பிரபாகரனுக்கு அடுத்ததாக எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா!- ஜனநாயகப் போராளிகள் கட்சி

318

 

உண்மையில் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் எங்களது தேசியத் தலைவர் பிரபாகரன்.

14492474_1791719411110979_2312216393602758229_n-1

14449842_1791719581110962_5033811596877381085_n

அவருடைய வழிகாட்டலில் அகிம்சை வழியில் போராடித் தியாக தீபம் திலீபன் அண்ணா தனது உயிரை நீத்திருக்கிறார்.

எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக அவரது வழிநடாத்தலில் உருவானவர் தான் எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா!

தமிழ் மக்களுக்குரியதொரு தலைவராக அவர் காணப்படுகின்றார் எனத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், சம்பந்தன் ஐயாவின் கரங்களைப் பலப்படுத்த அனைவரும் அணி திரள்வோம் எனவும் அழைப்பு விடுத்தார்.

கடந்த-1987ம் ஆண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 29வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நல்லூரில்அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன்பாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தியாக தீபம் திலீபனின் 29வது ஆண்டு நினைவு தினமானது மிகவும் உணர்வு பூர்வமாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்படுகிறது.

2009ம் ஆண்டிற்குப் பின்னர் இன்று தான் திலீபன் அண்ணாவின் நினைவு தினம் இவ்வாறு உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்படுகின்றது.

இதுவரை காலமும் எல்லோருடைய மனதாலும் இந்த நினைவு தினம் கொண்டாடப்பட்டது. திலீபண்ணாவின் தியாகம் தமிழ் மக்களின் உரிமைக்கான உச்சபட்ச ஜனநாயகப் போராட்டமாக அமைந்துள்ளது.

திலீபண்ணா உயிர் நீக்கும் போது எனக்கு நான்கு வயது. ஆனால், அவருடைய நினைவு தினத்தில் எங்களுடைய அறிவுக்கெட்டிய வயதில் பங்கெடுத்த போது அவரது தியாகமானது உலகத்தில் யாராலும் இலகுவில் செய்ய முடியாத தியாகம் என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.

தியாக தீபம் திலீபண்ணாவின் நினைவு தினம் கொண்டாடப்படுவதைத் தெற்கிலுள்ள அரசியல் வாதிகள் ஒரு இனவாதமாகப் பார்க்காமல் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக எவ்வாறான தியாகங்களைச் செய்துள்ளார்கள்? என்பதை உணர்ந்து எங்களது உரிமைகளை வழங்குவதில் முன்னிற்க வேண்டும்.

இன்றைய இந்த நினைவேந்தல் நிகழ்வை தெற்கிலுள்ள சில கடும் போக்கு அரசியல் வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக திரிவுபடுத்திக் கூறும் சூழல் உருவாகலாம்!

நாங்கள் எங்களுடைய உரிமைகளை அகிம்சை வழியில் வெல்ல வேண்டும். எமது உரிமைகளை நாங்கள் இராஜதந்திர ரீதியில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாடுகளின் அனுசரணை எங்களுக்கிருக்கிறது. அந்த அனுசரணையை நாங்கள் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உண்மையில் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் எங்களது தேசியத் தலைவர் பிரபாகரன். அவருடைய வழிகாட்டலில் அகிம்சை வழியில் போராடித் தியாக தீபம் திலீபன் அண்ணா தனது உயிரை நீத்திருக்கிறார்.

எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரனுக்குஅடுத்ததாக அவரது வழிநடாத்தலில் உருவானவர் தான் எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா!

எங்கள் மக்களுக்குரியதொரு தலைவராக அவர் காணப்படுகின்றார். தமிழ் மக்களின் தலைவராகவிருக்கின்ற சம்பந்தன் ஐயாவின் கைகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை எங்கள் எல்லோருக்கும் உரியது.

சுயநலத்துக்காகத் தமிழ் மக்களின் தலைவர்களாக வர வேண்டும் என்ற சிந்தனையிலிருப்பவர்கள் எமது உரிமைப் போராட்டம் முடியும் வரை சம்பந்தன் ஐயாவின் கரங்களைப் பலப்படுத்திய பின்னர் நீங்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்குத் தலைவராக வரலாம்.

ஆகவே, நாங்களனைவரும் சம்பந்தன் ஐயாவின் கரங்களைப் பலப்படுத்துவோம் என்றார்.

SHARE