இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

296

 

இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

14568204_1177794792295982_3349863485619896602_n
2010 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்பு என்று சொல்லி வந்த தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணி ஒரு வாரத்திற்கு முன்னர் அதனைக் கைவிட்டு விட்டார்கள். எழுக தமிழ்! பிரகடனம் ‘இ’ இவ்வாறாகச் சொல்லுகின்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும் நிறுவன ரீதியாக சமஸ்டி முறைமையொன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தேசம் ஒரு நாடு என்பதல்ல…. நாங்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகச் சொல்லி வந்த சமஸ்டி முறையைத் தற்போது அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீடும் புவிசார் அரசியல் கைதிகளாய் உள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலும் கடந்த சனிக்கிழமை(01-10-2016) முற்பகல்-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் மூத்த பேராசிரியர் க. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூட அந்தப் பிரகடனத்தில் கிடையாது. இனப் படுகொலை தொடர்பிலும் ஒரு பிரகடனம் கிடையாது. ஆக, 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக இறுக்கமானதொரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து வந்திருக்கிறோம். அது, நடு நிலையான, மித வாதமான நிலைப்பாடாகவிருக்கலாம். அது கவர்ச்சி கரமானதொரு நிலைப்பாடாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால்., மக்களுடைய பேராதரவு எங்களுக்குத் தான் கிடைத்து வந்திருக்கிறது. அதனை எதிர்த்து மாற்றுத் தீர்வுகளை முன்வைத்தவர்களும் தற்போது அதே நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். ஆகையினால், நாங்கள் செல்லுகிற வழி,செல்லுகிற இலக்குச் சரியானது.

2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேரிலும், சின்னத்திலும் போட்டியிட்டுத் தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கு நாம் முன்வைக்கின்ற யோசனை என்ன? என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் எந்தவித மாற்றமுமின்றி ஒரே விதமான யோசனையை முன்வைத்திருக்கின்றோம்.தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு வடகிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது எமது அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலும் தெளிவாகவிருக்கிறது. எவ்வாறு அதனை அடையப் போகிறோம் என்பதும் எம் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சமூகத்தை ஒன்றிணைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை அடைவோம் என்ற விடயத்தை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். இதிலே, பலருக்கும் நம்பிக்கையில்லை. நம்பிக்கையில்லாமல் இருப்பது தவறல்ல. மாறாக,நம்பிக்கையில்லாமலிருக்கின்ற விடயம் எங்கள் புரிந்து கொள்ளக் கூடிய விடயம்.

கடந்த- 70 ஆண்டுகளாகப் பேசிப் பேசி எதுவும் கிடைக்காத நிலையில் இன்னொரு பேச்சுவார்த்தை நாடாத்தி நீங்கள் தீர்வினைப் பெறப் போகிறீர்களா? என எம் மக்கள் கேட்பதில் நியாயமுண்டு.ஆனால், மாற்று வழி என்ன? எனக் கேள்வியைக் கேட்கின்ற போதெல்லாம் மாற்று வழிகள் முன்வைக்கப்படாத நிலையில் ஒரு மாற்று வழி முன்வைக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2010 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாஞாபனத்தில் தமிழ் மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் “ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு ” என முன்வைத்தார்கள். அதனையும் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம்-25 ஆம் திகதி வழங்கிய செவ்வியொன்றில் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரகுமார் ‘ விட்டுக் கொடுப்பிற்கான அழுத்தம்….. எங்களுக்கு ஏற்பட்டால் இரண்டு தேசங்களின் கூட்டு என்கிற நிலைப்பாட்டை எடுப்போம் எனவும் சொல்லியிருந்தார்.

தேர்தல் வெற்றி- தோல்வி குறித்துச் சொல்ல எனக்கு விருப்பமில்லை. ஆனால், மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டிற்கு தங்களுடைய ஆதரவை அளித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கடந்த-2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல் நிகழ்ந்தது. பெப்ரவரி மாதம் தான் அவர்கள் கட்சியை உருவாக்கியிருந்தார்கள். இரண்டே இரண்டு மாவட்டத்தில் மாத்திரம் தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். நியாயமாக மக்கள் மத்தியில் கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடிய கால அவகாசம் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலும் இதே நிலைப்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தன. நான் ஏனைய கட்சிகள் தொடர்பில் பேசவில்லை. நாங்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலிருந்து எந்தவிதமான மாற்றுத் தீர்வுகள் என்பது குறித்துத் தான் சிந்திக்கிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேர்லீன் நகரத்தில் எழுத்துமூலமாக முன்வைத்திருந்தார்கள். சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நாங்கள் ஒருநாட்டிற்குள் இரு தேசங்களின் கூட்டு என்பதை அடைவோம் எனச் சொல்லியிருந்தார்கள். இதே தீர்வு தான் இந்த நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நூலில் பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் எடுக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் அமைய வேண்டும் என்பதே சரியானதாகும் என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த சமஸ்டி முறை, பேச்சுவார்த்தை முறை மூலமான தீர்வு போன்ற விடயங்கள் 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும், 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலிலும் , இறுதியாக-2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் முன்வைக்கப்பட்டு மக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்களிருக்க முடியாது.
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு பரிணாம வளர்ச்சியும் நிகழ்ந்திருக்கிறது.

மக்களை நேசிக்கின்றதொரு அரசியல் பாரம்பரியம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் புரிந்துணர்வு, நாகரீக அணுகுமுறை, கருத்து வேறுபாடுகளின் மத்தியிலும் பரஸ்பர நல்லுறவு என்பவற்றை அடிப்படையான பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும் எனப் பேராசிரியர் மு. திருநாவுக்கரசு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலை நாங்கள் அறிமுகம் செய்து பேசுகின்ற போது குறைந்தது அந்தப் பண்பாட்டையாவது வளர்த்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும். டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை என்ற இந்த நூலின் 114 ஆம் பக்கத்தில் எழுத்தாளர் ஒரு முக்கிய விடயத்தை வலியுறுத்துகின்றார். அவர் வலியுறுத்தும் விடயத்தோடு எனக்கு இணக்கப்பாடுண்டு. முள்ளி வாய்க்காலிற்கு முன்னர், முள்ளி வாய்க்காலிற்குப் பின்னர் என வித்தியாசமான முறைகளில் எங்களுடைய நகர்வுகளை ஆராய வேண்டும் என்பதைத் தெட்டத் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக் கூறியுள்ளார். அவர் கூறியிருக்கிற எல்லா விடயங்களுடனும் எனலாம் உடன்பாடிசுகள் கிடையாது. ஆனால், பல விடயங்களில் எனக்கு உடன்பாடுகளுண்டு.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் எவ்வாறு எங்கள் மக்களின் விடிவுக்காக அரசியல் தீர்வு போன்ற பல்வேறு விடயங்களை நாங்கள் பல்வேறு வாசகங்கள் ஊடாக வெளிப்படுத்தினோம். ஆனால், அடிப்படையில் எங்களுடைய மக்கள் விடிவுக்காக நாங்கள் எதை நோக்கி நகருகிறோம்? எவ்வாறு நகருகிறோம்? என்பது அறிவுபூர்வமாக ஆய்வு செய்யப்பட வேண்டியது முக்கியமான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE