யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பல்களைக் கையளிக்கும் வைபவத்தையடுத்து இடம்பெற்ற சந்திப்பின் போதே அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் மொரிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது புகலிடம் கோரி சட்ட விரோதமாக படகுகளில் பயணிப்போரைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் இலங்கை கடல் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையிலுள்ள உறவுகளை அவுஸ்திரேலிய அமைச்சர் பாராட்டியுள்ளார்.
சட்டவிரோத புலம்பெயர்வைத் தடுக்கும் வகையில் இரு நாடுகளும் செயற்பட்டு வருகின்ற போதும், சில குழுக்கள் தொடர்ந்தும் அதனை ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய அமைச்சர், தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அமைச்சர், வடக்கில் நடைபெற்றுள்ள தேர்தல் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்பதையும் நாட்டின் செயற்பாடுகள் சிறந்த பயன்தரக் கூடியவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மேற்படி கண்காணிப்புக் கப்பல்களை அன்பளிப்புச் செய்தமை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.