உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்! தாக்குதலுக்கும், தவறான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் கடும் கண்டனம்

296

sajeevan

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதலுக்கும் , தவறான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பற்றாளரும், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவருமான எஸ். சஜீவன், மாணவர்களின் கல்வியில் அரசியல் தலையீடு இடம்பெறுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உடுவில் மகளிர் கல்லூரியில் பழைய அதிபரைத் தொடர்ந்து வைத்திருப்பதா ? அல்லது புதிய அதிபரைப் பதவியில் அமர்த்துவதா? என்பதில் பிரச்சினை உருவாகி அது மாணவர் போராட்டமாக வெடித்தது.

அந்தப் பாடசாலையில் அரசியல் தலையீடுகள் அதிகமாகவிருக்கின்றது. போராட்டக் காரர் பக்கம் அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்களும், மற்றைய பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமனற உறுப்பினர்களும் இருப்பதால் இது ஒரு அரசியல் போராட்டமாக மாறியிருந்தது.

இதனால், பாடசாலை மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம் கல்வியில் வீழ்ச்சியடைந்து வருகின்றதொரு சூழலில் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது எங்களுடைய கல்வியைச் சீரழிப்பதற்கானதொரு நடவடிக்கையே. ஆகவே, மாணவர்களின் கல்வியில் அரசியல் தலையீடு இடம்பெறுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே, இத்தகைய செயற்பாடுகள் தொடராது தடுத்து நிறுத்தி இந்தப் பாடசாலை தொடர்ந்தும் சுமூகமான முறையில் இயங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

போராட்டத்திலீடுபட்ட மாணவிகள் மீது சில ஆசிரியர்கள் தங்களுடைய அடாத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவிகளைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஆசிரியைகளும்இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இதன் போது மாணவிகள் மீது தவறான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

மாணவிகளுடன் ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

ஆசிரியர்கள் மட்டுமன்றிச் சில மதகுருமாரும் அடாத்தான நடவடிக்கைளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இத்தகு செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெறுமாகவிருந்தால் வடமாகாண முதலமைச்சர் அந்தப் பாடசாலையை மாகாண சபைக்குள் உள்வாங்கி இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டமிட்டு எங்களுடைய கல்வி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்ற இளைய சமூதாயம், தவறான நடத்தைகளில் ஈடுபடுத்தப்படும் யுவதிகள் என எங்களுடைய சமூதாயம் திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிற நிலையில் கல்வியும் சீரழிவது திட்டமிட்டு இன அழிப்பை மேற்கொள்பவர்களுக்கான உடந்தையாகவிருக்கிறது.

ஆகவே, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

SHARE