இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நான் முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்கமாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன்.
இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிலடிகொடுத்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா தொண்டமனாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு:- அமைச்சர் ஒருவர் ‘கருடா சௌக்கியமா? என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து அவர் பேசியுள்ளார். மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைத்தோம்.
ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார்.
நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துக் கொள்கின்றேன். தென் இந்தியாவில் பாதுகாப்பாக ஒரு தனியிடத்தில் இருத்தப்பட வேண்டியவர் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எல்லாவற்றையும் முட்டாள்கள் ஆக்கி அவற்றில் அங்கம் வகித்து தனக்கெதிராக தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிராந்தில் இருந்து இது வரையில் அவர் தப்பி இருந்து வருவது அவரின் கெட்டித் தனத்தைக் காட்டுகிறது.
அதற்காக அவர் எவரை வேண்டுமானாலும் அடிவருடி, அவர்களுக்கு அடிமையாகச் செயற்ப்பட்டு தனது காரியத்தினைச் சாதித்து வருவதையும் நான் அறிவேன். ஆனால் சில நேரங்களில் தம்மைக் கெட்டிக்காரர்களாக அடையாளம் காண்பவர்கள் தாமே முட்டாள்கள் ஆகின்றார்கள். அப்படி ஏதாவது நண்பர் டக்ளஸ்க்கு நடந்தால் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப் பட்டால் நான் அவரை முட்டாள் என்று அழைக்க மாட்டேன்.
முதலமைச்சர் என்றும் அழைக்க மாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். சிலரை எக்காலமும் ஏமாற்றலாம். பலரை ஒரு சில தருணங்களில் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நண்பர் அறிந்து வைத்திருந்தால் நல்லது.- என்றார்.