வடமராட்சி கிழக்கில் அபிவிருத்தி திட்டமாம்- விக்னேஸ்வரன்

290

 

vadamaradchi east 6வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணி நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன.

பல தடவைகள் மருதங்கேணியில் நடமாடுஞ்சேவையை நடாத்த வேண்டும் என்று நாம் திட்டமிட்டிருந்தாலும் ஏதோ தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது வருகை தடைப்பட்டுக் கொண்டே வந்தது.

இன்று எமது பலநாள் எதிர்பார்ப்பு பூரணப்படுத்தப்பட்டதில் பூரிப்பு அடைகின்றேன். பருத்தித்துறையில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசத்தில் மருதங்கேணி சரி மத்தியில் அமைந்துள்ளது.

பல வருடகாலமாக இந்தப் பிரதேசம் கைவிடப்பட்ட ஒரு நிலையில் இருந்து வந்துள்ளமை நாம் யாவரும் அறிந்ததே.

இதன் காரணத்தினால் தான் எமது வடமாகாணசபை பல விதமான அபிவிருத்தித் திட்டங்களை மருதங்கேணிப் பிரதேசத்தில் முன்னெடுக்க முயற்சி செய்து இன்று வெற்றியுங்கண்டுள்ளது.

சுமார் 67 மில்லியன் வரையிலான நிதியத்தை எமது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடைப்(Pளுனுபு) பணத்தில் இருந்து நாம் ஒதுக்கி வைத்து மணல்காடு கடற்கரையில் சுற்றுலா அபிவிருத்திக்காக பல நிர்மாணங்களைக் கட்டி முடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

பல கிராமப் பாடசாலைகள், வகுப்பறைகளுக்குப் பணம் ஒதுக்கியுள்ளளோம்.

நாகர் கோயில், குடத்தனை, உடுத்துறை போன்ற இடங்களில் வகுப்பறைகளையும், தாளையடியில் நூலகக் கட்டிடத்தையும், உடுத்துறையிலும் மாமுனையிலும் விளையாட்டு மைதானங்களையும்,மேலும் மணல்காடு, உடுத்துறை போன்ற கிராமங்களில் சுகாதாரக் குடிநீர் வசதி போன்ற சேவைகளுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க முன்வந்துள்ளோம்.

விளையாட்டுக்கான அனுசரணைகளை ஏற்படுத்த மருதங்கேணி விளையாட்டுத்திடலின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பனில் மருந்தக அனுசரணைகளை மேம்படுத்த பணம் இவ்வருடத்தில் ஒதுக்கியுள்ளோம், வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முள்ளியானில் வைத்தியர்கள் வதிவிடம் கட்டப் பணம் ஒதுக்கியுள்ளோம். மருதங்கேணி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுசரணைகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

இப் பிரதேச மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலாக உள்ளதால் பல நடவடிக்கைகள் இது சம்பந்தமாகவும் எடுத்து வருகின்றோம்.

மருதங்கேணியில் கருவாட்டுத் தொழிற்சாலை நிறுவவும், இங்குள்ள கடலேரியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

இங்குள்ள தெருக்கள் பல காலமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்ததாலும், போக்குவரத்து சீரற்ற நிலையில் இருந்து வந்ததாலும் நாம் பல தெருக்களை அடையாளம் கண்டு அவற்றைச் சீர்செய்ய பணம் ஒதுக்கியுள்ளோம்.

மாமுனை -கட்டைக்காடு தெரு அமைக்க ஒன்பது மில்லியன்களும், மருதங்கேணி – ஆழியவளை தெருவைத் திருத்த 6 மில்லியன்களும் ஒதுக்கியுள்ளோம்.

மேலும் மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்புறத்தில் பஸ்தரிப்பு நிலையம் கட்டவும் பணம் ஒதுக்கியுள்ளோம்.

இவற்றை விட “அண்மையில் உள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அம்பன், ஆழியவளை, உடுத்துறை, தாளையடி, செம்பியன்பற்று, கேவில், மாமுனை, வெற்றிலைக்கேணி, நாகர்கோயில், மணற்காடு, மருதங்கேணி போன்ற இடங்களில் பாடசாலைகள் பல அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

உலக வங்கி நிதியத்தின் கீழ் தெருக்கள் பல அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மருதங்கேணி – ஆழியவளை வீதி, மாமுனை – கட்டைக்காடு வீதி, வெற்றிலைக்கேணி – விநாயகபுரம் வீதி, மேலும் கட்டைக்காடு குடியிருப்பு வீதிகள், வதிரயான் குடியிருப்பு வீதி, உடுத்துறை குடியிருப்பு வீதி, நாகர் கோயில்சந்தி – கடற்கரை வீதி போன்ற பல வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டு அவற்றிக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

மொத்தமாக உலகவங்கி சுமார் 38 கிலோமீற்றர் தெருக்களைப் புனருத்தாபனம் செய்ய முன்வந்துள்ளது.

இவற்றைவிட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை 127.5 மில்லியன் பணத்தை உங்கள் அபிவிருத்திக்காக தந்துதவ முன்வந்துள்ளது.

உங்கள் குடிநீர்ப் பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனைகள், கிராமக் கட்டமைப்புக்கள், விவசாயம், மீன்பிடித் தொழில் போன்ற பல பிரச்சனைகளைக் குறித்த நிதியம் தீர்க்க இருக்கின்றது.

ஆகவே மருதங்கேணிப் பிரதேசம் எமது கவனிப்புக்கும்,கூர் நோக்குக்கும் உள்ளாகியுள்ளது என்றால் அது மிகையாகாது.

இன்று இந்த குறைநிவர்த்தி நடமாடும் சேவையை இங்கு நடாத்துவதால் எம்மைத் தேடி நீங்கள் வராது உங்களைத்தேடி எங்களை வரவழைத்துள்ளோம்.

உங்கள் பலகால குறைபாடுகள் இன்றுடன் தீர்வு காண்பன என்பது எமது எதிர்பார்ப்பு. பல திணைக்களங்கள், அமைச்;சுக்கள் தமது அமைச்சர்கள் அலுவலர்களுடன் இங்குமுகாமிட்டுள்ளனர்.

இன்று இங்கு உடனேயே முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விடயங்கள் எம்மால் கருத்துக்கு எடுக்கப்பட்டு மிக விரைவில் அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று எம்மால் கூறமுடியும்.

மத்திய அரசாங்கத்துடன் பேசவேண்டிய விடயங்களையும் நாம் உரியவாறு நடவடிக்கை எடுத்து ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முழுமையுடன் முயற்சிப்போம் என்று கூறிவைக்கின்றேன்.

உங்கள் யாவரதும் பலகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கே இந்த குறைநிவர்த்தி நடமாடும் சேவை பல இலட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் முழு நன்மைகளையும் பெற முயற்சிப்பது உங்கள் பொறுப்பு. உங்கள் குறைகளுக்குப் பதில் காண்பது எங்கள் பொறுப்பு. இன்றைய தினம் எமது யாழ் அரசாங்க அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் யாழ் மாவட்டச் செயலகமும் சேர்ந்து இந்த கைங்கரியத்தில் ஈடுபடுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த சூழ்நிலை இப்பொழுது இல்லை. எம்மால் ஒன்றிணைந்து ஒருங்கு சேர்ந்து எமது மக்கள் நன்மை கருதி எமது சேவைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக உள்ளது.

நாம் யாவரும் எமது மக்கட் சேவையில் ஈடுபட்டுள்ளோம் என்ற எண்ணம் மேலோங்கினால் எம்மால் எந்த இடர் வரினும் அவற்றைத் தாண்டி முன்செல்ல முடியும்.

எமக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கும் யாழ் அரச அதிபருக்கும் அவரின் அலுவலர்களுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக! எம் யாவருடைய சந்திப்பால் இந்தப் பிரதேசம் முற்றிலும் அபிவிருத்தி அடையவும் மக்கள் மகிழ்வுடன் வாழவும் இறைவன் வழியமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.vadamaradchi east 6vadamaradchi east 1vadamaradchi east 2vadamaradchi east 3vadamaradchi east 4vadamaradchi east 5vadamaradchi east 7vadamaradchi east 8vadamaradchi east

Readers Comments (0)

SHARE