பரப்பில் சிதறி வெடிக்கின்றன. ஆனாலும் சிறிலங்காவினால், கடல் நடுவே மேற்கொள்ளப்பட்டமேற்படி கூட்டுமுறைத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த புலிகளின் இயல்புக்கேற்ற மனோ வலிமையுடன் போராடிய படகும் அது சுமந்து சென்ற வீரர்களும் படகிற்கேற்பட்ட சிறு காயங்களுடன் மீண்டும் கடலைக் கிழித்து, மல்லிபட்டினத் துறையைச் சென்றடைகின்றனர். (மேற்படி சம்பவத்தில் பங்கு கொண்ட கடற்புலி அணியினரில் கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா இன்று ஆகியோர் மாவீரர் என்பது குறிப்பிட வேண்டியதொன்றாகும்.)

80ம் ஆண்டு தசாப்தத்தின் மத்தியகாலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளும் கரந்தடித்தாக்குல்களும் தமிழீழ மண்ணின் பல்வேறு பிராந்தியங்களிலும் வேகமாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதற்கேற்ப படையணியுடன், படைக் கலங்களையும், பிராந்தியங்களுக்கு கொண்டு செல்லும் பாரிய செயலில் சிறு தொகை உறுப்பினரைக் கொண்ட கடற்புலி அணியினர் அயராது உழைக்கின்றனர். “கடற்புறா” “அன்னப்பிலா” “துர்க்காதேவி” ஆகிய வள்ளங்கள் கடல் மடியில் ஓயாது தம் தடங்களைப்பதிக்கின்றன. அன்று திரை கடல் ஓடித் திரவியம் தேடச்சென்ற கடலோடிகளையும் அவர்கள் சென்ற கடற்கலங்களையும் போல்லாது, இன்று திரை கடல் ஓடும் கடற்புலிகளின் நோக்கங்களும் சேவைகளும் தன்னலமற்றவையாகவும் சுதந்திரதாகம் நிறைந்தவையாகவும் காணப்படுகின்றன. மட்டுநகர் தொடக்கம் மன்னார் வரை இக்கடற்புலி மறவர்களின் காற்தடங்கள் பதியாத இடங்கள் இல்லை எனும் அளவில் செயற்பாடுகள் மெருகூட்டப்படுகின்றன. இதன் காரணத்தால் கடற்புலிகளின் பயணங்கள் நீண்டவையாகவும், ஆபத்துக்கள் நிறைந்தவiயாகவும் மாற்றம் பெறுகின்றன. இந்த வடிவில் தம் பணிகளை அயராது மேற்கொண்ட கடற்புலிகளின் அணி 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் நாள் மீண்டும்; பேரதிர்ச்சி ஒன்றைச் சந்திக்கின்றது.

1985ம் ஆண்டு யாழ் பொலிஸ் நிலையத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று ஒரு தாக்குதலை பருத்தித்துறையில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது மேற்கொள்ளுவதற்காக விடுதலைப்புலிகள் திட்டமிடுகின்றனர் இதற்காகத் தமிழீழப் பிராந்தியங்களில் இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் குடா நாட்டில் கொண்டு வந்து குவிக்கப்படுகின்றனர். மாதிரிகள் தயாரிக்கப்பட்டுப் போராளிகளுக்குத் தாக்குதல் முறைகளும் விளங்கப் படுத்தப்படுகின்றன. அதே வேளையில் இத்தாக்குதலுக்கு முக்கியமாகத் தேவைப்படப்போகும் சக்கைக் கான்களின் ஒரு பகுதியும் போராளிகளும் ஆயுதங்களும் தமிழ் நாட்டுக் கரையில் இருந்து கொண்டு வரும் பணியை கடற்புலி அணியினர் மேற்கொள்ளுகின்றனர்.

இதற்கமைய தமிழ் நாட்டின் வேதாரணியக் கரையில், கூடிய பாதுகாப்பு வழங்கக்கூடிய ஆயுதங்களோடு, கூடிய வேகத்தையும் கொண்ட வண்டி ஒன்று தயார்படுத்தப்படுகின்றது. 23 அடி நீளமுடைய பச்சை நிறமான இவ்வண்டியில் மூன்று 55 குதிரைவலுக் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. வண்டியின் முற்பகுதியில் ஜி.பி.எம்.ஒன்று அதற்கென அமைக்கப்பட்ட மௌண்டில் பொருத்தப்படுகின்றது. 4:1 என்ற ரீதியில் றேசர் ரவைகள் இணைத்து 500 ரவைகள் வழங்கப்படுகின்றன. இதனோடு இரண்டு ஜி3 றைபிள்களில் 2:1 என்ற ரீதியில் றேசர் ரவைகள் ரவைக்கூடுகளில் இணைக்கப்படுகின்றன. ஒரு எஸ்.எல்.ஆர் றைபிளும் நான்கு கைக்குண்டுகளும் ஜி3 றைபிள்களுக்கு 6 றைபிள்கிறனேற்றுக்களும் பராலைற்றும் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்றன. (1985ல், கணேஸ் மாமா சென்ற வண்டியின் வேகத்தையும் காப்பிற்காக கொண்டு சென்ற ஆயுதங்களின் தன்மையையும் ஒப்பு நோக்கின் இத்துறையில் கடற்புலிகளின் பரிணாம வளர்ச்சி நிலையை அறிய முடியும்,)

மேற்படி மறுசீரமைக்கப்பட்ட முறையில் சக்கைக் கான்களையும் ஆயுதங்களையும் அவற்றோடு 17 வீரர்களையும் சுமந்த வண்டி இரவு 12.00 மணிக்குப் பின் வேதாரணியத்தில் இருந்து பொலிகண்டி நோக்கிப் புறப்பட்டு வருகின்றது. அன்றைய நாட்களில் விடுதலைப் புலிகள் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கையாள்வதில் போதிய பயிற்சியையோ, வளர்ச்சியையோ பெற்றிருக்கவில்லை. இதன்பயனாக தமிழ்நாட்டிற்கும், தமிழீழத்தில் அமைந்த வல்வெட்டித்துறைக்குமான தொலைத் தொடர்புகள் இன்று மேற்கொள்ளப்படுவது போன்று சங்கேதத்தாள்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் உரையாடலைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இதன் பயனாக சிறிலங்காவின் கடற்படை, விழிப்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு, அவர்களின் ரோந்துக்கப்பல்கள் வடமராட்சியின் கடற்பரப்பில் கண்காணிப்பை மேற்கொள்ளப் பணிக்கப்படுகின்றன.

போர்க்களம் ஒன்றைச் சந்திக்க புதுவேகத்துடன் புறப்பட்டு வந்த கடற்புலிகளின் படகு, எதிர்பாராதவிதமாக சிறிலங்காவின் கடற்கலங்களிலிருந்து புறப்பட்டு வந்த அக்கினிப் பொறிகளைக் காண நேரிடுகின்றது. அன்றைய நிலையில் தற்பாதுகாப்பை மேற்கொண்டு எதிரியிடமிருந்து தப்பிச் செல்லும் வழியை மேற்கொள்ளும் புலிகள், சிறிலங்காவின் கடற்படைக் கலங்கள் தம்மைச் சுற்றிச் சூழும் நிலையைக் கண்ணுற்றதும் எதிர்த்துச் சமர் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வல்வெட்டித்துறையின் கடலின் மேற்பரப்பில் இருளைக் கிழித்து செந்தணல் பிளம்புகள் நாலாபக்கமும் சிதறிப் பறக்கின்றன. கடற்படையினரின் வெவ்வேறு வகை தொகையான ஆயுதங்களுடனும் கடற்கலங்களுடனும் சமநிலையற்ற ஒரு பெரும் போர் கடல்மடியில் இடம்பெறுகின்றது. இதன் விளைவாக கடற்புலி அணியினர் வெற்றிகரமான ஒரு தோல்வியைத் தழுவி, தாயக விடுதலைக்காகக் கடல் நடுவே தம் உயிர்களை அர்ப்பணிக்கின்றனர்.

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்புத் தளபதி அருணா எரிகாயங்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட, கடற்புலிகளின் அணி பாரிய ஓர் இழப்பைச் சந்திக்கின்றது. அனுபவம் முதிர்ந்த ஆரம்பகால கடற்புலிகளின் அணியினர் உட்பட 16 வேங்கைகள் வீரமரணத்தைச் சந்திக்கின்றனர். 2ம் லெப் . துரைக்குட்டி, 2ம் லெப். ரங்கா, 2ம் லெப். அலிப், வீரவேங்கை கார்த்திக், வீரவேங்கை காந்தன், வீரவேங்கை ஞானி, வீரவேங்கை தெய்வா ஆகிய 7 கடற்புலிகளின் மாவீரர்களுக்கும் ஏனைய போராளி மாவீரர்களுக்கும் தமது வீரவணக்கத்தைச் செலுத்திய கடற்புலிகளின் அணியினர், என்றோ ஒருநாள் இழப்புக்களை ஏற்படுத்திய பகைவனை, அதேகடலில் பழிவாங்குவோம் என்ற உறுதியுடன் மீண்டும் தம் பணிகளைத் தொடருகின்றனர்.

மேற்படி சம்பவம் தோல்வியிலும் வெற்றி உண்டு என்பதுடன், சமநிலையற்ற ஒரு போரில் ஈடுபடுவது ஒரு தவறான செயல் என்ற போரியல் த்ததுவத்தையும் கடற்புலிகளின் அணியினருக்கு எடுத்துக்காட்டி நின்றது. இன்று போல் அன்று கடற்புலிகளின் பலம் காணப்பட்டிருந்திருக்குமாயின் ஓரளவிற்காயினும் சமர் நடந்த இடத்திற்கு விரைந்து உதவி வழங்கி இருந்திருக்கலாம். சகல வடிவங்களிலும் நவீன வசதிகளைக் கொண்டு விளங்கும் ஒரு நாட்டின் கடற்படைக்கு ஈடாக, வசதிகளை மேற்கொள்வது சாதாரண ஒரு போராட்டக் குழுவிற்கு இயலுமானதொன்றல்ல. இந்தவகையில் கடற்புலிகள் அணியினர் தொடர்ந்தும் தம் மனோ வலிமையை முக்கிய ஆயுதமாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில், 1986ம் ஆண்டு யூன் மாதத்தின் 18ம் நாள் மீண்டும் அதே கடற்பரப்பில் கடற்புலிகளின் அணியொன்று எதிரியின் வேட்டைக்கு இரையாக்கப்படுகின்றது.

வங்கக் கடலின் அலைகள் சிந்து பாடி அலைமோதும் குடாப்பரப்பை, சொந்தமாகக் கொண்ட தமிழீழக் கரையோரப் பட்டினங்களுள் வல்வெட்டித்துறையும் ஒன்று. தமிழீழ மண்ணின் விடிவைத் தன் தலைமேல் சுமந்து நிற்கும் தானைத்தலைவன் பிறந்து, தவழ்ந்து, நடந்த சொந்த மண்ணும் இதுவாகும். கரையோரங்களில் நீண்டு வளர்ந்த முருகைக்கற் பாறைகளை உடைத்து ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்ட ‘வான்கள்’ இப்பிரதேசத்தில் அமைந்த ஆதிகோயில், மதவடி, ரேவடி, குச்சம், கொத்தியால் ஆகிய பகுதிகளில் கடற் தொழிலில் ஈடுபடும் கலங்களுக்கு வழிசமைத்து நிற்கின்றன.

அன்று கொத்தியால் ‘வான்’ பகுதி என்றுமில்லாது களைகட்டி நிற்கின்றது. தமிழ்நாட்டில் வேதாரணியத்தில் அமைந்திருந்த கடற்புலிகளின் துறைக்குச் செல்லவேண்டிய படகொன்று இக் கொத்தியால் வான் பகுதியில் இருந்து தான் புறப்படுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்கின்றது. தரை நெடுகிலும் மக்கள் கூட்டம் கடலில் எதிரியின் கப்பல்களால் எந்த ஒரு ஆபத்தும் தம்மைக் காத்து நிற்கும் போராளிகளுக்கு ஏற்படக்கூடாது என்று தம் குல தெய்வங்களை வேண்டி நிற்கின்றனர்.

23’ நீளமுடைய வண்டி ஒன்றில் மூன்று 55 குதிரைவலுக் கொண்ட இயந்திரங்கள் பூட்டப்படுகின்றன. இவ்வண்டிக்குப் பாதுகாப்பாக ஒரு G.P.M. இ இரண்டு G3 றைபிள்களுடன், லோவும் றைபிள் கிறனைற்றும் வழங்கப்படுகின்றன. கொத்தியால் பகுதியிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவிலுள்ள ரேவடிப் பகுதியில் ஓங்கி உயர்ந்து அமைந்திருந்த இரும்பினாலான கோபுரம் ஒன்றின் உச்சியிலிருந்து கடல்மேல் எதிரிகளின் நடவடிக்கைகளை அவதானித்த வண்ணம் விடுதலைப் புலிகள் நிற்கின்றனர்.

செக்கர் வானத்தில் செந்நிறப் பிளம்பாகச் சூரியன் அடிவானத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். மக்களிடமும் நண்பர்களிடமும் விடைபெற்றுக் கடற்புலிகளும் பயணிகளும் வரிசையில் சென்று வண்டியின் வலப்பக்கத்தால் ஏறுகின்றனர். (இது வழி முறை வந்த பழக்கங்களில் ஒன்றாகும்) அந்த வண்டியில் செல்லும் அத்தனை பேர்களும் வல்வைவாழ் மக்களுக்கு புதியவர்களல்ல.

அமைதியான வான் வழியாக முருகைக்கற் பாறைகளைத் தாண்டிப்படகு மும்முறை வட்டமிட்டு உயர்ந்த கடற்பரப்பை நோக்கித் தன் வழிப்பயணத்தை தொடர்ந்தபோதும், இயந்திரங்களின் உறுமல்கள் பேரோசையைக் கிளப்பி நிற்க, வண்டியின் அணியம் மேல்நோக்கி உயருகின்றது. கரையில் நின்று வழியனுப்பியவர்களின் கைகளும், வண்டியில் சென்றவர்களின் கைகளும் அன்பின் அடையாளமான அசைவுகளை நிறுத்திக் கொள்கின்றன.

அதேவேளையில் அந்த வண்டிக்கும் அதில் சென்ற 10 விலை மதிப்பற்ற உயிர்களுக்கும் சிறிலங்காவின் கடற்படையின் ரோந்துக்கப்பல்கள் காலன் உருவில் கடல்வழி வந்து கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை. வெடியோசையுடன் பாரிய வெளிச்சம் ஒன்றைத்தான் கடல் நடுவில், கரையில் நின்ற மக்கள் காணக்கூடியதாக இருந்தது. அதேமக்களின் கண்முன் பிரகாசமாகத் தெரிந்த ஒளி சிறிது சிறிதாக மங்கி மறைந்து போய் விடுகிறது. இந்த நிகழ்வில் கடற்புலிகளின் அணியைச் சேர்ந்த லெப். ரவியப்பா, லெப். சித்தப்பா, 2ம் லெப். மணிமாறன், 2ம் லெப். ஆனந்தப்பா, வீரவேங்கை சேரன், வீரவேங்கை சியாப், வீரவேங்கை சூரி, வீரவேங்கை தேவராஜ் ஆகிய எண்மருடன், அதில் மேலதிகமாகச் சென்ற நாட்டுப்பற்றாளர் பிக்கப் ரவியும் அவனுடன் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக இந்தியாவிற்குக் கொண்|டு செல்லப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருத்தியும் அவரது பாதுகாவலரும் மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வேதாரணியத்தின் கரையில் கடற்புலிகள் காவல் காத்து நிற்கின்றனர். அவ்வேளையில் இக்கரையை அடுத்து நடைபெற்ற நிகழ்வைப்பற்றிய செய்தி அக்கரையில் நின்றவர்கட்குத் தெரியப்படுத்தப்பட்டு, கடல்மேல் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப் பணிக்கப்படுகின்றது. தேடுதல் மேற்கொண்டதன் பயனாக மூன்று நாட்களின் பின் மணிமாறனுடைய உடல் கடல்மடியில் எடுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் தகனம் செய்யப்படுகின்றது. வண்டியைப்பற்றிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக, பலம்கூடிய எதிரியின் செயலால், பல அனுபவம் மிக்க கடலோடிகள் வீரமரணத்தைத் தழுவிய நேரத்திலும் கடல்கடந்த தம் சேவைகளை அணியினர் ஓய்வு உறக்கமின்றி தொடர்ந்தும் மேற்கொள்ளுகின்றனர்.

பருவப்பெயர்ச்சிக் காற்றுக்கள், கடல்மீது எதிரியின் கண்காணிப்பு நிலையின் தன்மைகள் மேற்கொள்ளப்படும் களங்களின் தேவை, ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து வரும் கடற்புலிகளின் வண்டிகள் தமிழீழத்தில் தம் துறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும், இயல்பானதாகும். இவ்வடிவில் மன்னார் பிரதேசத்தில் வங்காலை என்ற கிராமமும் இவர்களின் துறைகளில் ஒன்றாகச் செயற்பட்டு வந்தது.

அன்றொருநாள் 1986ம் ஆண்டு ஆகஸ்ற் மாதத்தின் முற்பகுதியில் ராமேஸ்வரத்தை அண்டிய வில்லூண்டி எனும் இடத்தில் புலிகளின் படகொன்று இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட சம்பவம் ஒன்றும் வரலாற்று வரிசையில் குறிப்பிட வேண்டியதொன்றாகும்.

இந்த வண்டியில் இந்திய மண்ணில் தம்பயிற்சிகளைப் பெற்ற பெண் போராளிகளின் முதல் அணியைச் சேர்ந்த 10 பெண் போராளிகளோடு கடற்புலி அணியைச் சேர்ந்த பழனி, ரகுவப்பா உட்பட ஐவர் தம் கடற்பயணத்தை மேற்கொண்டனர். இவர்களின் வரவை எதிர்பார்த்து லெப். கேணல் விக்ரர் வங்காலையின் கடலோரம் தன் நண்பர்களுடன் காத்து நிற்கின்றார். ஆனால் வந்த வண்டியின் மூன்று இயந்திரங்களும் தாழ்வுப்பாட்டின் கரையிலிருந்து மூன்றுமைல் உயரத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்டு செயலற்று விடுகின்றன. உடனே கடற்புலிகளில் இருவர் நீரில் இறங்கி கத்தியின் துணைகொண்டு வலைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஆனாலும் வேகமாக வீசிய சோழகக் காற்றால் மேலெழுந்த பாரிய அலைகள் வண்டியில் நீரை நிரப்ப, வண்டி நீரில் அமிழ்ந்து போகத் தொடங்குகின்றது. ஆனாலும் அதிலிருந்த கடலின் மைந்தர்கள் தமது துணிகரமானதும், விவேகமானதுமான செய்பாடுகளின் பயனாக, கிடைக்கப்பெற்ற சிறிய மிதவைகளுடன் எதுவித ஆபத்துமின்றி 10 பெண் போராளிகளையும் கரை சேர்க்கின்றனர். இதே பெண் புலிகளின் வரிசையில் வந்த இன்றைய கடற்புலிகளின் மகளிர் அணி இன்று கடல்மீது எதிரியுடன் போரில் ஈடுபடுவதையும் கரும்புலிகளாகி எதிரியின் படகுகளை இடித்துச் சிதறடிப்பதையும் அங்கையற்கண்ணியின் நீரடி நீச்சல் பிரிவினர் அதிபாரக் குண்டுகளைக் கொண்டு சென்று, சிறீலங்காவின் கடற்படைத் துறைமுகங்களின் மையப்பகுதியில், நங்கூரமிட்டுள்ள கடற்கலங்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகளையும் பார்க்கும் பொழுது கடற்புலிகளின் வேகமான வளர்ச்சிக்கு, இவை சான்று பகரக்கூடியதாக நிற்கின்றன.

கடலிலே காவியங்கள் தொடரும்………………

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

SHARE