தமிழீழ தேசிய தலைவர் அதிமேதகு விக்னேஸ்வரனின் மூன்று வருட சாதனை! ஊழல் விசாரணை? – ராம் இராசகாரியர்

246

 

சமஸ்டிகேட்டு, மாவட்டசபை கிடைத்தும் அது செயலற்று போனதால், ஆயுதங்களை கையேந்த அது எம்முள்ளான மோதலாய் மாற, இந்திய முடிவில் மாகாண சபையை ஏற்று அதனை மகிந்தவின் சதி, நீதிமன்ற ஆணைப்படி வடக்கு கிழக்கு என பிரிக்க, கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில் மூன்று ஆண்டுகளின் முன்பு, அமைந்தது தமிழர் அரசு என்ற கோசத்துடன் உருவான, வட மாகாண சபையில் தமி;ழீழ தேசிய தலைவர் விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சர்கள் மேல் ஊழல் விசாரணை என்பதே பத்திரிகை அறிவிப்பு.

தனது மந்திரிசபையை அமைத்தபோது, துறைசார் நிபுணர்களை தெரிவு செய்ததாக முதலமைச்சர் பெருமிதம் கொண்டார். தம்பிக்கு மந்திரி பதவிகேட்டவர் பற்றி பகிரங்கமேடையில் பேசிய முதல்வர், தகுதியானவருக்கு தான் பதவி கொடுத்தேன் என்றும் அறிவித்தார். இன்று அதே தகுதிவாய்ந்த துறைசார் நிபுணர்கள் மீது வைக்கப்பட்ட, ஊழல் குற்றசாட்டை விசாரிக்க இளைப்பாறிய நீதிமான் தலைமையில், விசாரணை குழு அமைத்து நீங்கள் அறிந்த, உங்களுக்கு தெரிந்த நிதி மோசடி செயல்கள் பற்றிய ஆதாரங்களை தாருங்கள், என்று பொது மக்களுக்கு பகிரங்க பத்திரிக்கை அறிவித்தல் மூலம் அழைப்புவிடுக்கிறார் முன்னாள் நீதிஅரசரும், இந்நாள் முதல்வரும் தமிழீழ தேசிய தலைவருமான அதிமேதகு சி வி விக்னேஸ்வரன்.

என் நினைவுகள் வட மாகாண சபை தேர்தல் காலத்தை நோக்கி மீண்டும் செல்கிறது. தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்ட, கூட்டமைப்புக்கு நேரடி போட்டியாக இருந்தது, மகிந்த அரசுடன் நெருங்கி இருந்த ஈ பி டி பி. கூட்டமைப்புக்குள் பல குத்து வெட்டுகள் இருந்தபோதும், ஈ பி டி பி வென்று விடக்கூடாது என்ற நோக்கில் உள்முரண்பாடுகள் பற்றி சிந்தியாது, வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்கும்படி தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட வேளை முல்லைத்தீவு உறுப்பினர் தெரிவில், ஒட்டுசுட்டான் ஓரங்கட்டப்பட்டது என கூறி தேர்தலில் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவை, ஒரு பகுதியினர் எடுத்திருந்தனர். கணிசமான அவர்களின் வாக்கின் தேவையை எடுத்துரைத்து, கற்சிலைமடு முக்கியஸ்தரின் முன் முயற்சியால் அவர்கள் வாக்களித்தனர்.

இது போன்று பல நிகழ்வு மட்டுமல்ல. தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலரும் நேரடி, மறைமுக அறிக்கைகள் விடுத்தபோதும், கூட்டமைப்பின் வெற்றியை நிச்சயிக்க முதல்வர் வேட்பாளரான நீதியரசர் விக்னேஸ்வரன், வல்வெட்டித்துறை கூட்டத்தில் பிரபாகரன் ஒரு மாவீரன் என கூறும் அளவிற்கு பிரச்சாரம் தீவிரமானது. அண்ணன் அமிர் மண்ணான பண்ணாகத்தில் நடந்த கூட்டத்துக்கு, வேட்பாளர்கள் மேள தாளத்துடன் கோவில் தரிசனம் முடித்து மேடையில் அமர்ந்ததும், அவர்களை ஆதரித்து தலைவர் மாவை சேனாதிராசா முழங்கியபோது, வயதான ஊரவர் ஒருவர் என்னிடம், எங்கட பூட்டப்பிள்ளைகள் காலத்திலையும் இவங்கட பேக்காட்டு பேச்சு மாறாது என்றார்.

அவரின் வெறுப்பை உணர்ந்த நான், அவரிடம் நீங்கள் தேர்தலை பகிஸ்கரிக்க போகிறீர்களா என கேட்க, இல்லை மோனை போடாமவிட்டா இவங்கள் தோத்து போவாங்கள். பிறகு மகிந்தவின்ர கூட்டாளிகள் வெண்டு போடுவினம். காலம் பூரா இவங்களோடதான் மாரடிக்கவேணும் என்றார். அந்த பொதுமகனின் நிலைதான் பெரும்பான்மை வடபகுதி வாழ் தமிழ் மக்களின் நிலை. விரும்பி வாக்களித்தை விடவும் வேறு வழி இன்றி தெரிவுகள் இடம்பெறுவது தான் இதுவரை நிலை. அப்படி தெரிவுகள் இடம்பெறும்போது நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவதால், களைகளும் முளைவிட தொடங்கும். அந்த நிலைதான் இன்று வடக்கு மாகாண சபை அமைச்சர் மீதான விசாரணை என்றால், இதுவரை காலமும் இதனை அறியாதவராக முதல்வர் இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது.

எதிர்கட்சி தலைவர் தவராசா கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில், கேள்விகள் எழுப்பிய போதெல்லாம், எதிர் வாதமிட்டே அவர் குரல் அடக்கிய ஆளும்தரப்பு உறப்பினர்கள் செயலை பார்த்தும், மௌனித்திருந்த முதல்வர் சிந்தையில் அந்த குற்றச்சாட்டுகள் பற்றி, தன்வரையில் உண்மைநிலை அறியவேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்படவில்லையா? ஒரு முன்னாள் நீதியரசர் தன் தலைமையில் அமைந்த அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பாளர் என்ற நிலையில், பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஒரு உள்ளக விசாரணையை, ஆரம்பத்திலேயே வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் கழியும் நிலையில், பகிரங்க அறிக்கை மூலம் விசாரிக்க வேண்டிய நிலை வந்திருக்காது. பொது விடயங்களில் நிறைந்த அனுபவ அறிவு கொண்ட தவராசா இருக்கும் கட்சியை வைத்து, அவரை விமர்சித்தவர்களின் அமைச்சர்கள் செய்த ஊழல் பற்றி விசாரிக்கும் பத்திரிகை அறிக்கையை பார்க்கும் பொதுமக்கள், இவர்களை பார்த்து எள்ளிநகையாட மாட்டாரா?

உரலுக்கு வாழ்க்கைப்பட்டால் அவலுக்கு சுகம் ஏது என்ற நிலையில்தான், வடக்கு வாழ் தமிழ் மக்களின் நிலை இன்றளவும் உள்ளது. மத்திய அரசின் மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது என்பது உண்மை. ஆனால் வந்த நிதியை கூட குறித்த காலத்துள் பயன்படுத்தாது, மீண்டும் திறைசேரி திரும்புவது மட்டுமல்ல, பாவித்த நிதி கூட ஊழல் பெருச்சாளிகள் தின்ற மிச்சம் தான் என்ற செய்தி இதற்கு தானா ஆசைப்பட்டோம், வாக்குகளை அள்ளிப்போட்டோம் (கள்ள ஓட்டுகள் உட்பட) என்ற கேள்வியை தேர்தல் வெற்றிக்கு உழைத்த அனைவர் மனதிலும், நிச்சயம் எழுப்பும். தொட்டதற்கு எல்லாம் பிரேரணை நிறைவேற்றி, சாதனை படைத்த சபை என்ற பெயரை, கின்னஸ் புத்தகத்தில் பதிவிட முயற்சிக்கும் அதே வேளை விசாரணை முடிவில் ஊழல் நிரூபிக்கப்பட்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் அமைச்சர்கள் செயலும் பதிவேறும். அப்போது முதல்வர் நிலை கவலைக்கிடமாகலாம்.

-ராம்

SHARE