வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்கள் உட்பட நாட்டின் 11 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தின் ஒருசில பகுதிகளில் 500 லீற்றர் நீர் 300 ரூபாவரை விற்கப்பட்டு வருகின்றது. இந்தப் பகுதி மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியில் அனர்த்த முகாமைத்துவ அலுவலகங்கள் திறக்கப்பட்டு மக்களின் நீர்த்தேவை இயன்றளவில் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியனாவல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வரலாறு காணாத இந்தக் கடும் வறட்சியால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம் ஆகிய 11 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டங்களில் கடந்த வருடத்தைவிட இவ்வருடம் குறைவான மழை வீழ்ச்சியே பெறப்பட்டுள்ளது. அத்துடன், தொடர்ந்து நிலவி வரும் வறட்சியான காலநிலையால் நிலைமை மேலும் விபரீதமாகிக் கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும், மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.