எமது மக்களின் பாதுகாப்புக்கு யாராவது உத்தரவாதம் வழங்கினால் பதவி விலகத் தயார்: ஹக்கீம்

671

அளுத்கம பேருவளையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்
அமைச்சுப் பதவியை துறப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.
சர்வதேச விசாரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் நாம் ஆதரவாக வாக்களிக்காமல் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்ததன் ஊடாக பலமான செய்தியொன்றை உலகுக்குச் சொல்லியிருக்கிறோம்.
பொலிஸார் பக்க சார்புடன் செயற்பட்டுள்ளமை வேதனையை அளிக்கிறது.
பொதுபலசேனாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
சர்வதேசத்திடம் முறையிட்டாவது எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன்.
Rauff Hakeem2அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சுப் பதவியை அவ்வாறு துறந்தால் மேலும் எமது மக்கள் மீது அட்டூழியங்கள், தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படப்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சுப் பதவியை துறப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை
அளுத்கம, பேருவளை, பதுளை மற்றும் வெலிப்பன்ன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து என்னைச் சிலர் அமைச்சு பதவியை துறக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அமைச்சுப் பதவியை துறப்பதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அவ்வாறு நான் அமைச்சுப் பதவியை துறந்தால் மேலும் எம் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அரசாங்கத்துடன் இருந்து கொண்டே எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு உந்துதலை கொடுப்பதே பலமான விடயமாகும். மேலும் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய நேரத்தில் சரியான தீர்மானத்தையும் எடுப்பேன்.
பாராளுமன்ற அமர்வுகள் புறக்கணிப்பு 
அளுத்கம, பேருவளை மற்றும் தர்ஹாநகர் பகுதிகளில் எமது மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் வாக்கெடுப்பில் அடையாள பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கத்தில் இருந்துகொண்டே இந்த அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் போது அவ்விடயம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும்.
அரசாங்கமே முழுப்பொறுப்பு
அளுத்கம, பேருவளை பதுளை மற்றும் காலியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். பதுளையில் இன்னமும் பதற்ற நிலை தொடருகின்றது. இங்குள்ள எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது இலட்சக் கணக்கான உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. தற்போது அவர்கள் அச்சத்துடனேயே இருக்கின்றனர்.
பாதுகாப்புத் தரப்பினர் மீது நம்பிக்கையில்லை
பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டனர். ஒரு நாட்டின் நீதியை நடைமுறைப் படுத்த வேண்டிய முழுப்பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. ஆனால் அளுத்கம சம்பவத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
பிக்குமீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை
சாரதியுடன் வாகனத்தில் சென்ற பிக்குவின் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை. ஆனால் பிக்கு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் பிக்கு மீது எவ்வித தாக்குதலும் மேற்கொள்ளவில்லை என அந்த பிரதேச மக்களே தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொலிஸார்  இவ்வாறு பக்கச்சார்பாக நடப்பதற்கு பின்னணியில் யாரோ இருக்கின்றார். முதலில் அவரை இனங்காண வேண்டும்.
பொதுபல சேனாவின் பின்னணியில் யார்?
அளுத்தகமவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அச்சம்பவம் அன்றே முடிவடைந்தது. ஆனால் இரு நாட்களுக்குப் பின்னர் பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட பேரணியால் வன்முறை வெடித்தது. பொலிஸாரின் ஆதரவுடனேயே இச்சம்பவங்கள் அரங்கேறின.
ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலர் இந்த அமைப்புக்கு எதிராக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எனினும் இந்த அமைப்புக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? மேலும் இந்த அமைப்பின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள சிலர் இருப்பது நன்றாக புலப்படுகின்றது. இதற்கு மேலும் நாம் அனுமதிக்க முடியாது. பொதுபல சேனாவுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தை இலக்கு வைத்தே தாக்குதல்
குறிப்பாக எமது மக்கள் மீது பொருளாதாரத்தை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அளுத்கமவில் இலட்சக் கணக்கான உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் புலப்படுகின்றது.
நிவாரணம்
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் எமது கட்சி உறுப்பினர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடி வருவதுடன் நிவாரணங்களை பெற்றுகொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை பொதுபல சேனாவினரை கைது செய்யவும் வேண்டும். அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கப் போகும் தீர்மானத்தை கருத்தில் கொண்டே எமது முன்னோக்கிய நகர்வுகள் காணப்படும்.
நவி பிள்ளையின் கருத்து சரியானதே 
மதக் கடும்போக்குவாதம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிலைப்பாடு சரியானதே. அதுவே இன்று அரங்கேறியுள்ளது.  எனவே முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேசத்தின் உதவி
நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. அரசாங்கம் இனியும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்குத் தெரியும். முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தையும் விளக்கியுள்ளேன். உள்நாட்டில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் சர்வதேசத்திடம் முறையிட்டாவது எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன்.
சர்வதேசம் முன் செல்வேன்
இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக   சர்வதேசத்தின் முன் செல்வதற்கும்  நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது மட்டுமன்றி சர்வதேசம் முன் செல்வதற்கும் தயங்கமாட்டேன்.
இதேவேளை   ஐககிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை வெளியிட்ட அறிக்கையை  இலங்கை நிராகரித்தாலும் அதில் சிறுபான்மை மக்கள் குறித்து  உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் உண்மையாகவே உள்ளன.
ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள்
சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுளின் விசேட அறிக்கையாளர் மற்றும்   மத உரிமைகளுக்கான  ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஆகியோர்   உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்காணிக்க     அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டும்.  மத விடயங்களில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் இவர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்
ஹர்த்தாலுக்கு ஆதரவு 
  முஸ்லிம் உரிமை  அமைப்பு நாடு முழுவதும்  நாளை வியாழக்கிழமை  ஹர்த்தாலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு  முஸ்லிம் காங்கிரஸ்    முழு ஆதரவையும் வழங்குகின்றது .
நன்றி-வீரகேசரி

 

SHARE