ஏமனில் பழங்குடியினர்- போராளிகள் கடும் மோதம்: 85 பேர் பலி

517
ஆசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் சமீப காலங்களாக சன்னி, ஷியா பிரிவு இன மோதல்கள் வலுத்து வருகின்றன. ஹாவ்திஸ் என்று அழைக்கப்படும் ஷியா பிரிவின் போராளிகள் சலாபி என்று அழைக்கப்படும் சன்னி பழங்குடியினரை எதிர்த்து கடந்த சில மாதங்களாகக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பழங்குடியின் இஸ்லா கட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டிலும், சலாபி ஆதிக்கத்தில் இருந்துவந்த சில பகுதிகளையும் ராணுவத்தின் உதவி பெற்றிருந்த ஹாவ்திஸ் போராளிகள் கைப்பற்றினர்.

சலாபி மக்களின் முக்கியக் கோட்டையாக இருந்த வடக்குப்பகுதி நகரமான சடாவில் இருந்த மத ஆய்வுப் பள்ளியையும் அவர்கள் மூடினர். இதனைத் தொடர்ந்து தலைநகர் சனாவின் வடமேற்கே உள்ள அம்ரான் நகரின் உள்ளும், புறமும் இந்த இரு பிரிவுகளுக்கு இடையேயான சண்டைகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமடையத் தொடங்கின.

இவர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சிகளோ, அமைதி ஒப்பந்தங்களோ எந்தப் பலனையும் தரவில்லை. தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த சண்டைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குறைந்தது 85 பேர் பலியாகியுள்ளதாக ராணுவ அதிகாரிகளும், பழங்குடித் தலைவர்களும் தெரிவித்தனர்.

அரசுதுருப்பு வீரர்களில் 11 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இரு பிரிவினரிடையே நடைபெற்றுவரும் சண்டையால் சனா- அம்ரான் இடையிலான சாலைப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது என்றும், இது தற்போது தலைநகரின் எல்லைப்புறத்திலும் விரிவடைந்து வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன.

வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளில் ஹாவ்தி போராளிகளின் கட்டுப்பாடு தொடர்ந்துள்ளபோதிலும் இஸ்லாமியப் போராளிகளை ஆதரிக்கும் அரசுதுருப்புகள் அம்ரான் நகரை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கையால் நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எரிபொருள், மருந்துகள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும். உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அங்குள்ள செயல் ஆர்வலரான மஹ்மூட் தஹா தெரிவிக்கின்றார்.

SHARE