மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமித்துள்ளதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது, இனங்களுக்கிடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, மேலும் மேலும் குரோதத்தையும், இன முரண்பாடுகளையுமே தோற்றுவிக்கும் என்று கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது. இது போன்ற சந்தர்ப்பம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் இன்னும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக அம்மக்களின் மனங்களை புண்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகிறது.
வடக்கில் அளவுக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி விட்டு அங்கு சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தாம் நினைப்பதைத் தான் செய்வோம். என்பதை இந்த அரசாங்கம் நிரூபித்துள்ளது. சாதாரணமான ஒரு ஆளுநர் நியமன விடயத்தில் விட்டுக் கொடுக்காத இந்த அரசாங்கம், தமிழர்கள் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கப்போகிறது. எனவே தேசிய பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது” என்றுள்ளார்.
TPN NEWS