தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் அமெரிக்காவின் பங்களிப்பு அவசியம்: சம்பந்தன்

310

 

இரண்டாம் இணைப்பு

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் தாம் சுட்டிக் காட்டியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும், அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் மாலை 4.50 மணி தொடக்கம் 6.00 மணி வரையில் யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இதன் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்மந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் நடைபெற்றிருக்கும் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடயத்தில் அமெரிக்கா தொடர்ச்சியானபங்களிப்பை செலுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் 2012ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஒத்ததான தீர்வினை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், காணாமல் போனவர்கள் விடயம், மீள்குடியேற்ற விடயம், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு விடயத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பு எமக்கு தொடர்ச்சியாக வேண்டும் என்பதை கேட்டிருக்கின்றோம் என்றார்.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தரசா, சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனும் கலந்துகொண்டனர்.

முதலாம் இணைப்பு

சம்பந்தனை சந்தித்துள்ள அமெரிக்க குழு!

இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் தலமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளனர்.

 

குறித்த சந்திப்பு, யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் மாலை 4.50 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

13925182_1574500936185875_2867606085632456013_n 13939397_283716135334395_676669240139523679_n 14054046_283716028667739_5536445922270251606_n

SHARE