யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்

489

 

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்களுக்கான பாதிப்புக்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மிகவும் விசேடமாக யுத்த காலத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விரைவில் உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற விடயமானது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

036 038 222 balachandran isaippriya WAR-CRIME

 

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உண்மைகளை கண்டறியும் செயற்பாட்டில் ஒருசில நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதனை மறுக்க முடியாது.

ஆனால், அவற்றினூடாகவும் உண்மைகள் கண்டறியப்படுமா என்பது இதுவரைகூட எவராலும் உறுதிப்படுத்தப்பட முடியாமலேயே உள்ளது.

இந்நிலையில் உண்மைகளை கண்டறியும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் பொறுப்பு எவ்வாறானது என்றும் அதனை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் கருத்துரைத்துள்ளார்.

அதாவது கடந்தகால விடயங்கள் தொடர்பில் மறைந்துகிடக்கும் உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும். அவற்றோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, அவற்றை கண்டறிய வேண்டிய கட்டாய கடமை அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்பன உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

நீதிமன்றம், பாராளுமன்றம் என ஒவ்வொரு நிறுவனங்களின் வளர்ச்சியும் வரலாற்றில் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப தோற்றம் பெற்றன. இலங்கையில் 1971ம் ஆண்டு கலவரம் மற்றும் 1980ம் ஆண்டு காலப்பகுதி முதல் வடக்கில் ஏற்பட்ட கலவரம் என்பன மனித உரிமைகள் மீறலுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகவே அமைந்தன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் ஒன்று இருக்கும் போதும் முரண்பாடு ஒன்று ஏற்படும் போதும் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. இதனை பற்றி நாம் கலந்துரையாட வேண்டும்.

அதேநேரம் அவற்றை யாரும் மறுக்கவும் முடியாது. யுத்தகாலத்தின் போது ஏற்பட்ட உரிமை மீறல்களை மறைக்க முடியாது. சிலர் வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததாகவும் பாரிய உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்துகின்றனர் எனவும் பிரதமர் எடுத்துரைத்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பகுதியில் இடம்பெறும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் எவரும் முறைப்பாடு செய்வதில்லை. அந்த செயற்பாடுகளுக்கான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும்.

எத்தனைபேர் காணாமல் போயுள்ளனர் என்பதனை கண்டறிய வேண்டும். மனித உரிமைகள் சமூகத்தின் மிக முக்கிய பகுதியாகும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.

நாகரிக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்த சமூகத்தில் மனித உரிமைகள் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதனையும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையான விளக்கம் ஒன்றையே அளித்திருக்கின்றார் என்றே கூற முடியும்.

அந்தளவு தூரம் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் பிரதமர் வலியுறுத்தியிருக்கின்றார்.

உண்மையில் யுத்தமொன்று இடம்பெற்ற நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் நியாயமான முறையில் உரிய பொறிமுறையைக் கொண்டு உண்மைகளை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

ஆனால், எமது நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரியளவில் முன்வைக்கப்பட்டபோதும் இதுவரை உண்மைகள் கண்டறியப்படவில்லை.

மிகவும் விசேடமாக காணாமல்போனோர் தொடர்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறு காணாமல்போனவர்கள் என்று கூறப்படுகின்றவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டபோதிலும் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணப்படுகின்றது. இதனை யாரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறுக்கமுடியாது. இது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையாகும்.

எவ்வாறெனினும் எமது நாட்டை பொறுத்தவரையில் இந்த மக்களின் உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமையானது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணைகளும் இந்த உண்மையை கண்டறியும் செயற்பாடுகள் தொடர்பில் யோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்து வந்தபோதும் அவை செயற்பாட்டு ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கமானது இந்த யுத்தகாலத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை கண்டறியும் செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இதில் புதிய அரசாங்கம் கடந்த ஒன்றரை வருடகாலத்தில் ஓரளவு திருப்தி அடையக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

அதாவது அரசாங்கமானது தற்போது காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமன்றி விரைவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது. இந்த காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றினூடாக பாதிக்கப்பட்டோர் உண்மையை கண்டறிந்து கொள்வதற்கு வழிசெய்ய வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன்படி பார்க்கும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த உண்மையை கண்டறியும் செயற்பாட்டில் கொண்டுள்ள அக்கறையும் அது தொடர்பான தெளிவும் வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் இவை பேச்சளவில் மட்டும் இருந்துவிடாமல் செயற்பாட்டு ரீதியில் நிரூபிக்கப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் உண்மையை கண்டறியும் செயற்பாடு முன்வைக்கப்படாவிடின் அந்த செயற்பாட்டிலேயே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவே, இது தொடர்பில் அரசாங்கம் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் உண்மைகளை எவ்வாறு கண்டறியப்போகின்றது என்பது தொடர்பில் முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் மறந்து விடக்கூடாது.

நம்பகரமான சுயாதீன விசாரணைப் பொறிமுறையை முன்னெடுத்து உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசாங்கமும் ஐ.நா. தீர்மானத்துக்கேற்ப உள்ளக ரீதியில் விசாரணைப்பொறிமுறையை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதுடன் அதற்கான வடிவத்தைத் தீர்மானிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.

இவையனைத்திலும் மிக முக்கிய விடயமாக உண்மையைக் கண்டறிவதே காணப்படுகிறது.

SHARE