உண்மையை மூடி மறைக்கும் வரை நல்லிணக்கம் எப்படி சாத்தியமாகும்” என்று விக்னேஸ்வரன் திருப்பிக் கேட்டதற்கு, நோர்வே தூதரால் மட்டுமில்லை, சர்வதேசத்தாலும் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை.

238

 

வட மாகாண சபையில் முதல்வர் விக்னேஸ்வரனால் நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ எதிர்ப்புத் தீர்மானம், இந்த நபும்சகர்களின் செவுளை மட்டுமல்ல, மர்மதேசமாக இருக்கும் சர்வதேசத்தின் செவுளையும் சேர்த்தே பெயர்த்தது.

625-500-560-350-160-300-053-800-900-160-90 vik

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, ஆட்சிக்கு வந்த அத்தனை இலங்கை அரசுகளும், தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை அம்பலப்படுத்தியது விக்னேஸ்வரனின் தீர்மானம். நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை தான் – என்று அடித்துச் சொன்னது அது.

இந்த இனத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கிற அப்பழுக்கற்ற போராளி அண்ணன் சிவாஜிலிங்கம் தான் அந்தத் தீர்மானத்தின் அஸ்திவாரம். சிவாஜிலிங்கம் கோடு போட்ட இடத்தில் ரோடு போட முடிந்தது – விக்னேஸ்வரன் என்கிற முன்னாள் நீதியரசரால்! அதற்கு அவர் வகிக்கிற பதவி மட்டுமே பயன்படவில்லை, எதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவரது நுணுக்கமான சட்ட அறிவும் சேர்ந்தே பயன்பட்டது.

சென்ற ஆறு ஆண்டுகளாக ‘நடந்தது இனப்படுகொலைதான்’ என்கிற உண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது உலகத் தமிழினம். ‘இனப்படுகொலை என்றெல்லாம் பேசக்கூடாது’ என்று போதிக்கிற மூடிமறைப்பு மோசடிப் பேர்வழிகளின் உருவப் பொம்மைகளைக் கோபத்துடன் கொளுத்துகிறது. ‘உன் குடும்பத்தில் ஒரே ஒரு சகோதரி சிங்கள ராணுவ வெறியர்களால் சீரழித்துக் கொல்லப்பட்டிருந்தால் இப்படியெல்லாம் பேசுவாயா’ என்று கொந்தளிப்போடு கேட்கிறது.

உலகெங்கும், தமிழர்கள் இப்படியெல்லாம் கொந்தளித்தபோது அசைந்துகூட கொடுக்கவில்லை, ஒன்றரை லட்சம் உயிர்களைக் கொன்ற மூன்று பேர். அந்த மும்மூர்த்திகளில் ஒருவர் உற்சவர். அவர், திருவாளர் இலங்கை. மற்ற இருவரும் மூலவர்கள். ஒருவர், திருவாளர் இந்தியா. இன்னொருவர், திருவாளர் சர்வதேசம்.

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் துணிவை உற்சவர் இலங்கைக்குத் தந்தது, இந்த மூலவர்களின் பக்கபலம்தான். கொலை வெறியுடனிருந்த இலங்கைக்கு ஆயுதங்களை வாரி வாரி வழங்கியதுடன் நின்றுவிடவில்லை இந்த மூதேவிகள். ‘நீ கொன்றுமுடிக்கும்வரை கண்டும் காணாதவர்கள் போல் கண்களை மூடிக் கொள்கிறோம்’ என்று கள்ள மௌனம் சாதித்தார்கள். உண்மையில், நடந்த இனப்படுகொலையில் அக்யூஸ்ட் நம்பர் ஒன் – இந்தியாவும் சர்வதேசமும்தான்……. இலங்கை கிடையாது!

நடந்தது இனப்படுகொலைதான் என்பது அம்பலமானால், கூட்டுக் குற்றவாளிகளும் சேர்ந்தே கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அதனால்தான், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் அறிக்கையைத் தாமதப்படுத்துவது, ‘இலங்கையை இலங்கையேதான் விசாரித்துக் கொள்ளட்டுமே’ என்று வக்காலத்து போடுவது – போன்ற நயவஞ்சக நடவடிக்கைகளில் சர்வதேசத்துடன் இணைந்து நிற்கிறது இந்தியா.

தலைக்கு மேலே கத்தி தொங்குகிற நிலையில், விக்னேஸ்வரன் நிறைவேற்றியிருக்கும் தீர்மானம், இலங்கையை மட்டுமல்ல, இந்தியாவையும் சர்வதேசத்தையும் கூட நொந்துபோகச் செய்திருக்கிறது.

விக்னேஸ்வரன் மீது பௌத்த சிங்களப் பேரினவாதப் பூதம் ஆத்திரத்துடன் பாய்கிறது. ‘அரசியல் ஆதாயத்துக்காக இப்படியெல்லாம் தீர்மானம் போடுகிறார்கள்’ என்பது அவர்களது குற்றச்சாட்டு. ஆறு ஆண்டுகளாக, ‘கொலை செய்வதும் ஒரு கலை’ என்று பீற்றிக்கொண்டிருந்த அவர்கள், இப்போது பீதியோடு பேசவேண்டிய நிலை.

இப்படியெல்லாம் தீர்மானம் போடுவது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது – என்பது சிங்கள அறிவுஜீவிகளின் கருத்து. ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவிப்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது – என்று ஒருபோதும் தீர்மானம் போட்டதில்லை மகாவம்சப் பொறுக்கிகள்.

சிங்கள மக்களிடையே ஹீரோவாகக் காட்டிக் கொள்வதற்காகவே – ‘தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளுவேன்’ என்று தொடர்ந்து பேசும் இலங்கைப் பிரதமர் ரணில், ‘விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்’ என்கிறார் ஆத்திரத்துடன். ‘நான் அந்தப் பொய்யரைச் சந்திக்கவே மாட்டேன்’ என்கிற கித்தாப்பு வேறு. இந்தப் பிரகஸ்பதிகளைச் சந்திக்கத்தான் முந்திக்கொண்டு இலங்கைக்குப் போயிருந்தார் நரேந்திர மோடி.

விக்னேஸ்வரனின் தீர்மானம் பற்றி இந்தியா இதுவரை வாய்திறக்கவில்லை. இனப்படுகொலை நடந்தபோது அன்னை சோனியா சாதித்த கள்ள மௌனத்தை அப்படியே காப்பியடிக்கிறது மோடி சர்க்கார். அன்னை சோனியாவின் வழியில்தான் நடப்போம் – என்று உறுதியேற்றிருக்கும் சுஷ்மாவாலும் மோடியாலும் வேறென்ன செய்துவிட முடியும்?

விக்னேஸ்வரனின் தீர்மானத்தால் ஏற்பட்ட பதற்றத்தை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தியது மேற்குலகம் மட்டும்தான். அடித்துப் பிடித்து யாழ்ப்பாணத்துக்குப் போய் விக்னேஸ்வரனைச் சந்தித்து விசாரிக்கிறார்கள் மேற்குலகத்தின் பிரதிநிதிகள்.

மேற்குலகத்தின் சார்பில் விக்னேஸ்வரனைச் சந்தித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர். “நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகள் உருவாகி வரும் நிலையில் ‘இனப்படுகொலை’ என்றெல்லாம் தீர்மானம் எதற்கு” – என்பது நோர்வே தூதரின் கேள்வி. “நடந்தது என்ன – என்கிற உண்மையை மூடி மறைக்கும் வரை நல்லிணக்கம் எப்படி சாத்தியமாகும்” என்று விக்னேஸ்வரன் திருப்பிக் கேட்டதற்கு, நோர்வே தூதரால் மட்டுமில்லை, சர்வதேசத்தாலும் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை.

3 மாதங்களுக்கு முன் இலங்கைக்கு வந்த புனித போப்பரசர் கூட, விக்னேஸ்வரன் சொன்னதைத்தான் சொன்னார். நல்லிணக்கமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை – என்று போப் சொன்னதைத்தான் இன்று விக்னேஸ்வரன் வலியுறுத்துகிறார்.

விக்னேஸ்வரனின் கணக்கு கற்பனைக் கணக்கல்ல! கற்பனைகளை விற்பனை செய்ய அவர் ஒன்றும் மூன்றாம்தர அரசியல்வாதியல்ல. அவர் ஒரு, முதல் தர நீதிபதி. சரியான தரவுகளின் அடிப்படையில்தான் பேசுகிறார் தமிழினத்தின் முதல்வர்.

ஒன்றரை லட்சம் அப்பாவிகளைக் கொன்றுகுவித்த இலங்கை, ‘அப்பாவித் தமிழர்கள் மீது ஒரு துரும்புகூட படவில்லை’ – என்று, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தது. அப்பாவிகளை அழித்த அந்த இலங்கையை – தீவிரவாதத்தை அழித்துவிட்டதாகப் பாராட்டியது சோனியாவின் இந்தியா.

இந்தியாவின் இந்த நயவஞ்சகப் பாராட்டுரை வெளியானபிறகுதான், போர் என்கிற பெயரில் 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை அம்பலப்படுத்தியது, ஐ.நா.வின் மூவர் குழு. கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை எண்பதாயிரத்தைத் தொடலாம் என்றது, ஐ.நா.வின் உள்ளக விசாரணை. திருடனுக்கு அடைக்கலம் கொடுத்தவனைத் தேள் கொட்டியதைப் போல திருட்டு முழி முழித்தது நீதி நேர்மையை போதிக்கிற எங்கள் பாரம்பரிய பாரதம்.

அதற்கெல்லாம் பிறகு, மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கேட்ட கேள்வி மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் குலை நடுங்க வைத்தது. அதிகாரபூர்வ மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றை முன் நிறுத்தி, ‘ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் காணோமே, அவர்கள் எங்கே’ என்று கேட்டார் ராயப்பு ஜோசப். தேவனின் திருச்சபையில் இருந்துகொண்டு, சக மனிதர்களுக்காக நியாயம் கேட்கிற அந்த மனிதரின் கேள்விக்கு இன்றுவரை பதிலளிக்கவில்லை இலங்கை. ஏன் பதிலளிக்க மறுக்கிறாய் – என்று அந்த மிருகத்திடம் இன்றுவரை கேட்கவில்லை, இந்தியாவும் சர்வதேசமும்!

கொல்லப்பட்டவர்களுக்கான குரலை மதிக்க மறுக்கிற இந்த மூலவர்கள், கொலைகார இலங்கையைக் காப்பாற்றுவதென்றால் மட்டும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வருகிறார்கள். இலங்கையில் ஆட்சி மாறிவிட்டதால் அவர்களை அவர்களே விசாரித்துக் கொள்ள அவகாசம் கொடுக்க வேண்டும் – என்று வெட்கமேயில்லாமல் வாய்தா வாங்கிக் கொடுத்தவர்கள் இவர்கள் தான்.

இந்தியாவும் சர்வதேசமும் கொடுத்த நெருக்கடியால்தான், இந்த வாரம் வெளியிட இருந்த இலங்கை தொடர்பான அறிக்கையை செப்டம்பருக்குத் தள்ளிவைத்தது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம். செப்டம்பருக்குள் இலங்கை ஒரு நியாயமான விசாரணையைத் தொடங்கிவிடும் – என்று உத்தரவாதம் கொடுத்த இந்த மகானுபாவர்களின் பின்னந்தலையில், ஒரே வாரத்தில் ஓங்கி அடித்திருக்கிறது இலங்கை. செப்டம்பரில் ஐ.நா. அறிக்கை வந்த பிறகு எப்படி விசாரிபதென்று பரிசீலிப்பார்களாம்!

முதலில், தன்னைத்தானே இலங்கை விசாரித்துக் கொள்ள அவகாசம் கேட்பது…..
அதற்காக, மார்ச்சில் வெளிவரவேண்டிய ஐ.நா. விசாரணை அறிக்கையை செப்டம்பருக்குத் தள்ளிவைக்கும்படி கோருவது….
செப்டம்பர் வரை வாய்தா வாங்கியதும், ‘ஐ.நா. அறிக்கை வரட்டும், அதற்குப் பிறகு விசாரிக்கிறோம்’ என்று அடம்பிடிப்பது….
இலங்கை என்ன செய்கிறதென்று புரிகிறதா உங்களுக்கு?

இந்தியா என்கிற தமிழின விரோத நாட்டையும், சர்வதேசம் என்கிற வியாபாரச் சந்தையையும் ஏமாற்றி, குற்றவாளிக் கூண்டில் ஏறாமலேயே தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை. என்னை நானே விசாரித்துக் கொள்வேன் – என்று சொல்லிச் சொல்லியே காலம் முழுக்க வண்டி ஓட்டப் பார்க்கிறது அது. அதற்கு மண்டையிடியாக இருப்பது – விக்னேஸ்வரனின் தீர்மானம் ஒன்றுதான்.

நடந்தது இனப்படுகொலை – என்று சொன்னதுடன் நின்றுவிடவில்லை விக்னேஸ்வரனின் தீர்மானம். சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது. பேதிக்கு சாப்பிடுபவன் மாதிரி பீதியில் இலங்கை ஆழ்ந்திருப்பதற்கு அதுதான் காரணம்.

விக்னேஸ்வரனின் தீர்மானம் குறித்தோ, சர்வதேச அளவில் அது எழுப்பியிருக்கும் அதிர்வுகள் குறித்தோ இந்திய ஊடகங்களுக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அதை அறிந்தே அறியாதவர்கள் போல் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார்கள் இவர்கள். நடந்தது இனப்படுகொலைதான் என்பதை இங்கேயுள்ள தமிழர்கள் தெரிந்துகொண்டு விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம் இவர்களுக்கு!

தமிழன் தலையில் மசாலா அரைக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை, என்னைப் போலவே நீங்களும் கவனித்திருக்கக்கூடும். எப்போதெல்லாம், இனப்படுகொலை தொடர்பான விவாதம் சூடு பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் ‘அவர் இருக்கிறாரா இல்லையா’ என்கிற கேள்வி பூதாகரமானதாக நம் முன் வைக்கப்படும். நாம் அந்தக் கவலையிலேயே ஆழ்ந்துவிடுவோம். நம் விரலாலேயே நம் கண்ணைக் குத்துகிற முயற்சி இது!

இலங்கை காட்டிய உடல் பிரபாகரனின் உடல்தான் என்றால், ஒரே ஒரு சர்வதேச ஊடகம் கூட அந்த உடலைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லையே, ஏன்? இந்த எளிய கேள்விக்குக் கூட இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை இலங்கையால்!

அது பிரபாகரனின் உடல்தான் என்று இங்கேயிருந்துகொண்டே சான்றிதழ் வரைகிறவர்களெல்லாம் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிங்கள அரசு உண்மையைத் தவிர வேறெதையும் பேசாது என்று உறுதியாக நம்புகிறவர்கள் அவர்கள். நூற்றுக்கு நூறு விவரம் தெரிந்தவர்கள் அவர்கள்தான் என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொள்கிற நான், அந்த நண்பர்களிடம் பணிவன்போடு கேட்கிறேன்……
“அது பிரபாகரனின் உடல்தான்…..
நீங்கள் சொல்வதால் அதை நானும் ஏற்கிறேன்.
அதே சமயம், விவரம் தெரிந்த உங்களைக் கேட்கிறேன்….
கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளின் உடல்கள் எங்கே?”
விவரம் தெரிந்த அந்த மேதாவிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒன்றரை லட்சம் பேர் எங்கே – என்று ராயப்பு ஜோசப் கேள்வி கேட்கும் போதெல்லாம், நமக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஒன்று இரண்டல்ல…. ஒன்றரை லட்சம் உறவுகளின் உடல்கள் சிதறிக் கிடக்கிற காட்சியை நினைத்தால் மனிதனாகப் பிறந்த எவருக்கும் உறக்கம் வராது. நன்றாக உறங்கி எழுந்துவிட்டு, ‘அவர் இல்லப்பா’ என்று போதிக்கிறவர்கள் எதைச் சாதிக்கப் பார்க்கிறார்கள்?

யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்… என்கிற கேள்விகளுக்குள் நுழைந்தோமென்றால், நாம் தொலைந்து போய்விடுவோம். நாம் கேட்க வேண்டிய கேள்வி – “எங்கே அந்த ஒன்றரை லட்சம் பேர்? அவர்கள் உயிருடன் இல்லையென்றால், அவர்களது உடல்கள் எங்கே” என்கிற ஒற்றைக் கேள்விதான்!

தமிழ் மக்களைத் தட்டி எழுப்பக்கூடிய இந்தக் கேள்வியை மழுங்கடிப்பதற்காக அல்லாமல் – வேறெதற்காக ‘பிரபாகரனுக்கு ராஜபக்சே பணம் கொடுத்தான்’ என்கிற பொய்ப்பிரச்சாரமெல்லாம் நம் வீட்டு சமையலறை வரை கொண்டுவரப் படுகிறது என்று நினைக்கிறீர்கள்?

பிரபாகரன் பணம் வாங்கினார் – என்பது இலங்கை மிருகத்தின் அருவருப்பான அவதூறு. அப்படியொரு அவதூறை எம்மிடையே பரப்ப முயலுவோர், இலங்கைக்கு பத்துபைசா செலவு வைக்காமல் இலவச சேவை செய்ய வாய்ப்பேயில்லை. அந்த நண்பர்களிடம் நேரடியாகவே கேட்கிறேன் – “இப்படியொரு அவதூறைப் பரப்ப இலங்கை எவ்வளவு கொடுத்தது? அது உங்களுக்கு நேரடியாகத் தரப்பட்டதா…. அல்லது உங்கள் நிறுவனத்துக்குத் தரப்பட்டதா?” அவதூறு பரப்ப மட்டும் வாசல் திறக்கிறீர்களே…. இந்தக் கேள்விக்கு வாயைத் திறந்து பதில் சொல்லுங்கள் நண்பர்களே!

SHARE