பெயரளவிலேயே மாகாணசபைக்கான அதிகாரம்-கிழக்கு முதல்வர் கவலை

256
மாகாண சபைக்கான அதிகாரங்கள் என்பது பெயரளவில்  மாத்திரமே உள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தம்மால் காத்திரமான விடயங்களை செய்ய முடியாத நிலையே காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கவலையுடன் தெரிவித்துள்ளார்..
மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வும் அதற்கான தீர்வும் என்ற தொனிப்பொருளில் இரு நாள் மாநாடு இன்று (சனிக்கிழமை) நீர்கொழும்பு ஹெரிடேன்ஸ் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றவேண்டும்.
வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக கல்வியைப் பிற்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர். இது தொடர்பில் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த வயதெல்லை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரியபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பதில் கிடைத்தது. அவ்வாறாயின் மாகாண சபைக்கான அதிகாரங்கள் என்பது பெயரளவில் மாத்திரமே காணப்படுகின்றது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த மாநாட்டில் இலங்கையின் சகல மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
SHARE