மட்டக்களப்பில் 35,000 சிங்கள மக்களை மீண்டும் குடியேற்றும் வரை தான் ஓயப்போவதில்லை -சுமனரத்தன தேரர்

288

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது.

13631475_655077111307372_7860464611342410084_n

மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டடத்தை உடைத்துவிட்டு ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரர் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரை அழைத்து கூட்டமொன்றை நடாத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை கடுமையாக விமர்சித்த அம்பிட்டியே சுமனரத்தன தேரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷவை புகழ்ந்துபேசியுள்ளார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியை விமர்சித்து முன்னாள் ஜனாதிபதிக்கு புகழ்பாடும் பிக்கு ஒருவர் அழைத்தவுடன் அவரின் கூட்டத்திற்கு பாதுகாப்பு படையினர் சென்றமை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அம்பிட்டியே சுமனரத்தன தேரரின் செயற்பாடுகளுக்கு பயந்தே மட்டக்களப்பில் உள்ள பாதுகாப்பு படையினர் அவரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்துவருவதுடன் பாதுகாப்பு படையினருக்கும் தேரருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதிக்கும் படைத்தரப்புக்கும் இடையிலான பிளவை எடுத்துக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பாதுகாப்பு படையினரின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதுடன் மட்டக்களப்பில் இன்றும் மகிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சி அதிகாரமே நடைபெறுகிறது என்ற தோற்றப்பாட்டையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

இராணுவத்திற்கு ஆதரவாக கிழக்கு மாகாண முதலமச்சரை விமர்சித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்த அம்பிட்டியே சுமனரத்தன தேரர் இராணுவத்திற்கு விஸ்வாசம் உடையவராகவும் அரசாங்கத்திற்கு எதிரானவராகவும் தன்னை அடையாளம் காட்டியுள்ளமையானது இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரானவர்களின் ஆட்சி அதிகாரமும் ஒரு பகுதியில் நடைபெறுகின்றது என்பதையே வெளிக்காட்டியுள்ளது.

இதேநேரம் பாதுகாப்பு படையினரை சந்தித்துவிட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மட்டக்களப்பில் இருந்த 35,000 சிங்கள மக்களை மீண்டும் குடியேற்றும் வரை தான் ஓயப்போவதில்லை என்றும் தனது உயிரைப்பணயம் வைத்து தான் சிங்கள மக்களை எல்லைகளில் குடியேற்றிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE