இனிது இனிது வாழ்தல் இனிது!

709

மாற்றக் கூடியதை மாற்று… மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்… ஏற்றுக்கொள்ள முடியாததை மறந்து விடு… முதலாவதும் மூன்றாவதும் யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியம். சற்றே சிரமமான இரண்டாவது விஷயம் மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். குறிப்பாக உறவுகளுக்குள் சிக்கல் வராமலிருக்கச் செய்கிற மகத்தான மந்திரமும்கூட!

வாழ்க்கைத்துணையோ, வேறு உறவோ… ஒருவரிடம் நமக்கு சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? அவரிடம் நமக்குப் பிடிக்காத விஷயங்களைச் சொல்லிச் சொல்லி, அப்செட் ஆக்குவதுடன், அந்த விஷயங்களை மாற்றத் துடிப்பது…அல்லது அந்த விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுடன், அவற்றை பிரச்னைகளின்றிக் கையாளவும் கடந்து போகவும் வேறு சாத்தியங்கள் உள்ளனவா என்று யோசிப்பது. இதில் முதல் அணுகுமுறை எல்லோரும் செய்வது. இரண்டாவது அணுகுமுறை பக்குவமான மனிதர்களுக்கானது.

ஒரு சிறிய உதாரணம்… 

2-3 வயதுக் குழந்தை… ஒரு நிமிடம்கூட ஒரு இடத்தில் உட்காராது. எதையாவது எடுப்பதும், பிடித்து இழுப்பதும், உடைப்பதுமாக துருதுருவென இருக்கும். இந்தக் குழந்தையை இரண்டு விதமாக அணுகுவார்கள் அம்மாக்கள். ‘புள்ளையா இது… பிசாசு… ஒரு இடத்துல அடங்கி உட்காருதா… எப்பப் பார்த்தாலும் எதையாவது போட்டு உடைச்சுக்கிட்டு…’ என அந்தக் குழந்தையை அடித்து, மிரட்டி, அடக்குபவர்கள் ஒரு ரகம்.

‘குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும். துருதுருனு இருந்தாத்தான் அது குழந்தை. குறும்பு பண்ணாம ஒரே இடத்துல உட்கார்ந்திருந்தாதான் பிரச்னை…’ என சிரிப்போடும் சகிப்போடும் அணுகு கிறவர்கள் இன்னொரு ரகம். இதில் 2வது ரக அணுகு முறைதான் மிகச்சரியானது. குழந்தையின் இயல்பு தெரிந்து, அதை அப்படியே ஏற்றுக் கொள்கிற அந்த மனோபாவம்தான் பக்குவமானது. குழந்தை வளர்ப்பில் தேவைப்படுகிற இதே அணுகு முறைதான், வாழ்க்கையில் எல்லா உறவுகளிடமும் அவசியப்படுகிறது.

குறிப்பாக கணவன்-மனைவிக்கிடையில்!

சரிதாவின் கணவர் பிரபுவுக்கு ஒரு கெட்ட பழக்கம். உடுத்திக்கொண்ட உடையாகட்டும், துவட்டிக்கொண்ட டவலாகட்டும், அவற்றை அதற்கென உள்ள இடத்தில் ஒரு போதும் போட மாட்டார். நின்ற நிலையில் சுருக்கங்களுடன் அவிழ்த்துப் போட்ட பேன்ட்டையும், ஈர நைப்புடன் கசக்கி எறிந்த டவலையும், பனியனோடு சேர்த்து உருவி எறியப்பட்ட டிஷர்ட்டையும் பார்க்கிற ஒவ்வொரு முறையும் சரிதாவுக்கு கோபம் தலைக்கேறும். திட்டிப் பார்த்தார். சண்டை போட்டுப் பார்த்தார். இரண்டு நாட்களுக்கு அந்த உடைகளை எடுக்காமல் அப்படியே கிடக்கட்டும் என்று விட்டுப் பார்த்தார். எதற்கும் பலனில்லை. மூன்றாவது நாள், சரிதாதான் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

ஒருநாள் பிரபுவுடன் வேலை பார்க்கிற மாதவியை சந்தித்தார் சரிதா. பார்த்த கணத்திலிருந்து, மாதவி, பிரபு புராணம் பாடித் தீர்த்தார். அலுவலகத்தில் பிரபுவின் வேலைத் திறமைகளைப் பற்றியும், அவருக்குக் கீழ் வேலை பார்க்கிறவர்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்தும் விதம் பற்றியும், இன்னும் வேலையிடத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும் மாதவி சொல்லச் சொல்ல, சரிதாவுக்கு ஆச்சரியம்.

அன்றிலிருந்து தன் கணவரின் கெட்டப் பழக்கத்தை சுட்டிக் காட்டு வதையோ, அதற்காக சண்டை போடுவதையோ நிறுத்திக் கொண்டார் சரிதா. ‘இப்படியொரு மனுஷனையா நாம இத்தனை நாளா திட்டினோம்’ என நினைத்துக் கொண்டதோடு, கணவரிடம் தனக்குப் பிடிக்காத அந்தப் பழக்கத்தைக் குறையாகப் பார்க்காமல், ஏற்றுக்கொள்ளப் பழகினார். இன்றும் பிரபு மாறவில்லை. ஆனாலும், அவர் அவிழ்த்துப் போடுகிற சட்டையோ, உலர்த்த மறக்கிற டவலோ, சரிதாவுக்கு எரிச்சலைத் தருவதில்லை!

இதுதான் ஏற்றுக்கொள்கிற மனோபாவம். அதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகிற ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பியாக வேண்டும் என்று அவசியமில்லை. விரும்புவதென்பதும் ஏற்றுக்கொள்வதென்பதும் வேறு வேறு. ஏற்றுக்கொள்கிற மனநிலைக்குத் தயாராவதன் மூலம் ஒரு விஷயம் குறித்த சண்டை தவிர்க்கப் படுகிறது. அதற்கான வேறு தீர்வுகளை யோசிக்க வைக்கிறது.
ஆனால், துணையின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை மாற்ற முயற்சிக்கும் உங்கள் அணுகுமுறையில் என்ன நடக்கும் தெரியுமா?

துணை நெகட்டிவாகத்தான் பேசுவார், நடந்து கொள்வார் என்கிற முன்தீர்மானத்துடன்தான் பேச்சையே தொடங்குவீர்கள்.

‘உன் பேச்சே சரியில்லை… நீ செய்யறது சரியில்லை…’ என துணையிடம்தான் குறைபாடுகள் என்பதை உங்களது பேச்சின் தொனியே காட்டிக் கொடுத்து விடும்.

அதன் அடுத்தகட்டமாக உங்கள் இருவருக்குமான வாக்குவாதம் வளர்ந்து, மிகப்பெரிய சண்டையில் போய் நிற்கும்.

உங்கள் இருவருக்கும் இடையில் நெருக்கத்துக்கு வாய்ப்பின்றிப் போகும். காதலும் அன்பும் காணாமல் போகும்.

இருவருக்குமான பிரச்னை முடிவுக்கு வர வாய்ப்பின்றி வளரும். அதுவே துணையின் நடவடிக்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதால் என்னாகும் தெரியுமா?

உங்களுக்குப் பிடிக்காத விஷயமாகவே இருக்கட்டும். ஆனாலும், உங்கள் துணை சரியாகக் கூட இருக்கலாம் என ஏற்றுக்கொண்டு பாருங்கள். பிரச்னைக்கான தீர்வுகளைப் பற்றி யோசிப்பதுடன், உங்களை நீங்களே பக்குவப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

கோபத்தையோ, வெறுப்பையோ மனதில் வைத்துக்கொண்டு இந்த ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்குப் பழகாதீர்கள். அது சரியானதாக இருக்காது. கோபத்தைத் தவிர்த்து இதற்குப் பழகினால், உங்களுக்குப் பிரச்னையின் வீரியமும் முக்கியத்துவமும் நீர்த்துப் போய், ஒரு கட்டத்தில் அந்தப் பிரச்னை காணாமலே போகும்.

உங்களிடம் காணப்படுகிற மாற்றத்தைப் பார்த்து, உங்கள் கணவரும் ஒரு கட்டத்தில் மாறத் தொடங்குவார்.இந்த ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை எல்லா மனிதர்களிடமும் செயல்படுத்த முடியாது. அதாவது…

குடிப்பழக்கம், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடமோ…

துணையை தகாத வார்த்தைகளில், அநாகரிகமாகப் பேசுகிறவர்களிடமோ…

பாலியல் ரீதியாக தன் துணையிடம் நேர்மையின்றி நடப்பவர்களிடமோ…

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், வன்முறையைப் பிரயோகிப்பவர்களிடமோ…

துணையுடன் வாழ்க்கையைத் தொடர்வதே அர்த்தமற்றது என உணரச் செய்கிறவர்களிடமோ… இந்த அணுகுமுறை சாத்தியப்படாது. இத்தகைய மனிதர்களிடம் இது எந்தவித பலனையும் தராது.

இன்னும் சில விஷயங்கள்…

ஒரு பிரச்னை எழும் போது, அதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பில்லை, உங்கள் துணைதான் காரணம் என நினைத்து, துணையை மாற்ற முயற்சிக்காதீர்கள். அதற்குப் பதில், அந்தப் பிரச்னையை அப்படியே அதன் போக்கில் கடக்க அனுமதியுங்கள். என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என அமைதியாக இருப்பதுகூட, அந்த விஷயத்தில் நம்ப முடியாத ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்.

ஏற்றுக்கொள்வது என்கிற முயற்சியை விட்டுக் கொடுத்துப் போவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கோபத்துடன் பொறுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் துணை கோபமாகப் பேசும் போதோ, அடிக்கும் போதோ, சண்டை போடும் போதோ, அவற்றையெல்லாம் உங்களால் திருப்பித் தர முடியாது என அர்த்தமில்லை. ஆனால், ஏற்றுக்கொள்ளப் பழகுகிறீர்கள் என்பதன் மூலம் உங்களுடைய மன முதிர்ச்சியை நீங்களே செதுக்கிக் கொள்கிறீர்கள், வளர்ச்சியடைகிறீர்கள் என்றே அர்த்தம்.

துணைக்கென சில குணாதிசயங்கள் இருக்கலாம். அமைதியோ, ஆக்ரோஷமோ… அது அவரது சுபாவம். அந்த அடிப்படை குணத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நீங்கள் காண்கிற பிரச்னைகளை, அவரது சுபாவத்தின் காரணமான ஒரு வடுவாக நினைத்து ஏற்றுக் கொள்ளுங்கள். அதையும் மீறி, அவர் எரிச்சல் அடைகிறார், கோபப்படுகிறார் என்றால், அது அவரது பிரச்னை. அதைப் பற்றி நீங்கள் வருத்தப்படவோ, துக்கப்படவோ தேவையே இல்லை!

ஒரு பயிற்சி

சற்றே சிரமமான பயிற்சிதான். பழகிவிட்டால், எப்பேர்ப்பட்ட பிரச்னையும் உங்களுக்கு தூசுதான். உங்கள் துணை சரியான நச்சரிப்பு பேர்வழியாக இருக்கலாம். தொட்டதற்கெல்லாம் கோபப்படுகிறவராக இருக்கலாம். எதையும் குற்றப் பார்வையிலேயே பார்க்கிறவராக இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எதையுமே கண்டு கொள்ளாதீர்கள். உங்களை எரிச்சலடையச் செய்கிற அந்த குணாதிசயங்களைக் கண்டு கொள்ளாமல் அமைதி காக்க, மிகப்பெரிய மனோதிடம் வேண்டும். அது சட்டென எல்லோருக்கும் கை வந்து விடாது. ஆனாலும் மெல்ல மெல்ல பழகி விட்டீர்களானால், உங்கள் துணை ஒரு கட்டத்தில் நொந்து போவார். தன்னை எதிர்க்க ஆளின்றி வெறுத்துப் போவார். தோற்றுப் போவார். அதன் விளைவாக மாற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார். ஏனென்றால், மாற்றம் ஒன்றுதான் மாறாதது!

SHARE