தமிழ் மக்கள் இனவாத்தையோ, மதவாதத்தையோ, பிரதேச வாதத்தையோ விரும்பவில்லை- பெரும்பான்மை இனத்தவர்களே முதலில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன்

271

 

நாட்டில் இந்து பெரும்பான்மை இனத்தவர்களே முதலில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

2343434

இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே என்றும் தமிழர்கள் இந்த நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இனவாத்தையோ, மதவாதத்தையோ, பிரதேச வாதத்தையோ விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் நியாயபூர்வமான நீதிக்கான இழப்பீட்டையே கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசினால், அரசியல் கைதிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்றவை இன்றும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்ததாகக் குறிப்பிட்ட அவர், காணாமல் போகச் செய்யப்பட்ட, அழிக்கப்பட்ட தமிழ் சமூகம் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால் கல்வியினூடாக மட்டுமே சாத்தியமடையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2 ஆயிரத்து 624.9 சதுரக்கிலோ மீற்றரைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டம் எனக் குறிப்பிட்ட அவர், அந்த மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தின் எல்லைப் புறங்களுக்குள் அத்துமீறி நுழைந்து, தமிழ் மக்களின் காணிகளை அழிப்பது, அதில் வேண்டுமென குடியேற்றங்களை ஏற்படுத்தி விகாரைகளை அமைக்கின்ற செயற்பட்ட இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால், இந்த அரசில் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழந்து போய்விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கிலே சிங்கள மக்கள், அவர்கள் பூர்வீகமாக எந்த இடத்தில் குடியிருந்தார்களோ அங்கு இருந்தால் அதனை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர்,

தமிழ் மக்கள் எந்த இடத்திலும் அத்துமீறி குடியேற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு சில இனவாத அரசியல் தலைமைகள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த, அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல கங்கணம் கட்டுகின்றார்கள்.

இன அழிப்பை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆற்றை ஓட வைப்பதற்கு பொதுபலசேனா போன்ற பௌத்த அமைப்புக்களைத் திரட்டி இனவாத்தை உருவாக்கி, குழப்பைத்தை ஏற்படுத்தி தான் ஆட்சிக்கு வரச் சிந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE