தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

252

 

தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று பரிசீலனை செய்யப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் வாதிடுகையில்,

தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றிற்கோ அல்லது நாட்டின் வேறும் எந்தவொரு நீதிமன்றிற்கோ அதிகாரம் கிடையாது.

இந்த அரசாங்கம் ஓர் தேசிய அரசாங்கம் என்பதனை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்றின் விசேட வரப்பிரசாதங்களின் கீழ் உள்ளடக்கப்படும் ஓர் விடயமாகும்.

இவ்வாறான ஓர் நிலையில் தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் எந்தவொரு நீதிமன்றிலும் வழக்குத் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கம் தேசிய அரசாங்கம்அல்ல என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

SHARE