தூக்குமேடையில் இருந்து தப்பிக்க உயர்நீதிமன்றை நோக்கி ஒரு மேன்முறையீடு!

271

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ‘ட்ரயல் அட் பார்’ அமர்வில் ஷிரான் குணரத்ன தலைமையில் பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய நீதிபதிகள் உள்ளடங்கிய குழுவே இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் அறிவித்தது.

வழக்கின் முதல் பிரதிவாதியான பொலிஸ் உத்தியோகத்தர் அனுர டி மெல், மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், 7வது பிரதிவாதியான சரத் பண்டார, 10வது பிரதிவாதியான காணாமல் போயுள்ள ஜனக கலகொட மற்றும் 11வது பிரதிவாதியான துமிந்த சில்வா ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை ஜனாதிபதி நிர்ணயம் செய்யும் திகதி மற்றும் நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனுர டி மெல், சந்தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத், லங்கா ரசாஞ்சன, மாலக சமீர, விதானகமகே அமில, சரத் பண்டார, சுரங்க பிரேமலால், சமிந்த சமன் குமார, ஜனக கலகொட, துமிந்த சில்வா, ரோஹன மாரசிங்க, நாகொட ஆரச்சிகே சமிந்த ஆகிய 13 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டிருந்தனர்.

2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அங்கொடை, ராஹுல வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்துக்குள் அத்துமீறி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியமை, நிவங்கா மதுஷானி பத்திரன என்பவரை தூற்றி அச்சுறுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் அங்கொடை, ராஹுல வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த தமித் சுரங்க குமாரவின் மார்பு பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை வைத்து அச்சுறுத்தியமை அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சட்ட விரோத குழுவொன்றின் அங்கத்தவராக இருந்து பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர, ஜலாப்தீன் மொஹம்மட் அசீம், மணிவேல் குமாரசுவாமி, தமித் தர்ஷன ஜயதிலக ஆகியோரை படுகொலை செய்தமை, ராஜதுரகே காமினி என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து படுகாயம் ஏற்படுத்தியமை, அந் நடவடிக்கைகளுக்கு உதவி, ஒத்தாசை புரிந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் மேற்படி பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

தண்டனை சட்டக் கோவையின் 146வது அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 146, 486, 296 ஆகிய அத்தியாயங்களின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 32வது அத்தியாயத்துடன் இணைத்து கூறப்படும் 144, 296 மற்றும் 486 ஆகிய அத்தியாயங்களின் கீழும் பிரதிவாதிகளால் குற்றம் புரியப்பட்டுள்ளதாக இதன் போது சட்ட மா அதிபரால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பிலான சிறப்பு ட்ரயல் அட்பார் விசாரணைகள் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் 12ம் திகதி முதல் ஆரம்பமாகின.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஷிரான் குணரத்ன(தலைவர்), பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய மூவர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் ஊடாக வழக்கானது மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையிலேயே இடம்பெற்றது.

குறித்த தினத்தில் இருந்து 52 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் 42 சாட்சியாளர்கள் மன்றில் சாட்சியமளித்தனர். இதனைவிட 86 வழக்குப் பொருட்களும் 126 ஆவணங்களும் பரீட்சிக்கப்பட்டன.

இதனையடுத்து பிரதிவாதிகளின் தரப்பில் சாட்சிய ங்கள் முன்வைக்கப்பட்டன. 3வது பிரதிவாதி சார்பில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இருவரும் 11வது பிரதிவாதி சார்பில் துமிந்த சில்வாவின் தந்தையும் சாட்சியமளித்தனர்.

முறைப்பாட்டாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகேயின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் பின்னர் சம்பவ இடத்தையும் மேற்பார்வை செய்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 14ம் திகதி விசாரணைகள் நிறைவுற்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்

வழக்கின் 10வது பிரதிவாதியான ஜனக கலகொட இல்லாமல் குற்றவியல் சட்டத்தின் 241வது அத்தியாயத்துக்கு அமைவாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

நீதிபதி பத்மினி ரணவக குணதிலகவின் தீர்ப்பு(297 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பின் முக்கிய விடயங்களை 25 நிமிடங்களில் அவர் வாசித்தார்.)’இந்த வழக்கின் 11வது சந்தேக நபரான துமிந்த சில்வாவுக்கு அப்போது இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் அவரது அச்சுறுத்தல் காரணமாக பலர் அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த வாக்கு மூலங்கள் அவருக்கு (துமிந்தவுக்கு) சாதகமாக வழங்கப்பட்டுள்ளதை இந்த மன்று அவதானம் செய்தது.

இந்த வழக்கில் பொலிஸார் மன்றில் வழங்கிய சாட்சியங்கள் ஊடாக அவர்கள் மீது இந்த மன்று நம்பிக்கை கொள்கின்றது.இந்த சம்பவம் நடைபெற்ற தினம் தேர்தல்கள் தினம் ஒன்று என்பதால், தேர்தல்களைக் குழப்பும் நடவடிக்கையை பொது நோக்காகக் கொண்டு இந்த பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகின்றது.

இந் நிலையில் அன்றைய தினம் 11வது பிரதிவாதியான துமிந்த சில்வாவின் தலைமையிலேயே ஏனைய பிரதிவாதிகள் செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.துமிந்த சில்வாவின் தலைமையில் பிரதிவாதிகள் அன்றைய தினம் காலையில் வெல்லம்பிட்டி, தமிழ்நாடு தோட்டத்தில் இருந்துள்ளனர்.

அங்கிருந்து அங்கொடை, ஹிம்புட்டான, முல்லேரியா ஆகிய பிரதேசங்களில் ராஹுல வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையம், கந்த விஹாரை வாக்களிப்பு நிலையம், ராஜசிங்க வித்தியாலய வாக்களிப்பு நிலையம் ஆகியவற்றுக்கும் அதன் பின்னர் இந்த வழக்கின் முக்கிய சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கும் சென்றுள்ளமை சாட்சிகள் ஊடாக உறுதியாகின்றது.

அவர்கள் அவ்வாறு பயணிக்கும் போது தேர்தல்களைக் குழப்பும் விதமாக நடந்து கொண்டதாகவும் நபர்கள் பலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் சாட்சிகள் ஊடாக உறுதியாகின்றது.11வது பிரதிவாதியான துமிந்த சில்வாவின்தலைமையில் இவ்வாறு நடந்து கொண்டமையினாலேயே இவ்வழக்கின் பிரதான சம்பவம் சம்பவித்துள்ளது அவரின் நடவடிக்கை காரணமாகவே துப்பக்கிப் பிரயோகமும் நடந்துள்ளது.

எனவே பாரத லக்ஸ்மன் உள்ளிட்டநால்வரின் கொலைகளுக்கும் அவர் பொறுப்புக்கூற வேண்டும். துமிந்த சில்வா, பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவுடன் முன் பகையுடன் இருந்துள்ளமை அவரது முன்னைய நடவடிக்கைகள் ஊடாக உறுதியாகின்றது.

பாரதவினதும் ஏனையோரதும் கொலைகள் ரீ–56 ரக துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் காரணமாகவே ஏற்பட்டுள்ளன. இந்தரீ–56 ரக துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த துப்பாக்கி புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் போனது என விசாரணையில் உறுதியாகியுள்ளது.

பாரத லக்ஸ்மனின் பாதுகாப்பு அதிகாரியான உபாலியின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்டதோட்டாக்களேதுமிந்த சில்வா, ரோஹண மாரசிங்க, என்.எல்.சாமிந்த ஆகியோரை பதம் பார்த்துள்ளமையும் தெளிவாகின்றது.பாரத லக்ஸ்மனின் தலையின் பின் பகுதியில் ரீ–56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவரின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் ஊடாக இந்த மன்று உறுதி செய்தது.

துமிந்த சில்வா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் அவர் அனைத்தையும் மறந்திருக்கலாம் எனவும் சம்பவம் இடம்பெறும் போது அவர் மது போதையில் இருந்தமை தொடர்பிலும் சாட்சியங்கள் உள்ளன.எனினும் சம்பவத்தின் போது பாரத லக் ஷ்மன் பிரேமச்சந்திர மது போதையில் இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.

எனவே துமிந்த சில்வா தனது பொதுவான நோக்கத்தை ஈடு செய்வதற்காக முன்னெடுத்த நடவடிக்கையாலேயே மேற்படி கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த கொலைகளுக்கு அவரின் தலைமையில் செயற்பட்ட பிரதிவாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்த வழக்கில் 2,4,5,6,8,9 மற்றும் 12 ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறைப்பாட்டாளர் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியுள்ளது. எனவே அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர்களை இந்த மன்று விடுதலை செய்கின்றது.

இந்த வழக்கின் முதல் பிரதிவாதியான துஷார டி மெல் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர். எனினும் அவர் இவ்வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று செயற்படவில்லை. அவர் 11வது பிரதிவாதியான துமிந்த சில்வாவின் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை சார்ந்து செயற்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது முதலில் துமிந்த சில்வாவுக்கே துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதாக அவர் கூறினாலும், இந்த அனைத்து சம்பவங்களுக்கும் முழுமையான தலைமையை துமிந்த சில்வாவே வழங்கியுள்ளார். அவரது பொதுவான நோக்கம் ஒன்றினை யதார்த்தமாக்க முயற்சிக்கையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தன்னைப் போன்றே பாரதவுக்கும் பாதுகாப்புக்காக பொலிஸார் உள்ளதை துமிந்த தெரிந்திருக்க வேண்டும் எனவும் இத்தகைய சம்பவம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் அந்த பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவர் என்பதை துமிந்த தெரிந்திருக்க வேண்டும்.முதலாவது பிரதிவாதி ஒரு பொலிஸ் உத்தியோகத்தர். எனினும் 12,13வது பிரதிவாதிகளைப் போன்று செயற்படாது அவர் 11வது பிரதிவாதியின் அதிகாரத்தை தன்பக்கம் எடுத்து அதன் பால் செயற்பட்டுள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக முறைப்பாட்டாளரினால் முன்வைக்கப்பட்ட 1,5,6,7,8,9 மற்றும் 17 ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரை நான் குற்றவாளியாக அறிவிக்கின்றேன்.மூன்றாவது பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றன. அதன்படி அவரையும் 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நான் குற்றவாளியாக அறிவிக்கின்றேன்.7வது பிரதிவாதி மீதும் சுமத்தப்பட்டுள்ள 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரையும் இந்த மன்று குற்றவாளியாகக் காண்கிறது. 10வது பிரதிவாதிக்கு எதிரான 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கருதுகிறேன். 11வது பிரதிவாதியே இந்த அனைத்து நடவடிக்கைக்கும் தலைமை தாங்கியவர் என்ற ரீதியில் 1,2,3,4,5,6,7,8,9,17 ஆகிய குற்றச் சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி அவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவரையும் குற்றவாளியாக நான் கருதுகின்றேன் என தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்புடன் நீதிபதியான எம்.பி.எஸ். மொராயஸும் உடன்படுவதாக அறிவித்தார்.இதனையடுத்தே தலைமை நீதிபதி ஷிரான் குணரத்ன தனது தீர்ப்பை அறிவித்தார்.

தலைமை நீதிபதி ஷிரான் குணரத்னவின் தீர்ப்பு’ தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களுக்கு அமைய பிரதிவாதிகளால் குற்றம் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கொள்ள முடியாதுள்ளது.’

இந்த வழக்கை பொறுத்தவரை சுயாதீனமான சாட்சிகளை முன்வைக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறியுள்ளது.இந் நிலையில் முறைப்பாட்டாளர் தரப்பு நீண்ட இடைவெளியின் பின்னரேயே சாட்சியங்களை மன்றில் பாரப்படுத்தியுள்ளது. அத்துடன் கண் கண்ட சாட்சிகளுக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டாலும் எந்த திகதியில் எங்கு வைத்து எப்போது யாரால் என்பது குறித்து அவர்கள் கூறவில்லை. இதனால் அது குறித்தும் நான் அவதானம் செலுத்துகின்றேன்.

உண்மையிலேயே பிரதிவாதிகள் தெரிந்துகொண்டே சட்ட விரோத குழுவொன்றின் உறுப்பினர்களாக இருந்தனரா எனும் சந்தேகம் தொடர்பில் அவதானம் செலுத் தப்படுகின்றது. இதன் போது அவர்கள் பொதுவான நோக்கத்துடன் ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகின்றது.எனினும் சாட்சிகளுக்கு இடையே பரஸ்பர வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக 3வது பிரதிவாதியின் கைது தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. அதனால் விசாரணை செய்யப்பட்ட முறைமை தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. இந்த கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மூன்றாவது பிரதிவாதிக்கு சொந்தமான வாடகை வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி மீட்கப்பட விரயமான காலம் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது இந்த சந்தேகம் அதிகரிக்கின்றது.

இந்த சம்பவம் குறித்து விசாரணையாளர்கள் உரிய முறையில் விசாரணை செய்யவில்லை. முறைப்பாட்டாளர் தரப்பு குற்றச் சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியுள்ளது. இதனால் இந்த சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களை பிரதி வாதிகள் தான் செய்தனரா எனும் பலமான சந்தேகம் தோன்றுகின்றது.

எனவே சாட்சிகள் மீதான சந்தேகங்களை பிரதிவாதிகளுக்கு சாதகமாக வழங்கி அனைத்து பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நான் விடுவிக்கின்றேன்’ என அறிவித்தார்.எனினும் இரு நீதிபதிகள் 5 பேரை குற்றவாளியாக கண்டதை அடுத்து அவர்களுக்கு எதிரான தண்டனை அறிவிக்கப்பட்டது.தண்டனை அறிவிக்கப்பட முன்னர் குறித்த பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் தமது சேவை பெறுநருக்கு இலகு தண்டனை வழங்குமாறு தனித்தனியாக கருத்தினை முன்வைத்தனர்.

இந் நிலையில் 2: 1 என்ற பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக காணப்பட்ட 5 பிரதிவாதிகளுக்கும் எதிராக தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டு தொடர்பில் தலா 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அபராதத்தைச் செலுத்தாத விடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

2வது குற்றச்சாட்டு தொடர்பில் தலா 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அபராதத்தைச் செலுத்தாதவிடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

3வது குற்றச்சாட்டு தொடர்பில் தலா 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அபராதத்தைச் செலுத்தாத விடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

4 வது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அபராதத்தைச் செலுத்தாதவிடத்து மேலும் மூன்று மாதகால இலகு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

9வது குற்றச் சாட்டு தொடர்பில் தலா 20 வருட சிறைத் தண்டனையும் 17 வது குற்றச்சாட்டு தொடர் பில் தலா ஆயுள் தண்டனையும் விதித்து ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந் நிலையில் 5,6,7,8ம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட முன்னர் குற்றவாளிகளான அனுர டி மெல், தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, துமிந்த சில்வா ஆகியோரிடம் இறுதியாக மன்றுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என கேட்கப்பட்டது.

இதற்கு தனித்தனியாக பதிலளித்த நால்வரும், தாம் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் நிரபராதிகள் எனவும் சம்பந்தமே இல்லாமல் தாம் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இதனையடுத்து நீதிபதி பத்மினி ரணவக்க மரண தண்டனை தீர்ப்பினை வாசித்தார்.

இதன்போது நீதிமன்றில் அனைவரும் எழுந்து நின்றதுடன் அனைத்து மின் குமிழ்களும் அணைக்கப்பட்டன.

இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி நிர்ணயம் செய்யும் திகதியில் மற்றும் நேரத்தில், வெலிக்கடை சிறைச் சாலையின் நான்கு சுவர்களுக்குள் வைத்து குற்றவாளிகளான அனுர டி மெல், சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, ஜனக கலகொட, துமிந்த சில்வா ஆகியோரை உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு கொல்லவும் என தீர்ப்பறிவித்து தீர்ப்பெழுதிய பேனையை உடைத்தெறிந்தார்.

இந் நிலையில் தற்போது குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பறிவிக்கப்பட்ட ஐவரும் உயர் நீதிமன்றை நாடவுள்ளனர்.

அதாவது தாம் நிரபராதிகள் எனும் நிலைப்பாட்டில் உள்ள அவர்கள் மேல் நீதிமன்றின் ட்ரயல் அட் பார் விசாரணை மன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தவுள்ளனர்.

எவ்வாறாயினும் உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்யும் பட்சத்தில் அங்கு மீளவும் சாட்சி விசாரணைகள் இடம்பெற மாட்டாது. சாதாரண முறைப்படி ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட சாட்சிகள் பிரதிவாதிகளை குற்றவாளிகளாக காண போதுமானவையா என்பது மட்டுமே அங்கு ஆராயப்படும்.

எனவே பெரும்பாலும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இவர்கள் மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் இந்த முறையீடானது ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இலங்கையின் சட்டத்தை பொறுத்தவரையில் மேன் முறையீடு தீர்ப்பு வரையிலும், மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு பிணையில் செல்லவோ, அல்லது வேறு சலுகைகளைப் பெறவோ முடியாது.

அதன்படி துமிந்த உள்ளிட்டோர் மேன் முறையீடு செய்தாலும் அதன் தீர்ப்பு வரும் வரை சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனைவிட மரண தண்டனை கைதிகள் அணியும் வெள்ளை நிற ஆடை தற்போது துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், துமிந்த சில்வா வெலிக்கடை சிறையின் சீ – 3 பகுதியின் தனியான சிறைக் கூட்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே அந்த கூட்டிலிருந்து வெளியே எடுக்கப்படும் அவரை வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே உறவினர்கள், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர்.

இந்த சிறைக் கூண்டு 24 மணி நேர சிறைக் காவலர்களின் மேற்பார்வையில் உள்ள சிறைக் கூண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE