தமிழ் மொழியை புறக்கணிக்கும் தமிழ் தலைவர்களால் சிங்கள மயமாகிவரும் யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்கள் – இரா.துரைரத்தினம்

364

 

Clash_Jaffna_Univ_01யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் பல்வேறு மட்டங்களில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.   சிங்கள ஊடகங்கள் மற்றும் இனவாத போக்குடைய சிங்கள அரசியல்வாதிகள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி தமது வழமையான இனவாதத்தை கக்க ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் தரப்பிலும் சிலர் இனவாதத்தை மட்டுமல்ல பிரதேசவாதத்தையும் கிளப்பும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கேலி செய்யும் வகையிலும் எழுதிவருகின்றனர்.

batticaloa-university-4
பல்கலைக்கழகங்களில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது இதுதான் முதல் தடவையல்ல. பல தடவைகளில் தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழங்களில் மட்டுமல்ல தமிழர்கள் பெரும்பான்மையான வாழும் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களையும் பல்கலைக்கழக அதிகாரிகளையும் சிங்கள மாணவர்கள் தாக்கியிருக்கிறார்கள்.

சம்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள்,

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் ஒலிப்பரப்பியதற்காக கிழக்கு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தனது முகநூலில் பதிவேற்றம் செய்ததற்காக தமிழ் மாணவர் ஒருவர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மாணவர்கள் சேர்ந்து தமிழ் மாணவர்களை தாக்கினார்கள். இதில் 10க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் காயமடைந்தார்கள்.
கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தமிழ் மாணவர்கள் தங்கியிருந்த போது அங்கு நுழைந்த சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் தமிழ் மாணவர்களே பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களை எல்லாம் கண்டு கொள்ளாத சிங்கள ஊடகங்களும் அரசியல் வாதிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனத்தை ஆடிய சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என பிரசாரம் செய்து வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் தகவல்களின் படி இந்த சம்பவத்தில் சுமார் 40 தமிழ் மாணவர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இது தொடர்பாக முறைப்பாடு செய்தால் புலனாய்வு பிரிவினரின் விசாரணை போன்ற சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் என்ற காரணத்தால் அவர்கள் தாங்கள் காயமடைந்த விடயங்களை வெளிப்படுத்தாது தவிர்த்து கொண்டனர்.

இந்த தாக்குதல்களின் முன்னணியில் நின்று ( குடும்பிகளுடன் ) தாக்குதல் நடத்திய நான்கு சிங்கள மாணவர்களும் பல்கலைக்கழகத்தை விட்டு இவ்வாண்டு வெளியேறியவர்கள். சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் இணைந்து வேலை செய்பவர்கள். எனவே இந்த தாக்குதல்களின் பின்னணியில் வேறு கரங்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது.  இங்கே சிங்கள மாணவர்களா அதிகம் காயமடைந்தார்கள் அல்லது தமிழ் மாணவர்களா அதிகம் காயமடைந்தார்கள் என்று ஆராய்வது நோக்கமல்ல.  அல்லது கண்டிய நடனமா நாதஸ்வரமா யாழ்ப்பாண பல்கலைக்கழக வரவேற்பில் இடம்பெற வேண்டும் என்ற வாதத்தை செய்வதும் நோக்கமல்ல.

தமிழர்களின் பாரம்பரிய கலையான கூத்திலிருந்து தான் கண்டிய நடனம் உருவாகியது என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் சி.மௌனகுரு அடிக்கடி கூறியதை கேட்டிருக்கிறேன். பேராசிரியர் சரத் சந்திரவும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கூத்து ஆட்டத்தை ஒத்ததாகவே கண்டிய நடனம் இருப்பதையும் நாம் அவதானிக்கலாம். சிங்களவர்கள் தங்கள் பாரம்பரிய கலை என கூறும் கண்டிய நடனம் தமிழர்களின் பாரம்பரிய கலையான கூத்திலிருந்துதான் உருவானது. கண்டிய நடனத்தை பார்த்தால் மட்டக்களப்பில் ஆடப்படும் வட்டக்களரி கூத்தை ஒத்திருப்பதை அவதானிக்கலாம்.

கண்டிய நடனத்தையோ புத்த சமயத்தையோ தமிழர்கள் ஒதுக்கியது கிடையாது. ஆனால் தமிழர்களை அடக்குவதற்காக கண்டிய நடனத்தையும் புத்தர் சிலைகளையும் திணிக்க முற்படும் போதுதான் அவற்றில் வெறுப்பு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகள் தோன்றுவதற்கு காரணம் என்ன, இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அல்லது பல்கலைக்கழக பேரவை சரியாக கையாண்டதா என்பதை ஆராய வேண்டும்.

இலங்கையில் 16 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஏனைய 13 பல்கலைக்கழங்களும் தென்னிலங்கையில் உள்ளன.
1974ஆம் ஆண்டு வடக்கு கிழக்கின் முதலாவது பல்கலைக்கழகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண மாணவர்களின் நலனுக்கு என 1981ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது ( பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது)
1990ல் தமிழ் முஸ்லீம் முரண்பாடு உச்சக்கட்டத்திற்கு சென்று கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து முஸ்லீம் மாணவர்கள் வெளியேறியதை தொடர்ந்து தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் தமிழ் மொழி மூல மாணவர்களை பிரதானமாக கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

ஏனைய 13 பல்கலைக்கழங்களும் உத்தியோகபூர்வமான வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு எந்த இசையை அல்லது எந்த நடனத்தை பயன்படுத்துவது என்ற வரையறையை வகுத்திருக்கின்றன. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களின் பாரம்பரிய நடனமான கருதப்படும் கண்டிய நடனம் இடம்பெறும். அதனை அந்தந்த பல்கலைக்கழக பேரவைகளும் அங்கீகரித்திருக்கின்றன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவு முக்கியமாக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் முயற்சியால் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் கூத்து கலைகளை அடிநாதமாக கொண்டு இன்னியம் என்ற இசை வடிவத்தை உருவாக்கினார். பறைமேளம், உட்பட தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வைத்து இது உருவாக்கப்பட்டிருந்தது. இந்த இன்னிய இசையே கிழக்கு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ வரவேற்புகளின் போது பட்டமளிப்பு விழாக்களின் போது இடம்பெற வேண்டும் என்று கிழக்கு பல்கலைக்கழக பேரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது அல்லது உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சிகளின் போது நாதஸ்வரமோ கண்டிய நடனமோ இடம்பெற முடியாது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது சிங்கள மாணவர்கள் அதிகமாக இருந்தாலும் வரவேற்பின் போது கண்டிய நடனம் இடம்பெற வேண்டும் என கோர முடியாது. கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் இன்னியம் இசைக்கு மட்டும் தான் உண்டு. தமிழரின் அடையாளத்தை கண்டறிந்து பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்த பெருமை பேராசிரியர் மௌனகுருவையே சாரும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலம் தொடக்கம் நாதஸ்வரம் தான் இடம்பெற்று வருகிறது. எனவே அந்த பாரம்பரியத்தை மாற்ற முடியாது என வாதிடலாம். நாதஸ்வரம் ஈழத்தமிழர்களின் கலைவடிவமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. சரி நாதஸ்வரம் தமிழர்களின் கலைவடிவம் தான் என வைத்துக்கொண்டாலும் அந்த இசைதான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு மற்றும் உத்தியோகபூர்வ வரவேற்பில் இடம்பெற வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. நான் அறிந்தவரை அவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மிகப்பெரிய பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்ட தமிழர்களின் சொத்தாக திகழும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கான இசை வடிவத்தை ஏன் உருவாக்கவில்லை?
எத்தனையோ ஆண்டுகளின் பின் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகம் தமிழர்களின் இசை வடிவம் ஒன்றை தனித்துவமாக உருவாக்கி பல்கலைக்க பேரவையின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

தமக்கான இசை வடிவத்தை தனித்துவமாக உருவாக்க முடியாவிட்டாலும் யாரோ அன்னியர்களின் இசைவடிவமான நாதஸ்வரத்தையாவது பல்கலைக்கழக பேரவையில் முன்வைத்து அதற்கான அங்கீகரத்தை பெற்றிருக்கிருக்கலாம் அல்லவா, அவ்வாறு அங்கீகாரம் பெற்றிருந்தால் கண்டிய நடனம் என்ற பிரச்சினைக்கு இடமிருக்காது.

யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்திலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்களை நடத்துவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.

முதலாவது சிங்கள மாணவர்களின் அதிகரிப்பு.

தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென்னிலங்கை பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இப்போது சிங்கள மாணவர்களே அதிகமாக உள்ளனர்.  கலைப்பீடத்தை தவிர ஏனைய அனைத்து பீடங்களிலும் சிங்கள மாணவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு 80வீத சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். முகாமைத்துவ பீடத்திற்கு 70வீத சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது போன்றுதான் விவசாய பீடத்திற்கு 65வீதத்திற்கு மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள்.

கலைப்பீடம் மட்டும் தமிழ் மொழி மூலம் நடத்தப்படுவதால் அங்கே அனைவரும் தமிழ் முஸ்லீம் மாணவர்களாக உள்ளனர். இப்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் 55வீதத்திற்கு அதிகமாக இருக்கிறார்கள்.

கலைப்பீட மாணவர் பேரவையை தவிர ஏனைய பீடங்களின் மாணவர் அமைப்புக்கள் சிங்கள மாணவர்களின் கைகளில் தான் உள்ளன. எதிர்காலத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவை சிங்கள மாணவர்களின் கைகளுக்கு சென்று விடும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றில் 70வீதத்திற்கு மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள், சட்ட பீடத்தில் 65வீதத்திற்கு மேற்பட்டவர்கள் சிங்கள மாணவர்கள். கலைப்பீடத்திற்கு மட்டும் 100வீதம் தமிழ் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு பிரதான காரணம் ஆங்கில மொழி மூல கல்வியை அறிமுகப்படுத்தியதே ஆகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆரம்பகாலத்தில் முதலாம் இரண்டாம் வருடங்கள் தமிழ்மொழி மூலம் நடத்தப்படும். இதன் பின் இறுதி வருடங்கள் ஆங்கில மொழி மூலம் நடத்தப்படும். ஆனால் இப்போது முதலாம் வருடத்திலிருந்து ஆங்கில மொழி மூல கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதால் மிக இலகுவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் வருகிறார்கள்.
தென்னிலங்கையில் முதலாம் இரண்டாம் வருடங்கள் சிங்கள மொழி மூலமே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குமாரகுருபாரன் போன்ற தமிழ்தேசியம் பேசும் பலர் பணியாற்றுகின்றனர். ஆனால் அவர்கள் தான் தமிழ்மொழி பயன்பாடற்ற மொழி என கருதி ஆங்கில மொழி கல்வியை கொண்டு வந்திருக்கின்றனர்.

தமிழ் மொழிக்கு சமஉரிமை என பேசுவோர்தான் தமிழை புறக்கணித்து நடக்கின்றனர்.

அண்மையில் கிளிநொச்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வந்திருந்தார். அங்கு வந்திருந்தவர்களில் நூறுவீதமானவர்களும் தமிழ் மக்கள் தான். மைத்திரிபால சிறிசேனா சிங்களத்தில் உரையாற்றினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அந்த கூட்டத்தில் ஆங்கிலம் பேசுவோர் யாரும் இல்லை, அந்த மக்களுக்காக பேசுவதாக இருந்தால் தமிழில் பேசியிருக்க வேண்டும். மைத்திரிபால சிறிசேனாவுக்காக பேசுவதாக இருந்தால் சிங்களத்தில் பேசியிருக்க வேண்டும்.
கிளிநொச்சியில் சம்பந்தன் ஆங்கிலத்தில் யாருக்காக பேசினார்?

சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் பிரதேசங்களுக்கு தங்கள் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது சிங்களத்தில் மட்டும் தான் உரையாற்றுவார்கள். ஆனால் தமிழ் பிரதிநிதிகள் மட்டும் தமிழ் மக்கள் மத்தியில் ஆங்கிலத்தில் உரையாற்றுவார்கள்.

அதேபோன்று யாழ்ப்பாணம் முகாமைத்துவ ஒன்றியம் என்ற அமைப்பு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். அந்த கூட்டத்தில் கனடா பாராளுமன்ற உறுப்பினரும் கனடா தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான ஹரி ஆனந்தசங்கரி ஆங்கிலத்தில் தான் உரையாற்றினார்.
கனடா தமிழர் பேரவை தமிழர் விடுதலைக்காக போராடுவதாக கூறும் அமைப்பு. அந்த அமைப்பின் பிரதிநிதி 100வீதம் தமிழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏன் ஆங்கிலத்தில் உரையாற்றினார்?
இவர்கள் தமிழ்மொழி பயன்பாடற்ற மொழி என கருதுகிறார்களா?

யாழ். முகாமைத்துவ ஒன்றியம் போன்றவர்கள் ஆங்கிலத்தில் இவ்வாறான கூட்டங்களை நடத்தவதற்கு இன்னொரு காரணம் பெரும்பாலானவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதுதான்.

பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களின் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம் வெளிநாட்டு மோகமாகும்.

கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசைகளையே வளர்த்துக் கொள்கின்றனர். சிங்கள மக்களிடம் வெளிநாட்டு மோகம் மிகக்குறைவு. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் அனுப்பும் பணமும் வாய்ப்பு வசதிகளும் கல்வியில் நாட்டம் கொள்ளாது வேறு திசைகளில் செல்ல முற்படுகின்றனர்.
இதனால் பல்கலைக்கழகங்களுக்கு திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து வருகிறது.

ஓவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களை தெரிவு செய்வது தொடக்கம் எத்தனை மாணவர்களை அனுமதிப்பது என்பது வரை அனைத்து விடங்களையும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவே தீர்மானிக்கிறது.

அனுமதிகள் தீவளாவிய திறமை அடிப்படையில் 40வீதமும் மாவட்ட திறமை அடிப்படையில் 55வீதமும் மிகுதி 5வீதமாக விசேட ஒதுக்கீடாக கல்வியில் பின் தங்கியதாக அடையாளம் காணப்பட்ட 16 மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்படும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் போன்றன தமிழ் அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற அக்கறை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு இருக்கப்போவதில்லை. அந்த அடையாளங்களை அழித்து விட வேண்டும் என்பதில்தான் அவர்கள் குறியாக இருப்பார்கள்.

இந்த விடயத்தில் அரசியல் ரீதியான அழுத்தங்களின் ஊடாகவே யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் கூடுதலான தமிழ் மாணவர்களை அனுமதிக்க செய்ய முடியும்.

நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் கிளிநொச்சியில் அந்த மக்கள் முன் ஆங்கிலத்தில் பேசிவிட்டு செல்லும் சம்பந்தன் போன்றவர்களுக்கு அல்லது சட்டபீடத்தை முழுமையாக ஆங்கில மொழி மூலமாக்கி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும் குமரகுருபரன் போன்றவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகமோ அல்லது கிழக்கு பல்கலைக்கழகமோ சிங்களமயமாவதை பற்றி எங்கே அக்கறை இருக்கப்போகிறது.

SHARE