இனவாத செயற்பாடுகளினால் பௌத்த மதத்தினை எழுச்சிபெற, மேன்மையடையச் செய்ய முடியாது என்பதை சிங்கள பேரினவாத சக்திகள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

341

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில் அங்கம் வகித்த சில பௌத்த துறவிகள், சிறுபான்மையினர் மத்தியில் காவியுடைக்கு இருந்த மரியாதையைக் கட்டம் கட்டமாகக் கெடுத்துக் கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு விட்டனர் என்று கடும்போக்கு சக்திகள் கருதினர். புலிகள் அழிக்கப்பட்டு விட்டமையால், தமிழர்கள் இனி வாய்திறக்க மாட்டார்கள் என்று எண்ணினர். அதனால், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற நினைப்பே, 2013இல் உருவெடுத்த இனவாதத்தின் அடிப்படை நோக்கம் என்று கூறலாம்.

ஹலால் சான்றிதழை இல்லாமல் செய்வதில் தொடங்கிய கடும்போக்குச் செயற்பாடுகள், அளுத்கமையிலும் பேருவளையும் கத்திகளோடும் பொல்லுகளோடும் அலைய விடப்பட்டிருந்தமை கறைபடிந்த வரலாறாகும். எஸ்.டபள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தனது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை வளர்த்தார். ஆனால், அதே இனவாதமே அவருடைய உயிரைப் பலியெடுத்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதுபோலவே, ராஜபக்ஷக்களினால் ஆராதிக்கப்பட்ட நவீன இனவாதமே, அவர்களது ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கும் காரணமாகியது. இனவாதத்தால் இத்தனை நெருக்குவாரங்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கவில்லையென்றால், முஸ்லிம்கள், மஹிந்தவை வெற்றி பெறச் செய்திருப்பர். தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்களும் வாக்களித்தமையாலேயே மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உருவானது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நிலைமைகள் வெகுவாக மாறிப் போயின. தம்முடைய இருப்பு மற்றும் மத விடயங்கள் தொடர்பில் சிறுபான்மை மக்களின் மனதில் ஒருவித ஆறுதல் ஏற்பட்டது. பொது பலசேனா போன்ற மூன்றாந்தர அமைப்புக்கள் நல்லாட்சியின் முன்னே கைகட்டி வாய்பொத்தி நின்றன.

இருப்பினும், முஸ்லிம்கள் எதிர்பார்த்தது போல இனவாதிகளைக் கைது செய்யும் பாரிய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. சிங்கள பெரும்பான்மை நாடொன்றில் அது இலகுவான காரியமும் அல்ல. இப்படியிருக்கையில், ‘சிங்ஹலே’ உருவெடுத்தது. அதுபோதாதென்று, உறங்குநிலையில் இருக்கும் இனவாதம் அவ்வப்போது சிறுபான்மை முஸ்லிம்கள் மீதும், தமிழர்கள் மீதும் சீறிப்பாய்வதற்கு முனைவதையும் காணமுடிகின்றது.

கடந்தவாரம், கண்டியில் ‘சிங்ஹலே ஜாதிக பலமுலுவ’ உள்ளிட்ட பௌத்த அமைப்புக்களைச் சேர்ந்த தேரர்களும் கடும்போக்காளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டமை, இனவாதம் இன்னும் முற்றாக அடங்கவில்லை என்பதற்கு நிகழ்காலச் சான்றாகும். கண்டி லைன் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்படும் ‘மினராh’ எனப்படும் பள்ளிவாசலின் கோபுரவடிவ பகுதியை நிர்மாணிக்கக் கூடாதெனக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதாவது புனித தலதா மாளிகையின் உயரமான (கோபுர) பகுதியை விடவும் பள்ளிவாசலின் ‘மினாரா’ உயரமாக இருக்கக் கூடாது என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் அடிப்படைக் கோரிக்கையாகும்.

இதனையடுத்து நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், ‘நிர்மாணத் திட்டத்தை மாற்றியமைப்பதுடன், தலதா கோபுரத்தை விட உயரமாக மினராவை அமைக்க மாட்டோம்’ என்று கண்டி நகரப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்திருக்கின்றது. முன்னமே, தலதா மாளிகையை விட உயரமாக, மினாராவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருக்கவில்லை என்றும் முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

கண்டி லைன் பள்ளிவாசல் விவகாரத்தைக் கவனமாகக் கையாள வேண்டியிருக்கின்றது. ஏனென்றால், இப்பிரச்சினை பௌத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையுடன் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. தலதா மாளிகையின் வரலாற்றுடன் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற தொடர்புகளே மூடிமறைக்கப்பட்டுள்ள ஒரு சூழலில், இனவாதிகளிடம் இருந்து இதைவிட அதிகமான மதச் சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே, ‘உண்மையான பௌத்தர்களின்’ சம்மதத்துடன் தலதா மாளிகையை விட உயர்ந்து செல்லாத விதத்தில் (அதாவது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட உயரத்தில்) மினாராவை அமைப்பதே நல்லதெனத் தோன்றுகின்றது.

நியாயப்படி பார்த்தால், மினாராவை அமைக்கும் உயரத்தை சிங்களவர்கள் தீர்மானிக்க முடியாது என்பது உண்மையே. இதில் ஒரு மதம்சார்ந்த கௌரவப் பிரச்சினையும் இருக்கின்றது. இருந்தாலும், நாம் எல்லோரும் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கம், இனவாதிகளுக்கு எதிராக இன்னும் நடவடிக்கைகளை எடுக்காதிருக்கையில், கண்டி நகர முஸ்லிம்கள் சற்றுப் பொறுத்துக் போக வேண்டியுள்ளது. அதைவிடுத்து ‘மினாராவை விரும்பியபடி நிர்மாணித்தே தீருவோம்’ என்று சவால் விட்டுக் கொண்டிருந்தால், ‘தலதா மாளிகையில் இருந்து 200 மீற்றருக்குள் பள்ளிவாசல் இருக்க முடியாது’ எனக் கூறுவார்கள். ‘மினாராவை நிர்மாணிக்கக் கூடாது’ என்று கோஷமிட்டவர்கள், ‘பள்ளியை அகற்ற வேண்டுமென’ வீதிமறியல் போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆகவே, விவேகமாக நடந்து கொள்தல் உசிதமானது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் முகப்புக் கோபுரத்துக்குப் போட்டியாக அமையும் விதத்தில், அதையும் விட உயரமான புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை வடக்கில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்தது. இது இன்னும் இழுபறியில் உள்ளது. நயினை கோவிலின் முகப்பை மறைத்து அல்லது அதைவிட உயரமாகப் புத்தர் சிலை அமைப்பது நியாயம் என்று கடும்போக்கு பௌத்தர்கள் கூறுவார்களாயின், அந்த சமன்பாட்டை கண்டியிலும் பிரயோகித்து பார்க்க வேண்டும். அதாவது, கண்டி தலதா மாளிகையை விட பள்ளிவாசலின் மினராவை அமைப்பது இனவாதிகள் நியாயமற்றது என்றோ பிழை என்ற கூற வரக்கூடாது. மறுதலையாக, கண்டியில் முஸ்லிம்கள் மினராவை அமைக்க முடியாது என்றால், நாகபூசணி அம்மன் கோவிலின் முகப்பை மறைக்கும் புத்தர்சிலை அமைக்கும் பணிகளையும் கைவிட, இந்த கடும்போக்காளர்கள் முன்வர வேண்டும்.

நாட்டில் இனவாதம் வெளிக்கிளம்பிய மேலும் பல சம்பவங்கள் இதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக, கிழக்கு முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை ஏசினார் என்ற விடயம் எவ்வாறு இனவாதமயமாக்கம் செய்யப்பட்டது என்பதை இரு வாரங்களுக்கு முன்னர் நாம் கண்டோம். அதுமட்டுமன்றி, வெலிமடையில் முஸ்லிம் பாடசாலை நிர்மாணிப்பதற்கு பௌத்த அமைப்புக்கள் தடை விதித்திருக்கின்றன. தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டது. பின்பு நோன்பு காலத்தை முன்னிட்டு சிறிய அளவிலான விஸ்தரிப்புக்களை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூறிச் சென்றும், இன்னும் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்படியாக, மாற்றாந்தாய் மனப்பாங்குடனான செயற்பாடுகள் அவ்வப்போது இனவாதமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன. இவையாவும் இத்துடன் முடிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கவும் முடியாது. முதலில், சிறுபான்மை மக்கள் அதிலும் விஷேடமாக முஸ்லிம்கள் ஒரு விடயத்தை ஆத்திரப்படாமல் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அது என்னவென்றால், இலங்கை ஒரு முஸ்லிம் நாடு அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டதுமல்ல. இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இப்படியிருக்கையில், சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களுக்காக அரசாங்கம், கடும்போக்கு பிக்குகளை கைது செய்யும் என்றோ சிங்களவர்களை பகைத்துக் கொள்ளும் என்றோ கற்பனை செய்யக் கூடாது.

சவூதி அரேபியா ஒரு முஸ்லிம் நாடு. அந்த நாட்டுக்குள் ஒருவர் புத்தர் சிலையொன்றைக் கொண்டு சென்றாலே சட்டம் அதை வேறு விதமாகத்தான் கையாளும். அந்த நிலைமை இலங்கையில் இல்லை. ஓரளவுக்கு முஸ்லிம்களின் மத வழிபாட்டுச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இங்கு இருக்கின்ற பிரச்சினை கடும்போக்கு சக்திகளின் மதச்சகிப்புத்தன்மையே. அதற்காக குரல் எழுப்புவதில் தப்பில்லை.

ஆனால், ஹலால் சான்றிதழ் பறிக்கப்பட்ட போது அதற்காக போராடமல் விட்டதன் மூலம் நாம் கொடுத்த தைரியம்தான், இன்று சின்னச் சின்ன விடயங்களிலும் மூக்கை நுழைக்கும் துணிவை இனவாதிகளுக்கு வழங்கியிருக்கின்றது. எனவே, சிறிய விடயங்களில் முரண்பட்டுக் கொண்டு நமது அறிவையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்காமல், நிலைமைகளை பொறுப்புடன் காத்திரமான முறையில் அணுக வேண்டும்.

எல்லா மதத்தவர்களும் ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு மதத்தின் மேன்மை, அதனது உயரிய தன்மை என்பது விகாரைகளின் தாது கோபுரங்களை,  பள்ளிகளின் மினாராக்களை, கோவில்களின் கோபுரங்களை எந்த மதப் பிரிவினர் போட்டிபோட்டுக் கொண்டு உயரமாகக் கட்டுகின்றனர் என்பதை வைத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மதத்தை பரப்புகின்ற மதத் துறவிகளின் நடத்தைகளால், அதை வழிபடுகின்ற மக்களின் பண்புகளாலேயே மதம் உயர்வு பெறுவதும் தாழ்வு பெறுவதும் நடந்தேறும் என்பதை அழுத்தமாக குறிப்பிட விரும்புகின்றோம்.

அவ்வாறில்லாமல், கட்டடங்களை பௌதிக அடிப்படையில் பிரமாண்டமாகக் கட்டிவிட்டு, மனங்களைக் குறுக்கிக் கொண்டால், மத சகிப்புத்தன்மையின்றி நடந்துகொண்டால் ஒருக்காலும் மதம் பற்றிய நல்லபிப்பிராயம் வளராது என்பதை, குறிப்பாக இனவாத சக்திகள்; புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத்தின் மீதான நல்லெண்ணத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் சகோதர சிங்கள மக்களே அன்றி, இனவாத சக்திகள் அல்லர் என்பதுதான் நிதர்சனமாகும்.

இந்தப் பிரச்சினையில் அரசாங்கத்துக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. சிறிய விடயம்தானே என்ற எண்ணத்தில் மெத்தனமாக இதைக் கையாள அரசாங்கம் நினைக்கக் கூடாது. யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டது தொடக்கம் சாலாவ ஆயுதக்கிடங்கு வெடிப்பு வரைக்கும். நாட்டில் இடம்பெறுகின்ற அசாதாரணமான நிகழ்வுகள் அனைத்துமே அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டமோ என்ற சந்தேகத்துடனே நோக்கப்படுகின்றன. நல்லாட்சியின் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற அமைதியைக் கெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக அரசாங்கமும் கூறிவருகின்றது.

அப்படி என்றால், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு யாராவது மர்மமான தரப்பினர் சூழச்சிகளை மேற்கொள்கின்றனர் என்றால், வெறுமனே அவ்விடயத்தை மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து, அந்நிலைமையை தடுப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆட்சிக் கட்டமைப்பில் குழப்பநிலையை ஏற்படுத்த, இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க என எந்தக் காரணத்துக்காக இனவாத அமைப்புக்கள் நெருக்குவாரங்களை கொடுத்தாலும், முதலில் அதற்கெதிராக சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும்.

IXDqRzS

இனவாத செயற்பாடுகளினால் பௌத்த மதத்தினை எழுச்சிபெற, மேன்மையடையச் செய்ய முடியாது என்பதை சிங்கள பேரினவாத சக்திகள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சிங்கள நாட்டில் முஸ்லிம்கள், தமது இன, மதம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைப்பதில் சுய கட்டுப்பாட்டை பேணுவதுடன் எடுத்ததெற்கெல்லாம் மல்லுக்கு நிற்கவும் கூடாது. அதேபோல், இனவாதம் தலைவிரிகோலமாக பேயாடிய போது ‘இது தீய சக்திகளின் வேலை’ என்று சொல்லி அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருந்த மஹிந்த சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியை, நல்லாட்சி அரசாங்கம் அவ்வப்போது நினைத்துக் கொள்ளட்டும்.

SHARE