சர்வதேச விசாரணைக்கு இலங்கை உண்மைத் தகவல்களை வழங்கவேண்டும்!

465

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு உரிய தகவல்களை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் விசாரணை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே இதன்போது ராஜபக்சவின் அரசாங்கம் உரிய தகவல்களை விசாரணைக் குழுவுக்கு வழங்கும் என்று ஜப்பான் எதிர்ப்பார்ப்பதாக தூதுவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம், ஆனால் இறுதிப்போரின் போது நடந்தவை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

எனவே அவர்கள் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் உண்மைத் தகவல்களை வழங்க வேண்டும் என்று ஹொபோ வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் விசாரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட அவர் பிரசன்னம் இல்லாமலேயே பதில் கூறும் முறை ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணையும் சர்வதேச நியமங்களுடன் மேற்கொள்ளப்படுமானால் அதனையும் ஜப்பான் ஏற்றுக்கொள்ளும் என்று ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE