விக்னேஸ்வரன் கேட்பதெல்லாம் கொடுத்துவிட முடியாது:பிரதியமைச்சர் ராமநாயக்க

249

 

விக்னேஸ்வரன் கேட்பதெல்லாம் கொடுத்துவிட முடியாது:பிரதியமைச்சர் ராமநாயக்க

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கைகளை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும் முதலமைச்சர் கேட்கும் அனைத்தையும் வழங்கிவிட முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக பதவிவகிக்கும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

62 இலட்சம் வாக்குகுளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு வெறும் ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற்று வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு சவால் விடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக பதவிவகிக்கும் ரஞ்ஜன் ராமநாயக்க கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று பகல் நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் போன்ற வலியுறுத்தல்களை விடுத்ததோடு புத்தர் சிலைகள் அமைப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்திருந்தார்.

வடமாகாண முதலமைச்சரின் இவ்வாறான கூற்று தொடர்பில் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதியமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, வடக்கிலிருந்து பௌத்த விகாரைகளை அகற்றக் கோரும் வடக்கு முதலமைச்சரின் கோரிக்கை தொடர்பாக கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

‘தனக்குத் தேவையானவற்றை கோரி விக்னேஸ்வரனுக்கு பேரணி நடத்தும் உரிமை உள்ளது. அவற்றை யார் கொடுப்பது? வழங்குவதற்கான உரிமை மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது. கோரிக்கைளை ஏற்று கொடுப்பதா இல்லையா என்று தீர்மானிக்கும் அதிகாரம் 62 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமே உள்ளது. ஆனால் யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் கோருவதற்கு உரிமை உள்ளது. எனினும் ஸ்ரீலங்காவிலுள்ள மக்கள் பெரும்பான்மை விருப்பத்தை விக்னேஸ்வரனுக்கு அல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே அளித்துள்ளனர். விக்னேஸ்வரன் ஒன்றரை இலட்சம் வாக்குகளையே பெற்றிருக்கிறார். இந்த நிலையில் ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற்ற நபர் அறுபத்து இரண்டரை இலட்சம் வாக்குகளைப் பெற்ற நபருக்கு சவால் விடுப்பதானது நியாயமா என்பதை மக்களே அனுமானிக்க வேண்டும். உணவுப் பொதி அல்லது போதைப் பொருட்களை வழங்கி ஆட்களைத் திரட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவின் காணியை சொந்தமாகத்தருமாறு என்னால் போராட்டம் செய்ய முடியும். போராட்டம் செய்வதும் சாதாரண பிரஜையாக எனது உரிமையாகும். ஆனால் அந்தக் காணியை எனக்கு வழங்குவார்களா? இல்லை. அதேபோல வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், சிங்களக் கலாசாரங்கள் அங்கு வேண்டாம் எனக் கோருவதற்கு வடமாகாண முதலமைச்சருக்கு எவ்விதத்திலும் உரிமையில்லை. இந்த கருத்தில் மட்டும் விக்னேஸ்வரனுடன் நான் முரண்படுகின்றேன்”-என்றார்.

SHARE