எங்கே போகிறது தமிழரின் அரசியல்?

260

 

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, இடம்பெற்ற சில நிகழ்வுகள், தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் ஆற்றலை இழந்து விட்டனரா என்ற சந்தேகத்தைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும், வடக்கு மாகாண முதலமைச்சரும் தனித்தனியாக சந்தித்தமை, ஐ.நா பொதுச்செயலரின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோர், இடம்பெயர்ந்தோர் நடத்திய வெவ்வேறான போராட்டங்கள் என்பனவே இந்தச் சந்தேகத்துக்கான காரணங்களாகும்.

அதாவது, பொதுநோக்கில் ஒருங்கிணையக்கூடிய வலு தமிழர்களிடம் இல்லாமல் போயுள்ளது என்பதையே இந்த இரண்டு சம்பவங்களும் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண ஆளுநருடன் மட்டுமே சந்திப்புகளை நடத்துவார் என்றே முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்புக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.

வடக்கிற்கு, குறிப்பாக யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டு, சர்வதேசப் பிரமுகர்கள் பெரும்பாலும் வடக்கு மாகாண ஆளுநரையும், முதலமைச்சரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவது அண்மைக்கால மரபாக மாறியிருக்கிறது.

அதேவேளை, வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வரும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் வழக்கமும் உள்ளது. அவ்வாறான சந்திப்புகள் பெரும்பாலும், கொழும்பிலேயே நடப்பது வழக்கம்.

கொழும்பில் நடக்கும் அத்தகைய சந்திப்புகளுக்கு மிக அரிதாகவே வடமாகாண முதலமைச்சர் அழைக்கப்படுவார்.ஆனால், ஐ.நா. பொதுச்செயலரின் பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி நிரல் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது என்பதால், அதில் உள்நோக்கங்கள் ஏதும் இருந்ததா என்று சந்தேகம் கொள்வதற்கு இடமுண்டு.

கூட்டமைப்புடனான ஐ.நா. பொதுச்செயலரின் சந்திப்பு வழக்கத்துக்கு மாறாக, யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது போலவே, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், வடமாகாண முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படாமையும் வழக்கத்துக்கு மாறானதாகவே இருந்தது. இது வடக்கு முதல்வரை அதிருப்தியடைய வைத்தது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து பான் கீ மூனைச் சந்திக்கலாம் என்று இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதற்கு பிடிகொடுக்காமல், ஐ.நா. பொதுச்செயலரை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இறுதியாக யாழ்.பொது நூலகத்தில் கூட்டமைப்பினரைச் சந்தித்த பின்னர், முதலமைச்சரைச் சந்திப்பார் ஐ.நா. பொதுச்செயலர் என்று அறிவிக்கப்பட்டது.எனினும், ஐ.நா பொதுச்செயலரின் யாழ்ப்பாண பயணம் தாமதமானதால், முதலமைச்சருடனான சந்திப்பு வெறும் 6 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றது.

ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்பு 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றிருந்தது.இந்தக் கட்டத்தில், தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, வெளியிலுள்ள தரப்புகளுக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமும், அதன் ஆளுகையின் கீழ் உள்ள வடக்கு மாகாணசபையும் தனித்தனியான அரசியல் அபிலாஷைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டு இயங்குகின்றனவா என்பதே அந்தச் சந்தேகம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள், அபிலாஷைகள் எல்லாமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண சபைக்கும் பொதுவானவைதான்.அப்படியிருக்கும்போது, ஒரே இடத்தில், தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று இரண்டு தரப்புகளாக, ஐ.நா. பொதுச்செயலரைச் சந்தித்தமை, சரியான செயலாகுமா?

advertisement

ஒருவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் சார்ந்த சில விடயங்களை வலியுறுத்தாது என்ற சந்தேகம் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறாயின், கூட்டமைப்புடன் இணைந்து, சந்திக்கும் போது, இதுபற்றி அவரே கலந்துரையாடியிருக்கலாம்.

கூட்டமைப்பை கொழும்பிலும், முதலமைச்சரை யாழ்ப்பாணத்திலும் சந்திக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தால், இரண்டு சந்திப்புகளிலும் அர்த்தம் இருக்கும்.ஆனால், ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரண்டு சந்திப்புகளும் நடப்பது தமிழர் அரசியலில் உள்ள இடைவெளியையும் பலவீனத்தையுமே சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் காட்டும்.

அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமையீனம், நம்பிக்கையீனத்தையும் அது வெளிப்படுத்தும். அத்தகையதொரு அரசியல் வெளிப்பாட்டைத் தான் இந்தச் சந்திப்புகள் உணர்த்தியிருக்கின்றன.

இதுமாத்திரமன்றி, ஐ.நா. பொதுச்செயலரின் கவனத்தை ஈர்ப்பதற்கான போராட்டத்தில் கூட தமிழரின் ஒற்றுமை வெளிப்படுத்தப்படவில்லை.யாழ். மாவட்ட செயலகம் அருகே ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ். பொதுநூலகம் அருகே இரண்டு தரப்புகள் போராட்டத்தை நடத்தின. யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை நடத்திய தரப்புகள் அனைத்தினதும், காணாமற்போனோருக்கான நீதி, போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை, இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு சொந்த நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்,

அரசியல் கைதிகளின் விடுதலை என்பனவே பிரதான கோரிக்கைகளாக இருந்தன.ஆனால், இவர்கள் தனித்தனியே நின்று தத்தமது கோரிக்கைகளை முன்வைத்தனரே தவிர, ஒன்றாக இணைந்து தமது பெரிய சக்தியை வெளிப்படுத்தவில்லை.

தனித்தனியாக போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், போராட்டம் நடத்தியவர்களை ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் கருத்துக்களை கேட்கவோ, சந்தித்துப் பேசவோ இல்லை.

ஐ.நா பொதுச்செயலரின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்தியவர்கள் பலரும், தமிழில் சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தனர். அது தமிழ் ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்காகவா அல்லது ஐ.நா. பொதுச்செயலரின் கவனத்தைப் பெறுவதற்காகவா?போராட்டங்களை ஒருங்கிணைக்கும் போது, இதுபோன்ற விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியது முக்கியமானது.

எமது கோரிக்கைகள் ஐ.நா. பொதுச்செயலரின் கண்களுக்கோ, காதுகளுக்கோ செல்ல வேண்டுமாயின் அதற்கேற்றவாறு அவற்றைக் கையாண்டிருக்க வேண்டும்.எல்லாத் தரப்புகளும் இணைந்து பெரியளவிலான போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தால், ஒழுங்கை மீறாத வகையில் அத்தகைய போராட்டங்கள் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தால், ஐ.நா. பொதுச்செயலரின் கைகளில் மனுக்களை அளிக்கும் வாய்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.

உணர்ச்சிமயமான அரசியல் கோஷங்களோ போராட்டங்களோ எல்லா வேளைகளிலும், பயனுடையதாக இருக்காது. நிலைமைக்கேற்ற இராஜதந்திரத்துடன் இதுபோன்ற விவகாரங்கள் அணுகப்பட்டிருக்க வேண்டும்.

ஒழுங்காக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில், பான் கீ மூன் விவகாரத்தை தமிழர் தரப்பில் உள்ள அரசியல் தலைமைகளும், பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்புகளும், கையாளத் தவறியதால், ஐ.நா. பொதுச்செயலரின் கவனத்தை தமிழர்களின் பக்கம் திருப்ப முடியாமல் போயுள்ளது.

தமிழர் தரப்பில் பல வேளைகளில், இதுபோன்ற தவறுகள் இழைக்கப்படுகின்றன. யாரிடம், எதனை, எப்போது கேட்கவேண்டும் என்பதை தமிழர் தரப்பு சரியாக இனங்கண்டு கொள்வதில்லை.பரவிப்பாஞ்சானில் உறுதியளிக்கப்பட்டது போன்று காணிகளை படைத்தரப்பு விடுவிக்கவில்லை என்பதற்காக, இரா.சம்பந்தன் மீது குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்திய போது அங்கு சென்ற சம்பந்தன், பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சு நடத்திய போது, அவர் கொடுத்த வாக்குறுதியை தான் சம்பந்தன் அந்த மக்களுக்கு கூறியிருந்தார்.ஆனால், சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியாக அது சித்திரிக்கப்பட்டு, அதனை அவர் மீறியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், எதுவும் ஆகப் போவதில்லை.

ஏனென்றால், சம்பந்தன் அந்த விவகாரங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவரில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்திலும் அவ்வாறு தான் நடந்தது.யாரை நோக்கி போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரியாமலேயே போராட்டங்கள் நடத்தப்படுவதும், கண்டனங்கள் தெரிவிக்கப்படுவதும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கே வாய்ப்பாகி விடுகிறது.

தம்மீதான அழுத்தங்களை அவர்கள் தமிழர் தரப்பின் மீதே இலகுவாக திசைதிருப்பி விட்டு விடுகிறார்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல சமயங்களில் இவ்வாறான தந்திரங்களுக்குப் பலிக்கடாவாகிப் போகிறது.

இதுபோலத் தான், சர்வதேச போர்க்குற்ற விசாரணை மீது இருந்த தமிழர்களின் கவனம் இப்போது விஷஊசி விவகாரத்தை நோக்கி திசை திருப்பி விடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் அரசியல் ரீதியான தந்திரங்கள்.

பிரதான இலக்கை சிதறடிப்பதற்காக அவ்வப்போது இதுபோன்ற விடயங்களை பெரிதுபடுத்தி விடும் உத்திகள் கையாளப்படுவதைக் கூட தமிழர் தரப்பு உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை.

தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற விவகாரம் கூட, இப்போது வலுவற்றதாகி விட்டது. அரசியலமைப்பு திருத்தமே, எல்லாவற்றையும் தீர்க்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது.

புதிய அரசியலமைப்பு தமிழர் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையே கொடுக்கிறது.ஆனால், நிலையான அரசியல் தீர்வு ஒன்று, ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை யாரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழர் அரசியல் இப்போது, எந்தப் பக்கம் காற்றடிக்கிறதோ அந்தப் பக்கம் சாய்கின்ற நாணல் போலாகவே மாறியிருக்கிறது.

அதனால் தமிழரின் பிரதான அரசியல் இலக்குகள், அபிலாஷகள் பற்றியோ, அதனை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியோ நிலையான வழிமுறையின் ஊடாக போராடவோ, அதுபற்றிச் சிந்திக்கவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில், தமிழரின் ஒற்றுமையும், அரசியல் அபிலாசைகளும், கானல்நீராகவே மாறி விடும் ஆபத்துத் தான் அதிகரித்திருக்கிறது.

SHARE