இந்தியா ஹாட்ரிக் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

416

இலங்கை அணிக்கு எதிரான 3–வது போட்டியிலும் இந்தியா வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஜெயவர்தனே சதம் அடித்தார். அவர் 118 ரன்னும், தில்சான் 53 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் விளையாடிய இந்தியா 44.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 3–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

ஏற்கனவே முதல் 2 ஆட்டத்திலும் இந்திய அணி இலங்கையை அபாரமாக வென்று இருந்தது. தொடக்க வீரர் தவான் 91 ரன்னும், வீராட் கோலி 53 ரன்னும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:–

இலங்கை அணியை 242 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது மிகவும் முக்கியமானது. இதற்கு அபாரமான பந்துவீச்சே காரணம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். 243 ரன் இலக்கை இந்த ஆடுகளத்தில் எடுப்பதில் எந்த சிரமும் இல்லை.

அதிவேகத்தில் 6 ஆயிரம் ரன்னை எடுத்து விவிலியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ரன்னை எடுத்தால் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை புரிய முடியும் என்று எனக்கு தெரிந்து இருந்தது.

ஆனால் அதை செய்ய முடியுமா? என்பது உறுதியாக தெரியாது. நானும் எனது அணி வீரர்களும் எங்களால் எது முடியுமோ அதை முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறும்போது, மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது. மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம்.

தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை. இந்தியாவின் ஆடுகளங்களில் 300 ரன் குவிப்பது கட்டாயமாகும். 242 ரன்னை வைத்து பவுலர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் 4–வது போட்டி வருகிற 13–ந் திகதி கொல்கத்தாவில் நடக்கிறது.

SHARE