ஐ.நா. அறிக்கையை வரவேற்று சுமந்திரன் கருத்து!-தமிழருக்கு நீதி – தீர்வு கிடைக்க சிறந்த சந்தர்ப்பமாம்! 

343

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவும் நல்லதொரு சந்தர்ப்பம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என்று நேற்று ஜெனிவாவில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று ஜெனிவாவில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அறிக்கையில் படையினரின் பாரிய குற்றங்கள் சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. நாம் கோரியவாறு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கவில்லை. அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ள. எனவே, ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால்தான் தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி – தீர்வு கிடைக்கும்” – என்றார்.

SHARE