நான்கு மாத குழந்தையை தாக்கிய தந்தை: 8 வருடம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

537

 

நோர்வே நாட்டில் 4 மாத பச்சிளம் குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக அக்குழந்தையின் தந்தைக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் பெற்றோர் இருவர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில், ஓர் இரவில் 4 மாதமே ஆன குழந்தையின் தலையில் தந்தை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் குழந்தையின் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டது.

எனினும், குழந்தையை எதற்காக தாக்கினார் என்ற காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்வத்தை தொடர்ந்து குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், குழந்தை எதனால் தாக்கப்பட்டது என்ற காரணத்தை பெற்றோர் மருத்துவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘தூக்கத்தில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக குழந்தையை தாக்கிவிட்டதாக’ தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், தந்தையின் வாக்குமூலத்தை நீதிபதி நிராகரித்துள்ளார். மேலும், குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்ட நீதிபதி, தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காத குற்றத்திற்காக தாயாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், குழந்தையின் எதிர்கால மருத்துவ செலவிற்கு தந்தை 10 மில்லியன் க்ரோனர்(21,81,32,404 இலங்கை ரூபாய்) மற்றும் தாயார் ஒரு மில்லியன் க்ரோனர்(2,18,13,240 இலங்கை ரூபாய்) அபராத தொகையை குழந்தைக்கு வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE