ஆர்யாவுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு பயந்தேன்!கார்த்திகா ஃபீலிங் 

429




கேரளாவில் எங்க எஸ்டேட்ல சொந்த பந்தங்களை மீட் பண்ணினேன்.. ஒரு வார ரெஃப்ரெஷ்மென்ட்டுக்குப் பிறகு இப்போதான் மும்பை திரும்பினேன்’’ – ஜாலி மூடில் இருக்கிறார் கார்த்திகா. ‘அண்ணா’ எனக் கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத நாகரிகம் தெரிஞ்ச பொண்ணு. ‘‘இந்த வருஷம் எனக்கு ஆக்ஷன் வருஷம்’’ என அவர் துவங்க, முத்துகள் சிதறுகின்றன.‘‘‘‘புறம்போக்கு’ படத்தில் கார்த்திகாவையும் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்கள்’ எனச் சொல்லியிருக்கிறாரே ஜனநாதன்?’’

‘‘ஆமாம்… உண்மைதான். இதுவரை நான் நடிச்ச படங்கள்ல, பவர்ஃபுல் கேரக்டர் இதுலதான் அமைஞ்சிருக்கு. ஹீரோ மாதிரி டிஷ்யூம், டிஷ்யூம் போட்டோ, கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கியோ ஃபைட் போடலை. படத்துல என்னோட கேரக்டர் பெயர் குயில். பெயர்தான் ஸ்வீட். ஆனா, டெர்ரர் கேர்ள். குலு மணாலியில கொட்டுற பனியில டான்ஸ், ராஜஸ்தான்ல ஒட்டக ரேஸ்னு நிறைய விஷயங்கள் ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கேன்.

அஞ்சு நிமிஷம் நிக்கக் கூட முடியாத பாலைவன மணல்ல ஒட்டகத்துல ரேஸ் போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அரை மணி நேரத்தில அந்த சவாரியை கத்துக்கிட்டு நடிச்சேன். ஜனநாதன் சார் ரொம்பக் கண்டிப்பானவர்னு சொன்னாங்க. ஆனா, உதவியாளர்களைக் கூட ரொம்ப மரியாதையா நடத்துறார்.

முதல்நாள் ஷூட்டிங்ல என்னை அவர் ‘மேம்’னுதான் கூப்பிட்டார். கிண்டல் பண்றார்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, அவர் குணமே எல்லாரையும் மரியாதையா நடத்துறதுதான்னு!’’ ‘‘ஆர்யாவோட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?’’

 

‘‘ஆர்யா ஜாலி டைப். ஆனா, கேமரா முன்னாடி பயங்கர சீரியஸ் பார்ட்டி. குலு மணாலியில டான்ஸ் ரிகர்சல் பண்ணினோம். ரிஸ்க்கான மூவ்மென்ட் கொடுத்தாங்க. ‘அது வேணாம்… மாத்துங்க’ன்னு ஆர்யாவால சொல்ல முடியும். ஆனா, ஆர்யா சொல்லலை. அந்த ஸ்டெப்பை ப்ராக்டீஸ் பண்ணிட்டிருந்தார்.

என்கிட்ட டிரைவிங் லைசென்ஸ் இருக்கு. ஆனா, நான் அவ்வளவா கார் ஓட்டினதில்லை. இந்தப் படத்துல வேகமா கார் ஓட்ட வேண்டிய சீன் இருந்தது. பக்கத்துல ஆர்யா உட்கார்ந்திருப்பார். அவர் ரொம்ப தைரியமாதான் இருந்தார். அவருக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு எனக்குத்தான் செம உதறல். இதில் ஆர்யாவுக்கும் எனக்கும் ஈக்குவலான ரோல்!’’‘‘ஷாம், விஜய்சேதுபதி..?’’

‘‘ஷாம் ஸ்பாட்ல எப்பவும் செம ஜாலியா, எனர்ஜியா இருப்பார். விஜய்சேதுபதி ரொம்ப சைலன்ட். முதல் நாள் ஷூட்டிங்லதான் அப்படி. ஆனா, அடுத்தடுத்த நாட்கள்ல அவரும் ஃப்ரெண்ட்லியா பழக ஆரம்பிச்சிட்டார். அவர் கூட சேர்ந்து நடிக்கிற சீன்கள் இன்னும் ஷூட் பண்ணலை. அதுக்காக நான் சென்னை வரவேண்டி யிருக்கு!’’‘‘அருண்விஜய் உங்களுக்கு ரொம்ப க்ளோஸ்னு சொல்றாங்க..?’’

‘‘ ‘டீல்’ படத்துல நடிக்க ஆரம்பிச்சதுல இருந்து அவர் எனக்கு ஃப்ரெண்ட். அவர் மட்டுமில்லாம, அவரோட மனைவி, பிரதர் இன்-லா ஹேமந்த் எல்லாருமே என்னை அவங்க ஃபேமிலியில ஒருத்தராதான் நினைக்கிறாங்க. சென்னை வந்தா அவங்க வீட்டுக்கு போவேன். ‘டீல்’ ஷூட்டிங் முடிஞ்சு, இப்போ ரீரெக்கார்டிங் போயிட்டிருக்கு!’’

‘‘தெலுங்கிலும் ஆக்ஷன்தானாமே?’’

‘‘அல்லரி நரேஷோட நடிச்ச, ‘பிரதர் ஆஃப் பொம்மலி’, தீபாவளி முடிஞ்சு ரிலீஸ் ஆகுது. இந்த வருஷம் நான் நடிச்ச படங்கள் எல்லாமே ஆக்ஷன்தான். அந்தப் படத்தோட கதையை டைரக்டர் சொன்னப்ப, ‘ஹீரோ போர்ஷன் சொல்லிட்டிருக்கார் போல… என்னோட கேரக்டர் அடுத்து சொல்வார்’னு எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

கடைசியில, ‘இதெல்லாத் தையும் ஹீரோ மாதிரி நீங்கதான் பண்றீங்க’னு சொல்லிட்டார். அதில், ரோப் கட்டி ஃபைட் பண்ணியிருக்கேன். அல்லரியும் நானும் ட்வின்ஸ். டைட்டில்ல இருக்கற பொம்மலி நான்தான்!’’‘‘நீங்களும் ஹன்சிகாவும் ஒரே ஸ்கூல்ல படிச்சவங்கதானே… இப்ப, டச்ல இருக்கீங்களா?’

‘‘மும்பையில நான் படிச்ச ஸ்கூல்லதான் ஹன்சிகாவும் படிச்சாங்க. ஆனா, அவங்க எனக்கு ஒரு வருஷம் சீனியர். ஹன்சி என் வெல் விஷர். அப்பப்போ பேசிக்குவோம். தெலுங்குல த்ரிஷா கூட ஒரு படம் நடிச்சதிலிருந்து அவங்களும் நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். மோகன்பாபு சார் ஃபேமிலியில லட்சுமி மஞ்சு, தமிழ்ல சோ னியா அகர்வால்னு ஒரு சில ஃப்ரெண்ட்ஸோட டச்ல இருக்கேன்!’’‘‘ ‘யான்’ல துளசி எப்படி?’’

‘‘மும்பையில ‘யான்’ ரிலீஸ் ஆகலீங்க! படம் இன்னும் பார்க்கலை. துளசி இப்போ பிளஸ் டூ… ஸோ, சின்சியரா படிக்க ஆரம்பிச்சிட்டா. ஸ்கூல் போய்ட்டிருக்கா. ரொம்ப நாளைக்கு அப்புறம் மும்பையில எங்க வீட்ல எல்லாருமே ஒண்ணா சேர்ந்திருக்கோம். ஜனநாதன் சார் படம் ஷூட் இல்லேன்னா, தீபாவளியைக் கூட மும்பையிலதான் ஃபேமிலியோடு கொண்டாடறதா ப்ளான்!’’‘‘மறுபடியும் பாரதிராஜா கூப்பிட்டா, நடிப்பீங்களா?’’

‘‘ ‘அன்னக்கொடி’ பத்தி எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனா, ஒரு நடிகையா பார்த்தா, எனக்கு நல்ல ஸ்கோப் உள்ள படம் அது. ஆக்டிங் கத்துக்கிட்டு நான் நடிக்க வரலை. ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கும்போதே, நடிக்க வந்துட்டேன். பாரதிராஜா மாதிரி ஒரு லெஜெண்ட் நடிப்பு சொல்லிக் குடுத்தது என்னோட அதிர்ஷ்டம். அந்த ஒரு படத்தில் யதார்த்தமான நடிப்பு பத்தி நிறைய கத்துக்கிட்டேன். அவர் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கக் காத்திருக்கேன்!’’

 

SHARE