தெற்கில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நடைபயணத்துக்கு உதவியளிக்குமாறு கோரிக்கை

252

 

தெற்கில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நடைபயணத்துக்கு உதவியளிக்குமாறு கோரிக்கை

வடக்கில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றினை அமைக்கும் அருமையான கைங்கரியத்திற்காக 2011ம் ஆண்டு தெற்கின் தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பித்த நடைப்பயணம் 28 நாட்கள் கடந்து பருத்தித்துறையை சென்றடைந்தது. COLOURS OF COURAGE TRUST  நிறுவனத்தை சேர்ந்த நாதன் சிவகணநாதன் மற்றும் சரிந்தா உடும்புவே ஆகியோரின் கடினமுயற்சியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நடைப்பயணத்தின் பலனாக வழியெங்கும் நிதிவழங்கிய கொடையாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிதி வழங்குனர்களின் ஆதரவுடன் 300 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் வைத்தியசாலையொன்று வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நிர்மாணிக்கப்பட்டது.


2012ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வைத்தியசாலை மிகவேகமாக கட்டிமுடிக்கப்பட்டு 2014ம் ஆண்டு மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. 120 கட்டில்கள்; வசதிகளுடன் கூடிய இந்த வைத்தியசாலையில் 02 வைத்திய நிபுணர்கள், 10 வைத்திய அதிகாரிகள், 40 தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கடமையாற்றுகின்றனர்.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கென தனித்தனியான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு மக்கள்பாவனைக்கு திறந்துவைக்கப்பட்ட பின்னர் இதுவரை 4500ற்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரைகாலமும் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுவந்த எமது மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது தமது மாகாணத்திலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த அரிய கைங்கரியத்திற்கு உறுதுணையாக இருந்த அதே நிறுவனம் தற்போது தெற்கில் (கராப்பிட்டி) ஒரு புற்றுநோய் வைத்தியசாலையை அமைக்கும்பொருட்டு வடக்கிலிருந்து தெற்கிற்கான நடைபயணமொன்றினை இன்று 06.10.2016 பருத்தித்துறையிலிருந்து ஆரம்பித்து தெற்கு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. நாளொன்றுக்கு 30 கிமீ வரையாக நடைபயணம் மேற்கொள்ளும் இவர்கள் 30 நாட்கள் தமது கடினமான பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களினூடாக பயணிக்கவுள்ள இவர்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் வழங்குவதோடு கொடையாளர்கள், நலன்விரும்பிகள் இந்த உயரிய கைங்கரியத்திற்கு உங்களாலான நிதியுதவிகளை வழங்கியுதவுமாறு வடக்குமாகாண சுகாதார அமைச்சு வேண்டிநிற்கிறது.
சுகாதார அமைச்சர், வடக்கு மாகாணம்.

SHARE