ஒபாமாவின் ஆதரவினைப் பெற பல மில்லியன் டொலர்களை அழித்த இலங்கை:- அம்பலம்

449

இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான யோசனை மற்றும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை என்பன தமது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற அடிப்படையில், தமது அரசாங்கத்தின் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் வகையில் பல மில்லியன் டொலர்கள் செலவில் இந்த பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களின் சேவை பெற்றுக்கொள்ளப்படுகிறது.

mahinda rajapaksa and china

இலங்கையின் வெளியுறவு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாஸ் குணவர்த்தன பல மில்லியன் பெறுமதியான இதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுகின்ற போதும் சஜின் வாஸ் குணவர்த்தனவே ஜனாதிபதி மஹந்த ராஜபக்சவின் சார்பில் வெளிநாடுகளில் முக்கிய பங்கை ஆற்றிவருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தநிலையில் வாஸ் குணவர்த்தன இலங்கையில் உள்ள பொய்யான ஒரு முகவரியையே அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவன உடன்படிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.

இலங்கையின் மதிப்பை உயர்த்தும் இந்த திட்டத்துக்காக சொகுசு டெக்ஸி சாரதிக்கும் கூட பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதிப் பரிமாற்றங்கள் யாவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நீதி திணைக்களத்தினால் சேரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமே தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கைகள் “பாரா” என்ற அமெரிக்காவின் வெளிநாட்டு முகவரக பதிவுக்கு கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பதிவுகள், அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த உடன்படிக்கைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு நெருங்கக்கூடிய வாய்ப்புக்களையும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது.

obamag

சஜின் வாஸ் குணவர்த்தன கைச்சாத்திட்டுள்ள இந்த உடன்படிக்கை தொடர்பான ஆவணம் ஜூன் 2 ஆம் திகதியே வெளியானது.

இதன்படி குணவர்த்தன, அமெரிக்காவின் பெல்ட்வே என்ற அரசாங்க திட்ட இணைவு என்ற பொதுமக்கள் உறவு நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த நிறுவனம், 624-1/2, வின்சன்ட் பர்க், ரெடோன்டோ பீச், லொஸ் ஏஞ்சல்ஸ் என்ற முகவரியில் அமைந்துள்ளது.  எனினும் இந்த நிறுவனத்துக்கு எவ்வளவு தொகையை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது என்ற விபரம் வெளியாகவில்லை.

ஏனெனில் இந்த உடன்படிக்கை தொடர்பான அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை தவிர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய அதிகாரியான பாகிஸ்தான் வம்சாவளியான இமாட் சுபேரிக்கும் கொடுப்பனவை செலுத்தி அமெரிக்க ஜனாதிபதிக்கு நெருங்கிச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவர் ஏற்கனவே இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் சலீம் மான்ட்விவாலாவே சுபேரியை இலங்கையின் ஆளும் கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சுபேரியே இலங்கை அரசாங்கத்துக்கு பொதுமக்கள் தொடர்பு நிறுவனமான பெல்ட்வே அரசாங்க திட்டம் என்ற நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளரான மொஹமட் கான் என்பவரும் பாகிஸ்தானியராவார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் சஜின் வாஸ் குணவர்த்தன வழங்கியுள்ள முகவரியை ஆங்கில ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

இலக்கம்- 9/2, டட்லி சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 8 என்ற முகவரியே இந்த உடன்படிக்கைக்காக சஜின் வாஸினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகவரியில் தற்போது கொரியன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் அந்த அலுவலகத்தில் சஜின் குணவர்த்தனவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் கொஸ்மொஸ் விமான நிறுவனம் அமைந்திருந்தது.

இந்த நிறுவனத்தின் ஹெலிகொப்டர்களிலேயே சஜின் வாஸ் பாசிக்குடா போன்ற இடங்களுக்கு பயணம் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சஜின்வாஸ் குணவர்த்தன, ஏன் இந்த முகவரியை தமது உடன்படிக்கைக்கு வழங்கினார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் பாரா அறிக்கை வெளியாகி 20 நாட்களுக்குள் அமெரிக்காவின் மற்றும் ஒரு பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் திகதி இந்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. பேர்சன் -மார்ஸ்டெல்ல் எல்எல்சி என்ற நிறுவனத்துடன் இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு மாதாந்தம் 75ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் வழங்கும் வகையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையிலும் சஜின் வாஸ் குணவர்த்தன, டட்லி சேனாநாயக்க மாவத்தை முகவரியையே பயன்படுத்தியுள்ளார்.

இரண்டு சந்தர்ப்பங்களில் சஜின் வாஸ் குணவர்த்தன இந்த முகவரியை பயன்படுத்தியிருப்பது குறித்த உடன்படிக்கைகளில் அரசாங்கத்தின் பங்கு இல்லை என்பதை காட்டுவதற்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த இரண்டு உடன்படிக்கைகளின்படி அமெரிக்காவின் பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்கள், அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையில் கட்டியெழுப்புவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு உடன்படிக்கைகளும் அமெரிக்காவின் முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவின் காலத்திலேயே சஜின் வாஸினால் இறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் மேலும் இரண்டு அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் இந்த ஜூன் மாதத்தில் இருந்து உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

வோசிங்டனில் அமைந்திருக்கும் மாடிசன் குரூப்புடனான பதிவு ஜூன் 10 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு மாதம் ஒன்றுக்கு 15ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையிலும் சஜின் வாஸ், டட்லி சேனாநாயக்க மாவத்தை முகவரியையே பயன்படுத்தியுள்ளார்.

இதனை தவிர மற்றும் ஒரு பொதுமக்கள் தொடர்பு நிறுவனமான ஆர் என்ட் ஆர் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஜூன் 23 ஆம் திகதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் ஜனாதிபதி செயலகம், கொழும்பு 1 என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிறுவனத்துக்கு மாதக்கொடுப்பனவாக 35ஆயிரம் அமரிக்க டொலர்கள் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆர் என்ட் ஆர் என்ற நிறுவனம் ஏற்கனவே ஆரம்பத்தில் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பெல்ட்வே நிறுவனத்தின் ஊடாகவே இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையை செய்துள்ளது.

நான்கு அமெரிக்க நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் இந்த வருடத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தொம்சன் ஆலோசனை குருப்புடன் உடன்படிக்கை ஒன்றை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கைச்சாத்திடப்பட்டுள்ளார்.

இதற்காக கடந்த வருடத்தில் மாத்திரம் கொடுப்பனவாக 683,635 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையினால் பெருமளவு பணத்தொகைகள் அமெரிக்காவில் வசிக்கும் திலக் சிறிவர்த்தன என்பவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

21 மார்ச், 203ஆம் ஆண்டு அவருக்கு 7000 டொலர்கள் வழங்கப்பட்டன. எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இலங்கைக்கு அவர் மேற்கொண்ட உண்மையை கண்டறியும் சுற்றுலாவுக்கான நட்டஈடாகவே இந்த தொகை வழங்கப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தநிலையில் சிறிவர்த்தனவுக்கு கடந்த வருடத்தில் 34ஆயிரத்து 675 அமரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.

colombo8_office_001

யார் இந்த சிறிவர்த்தன? என்பதற்கு கொழும்பின் ஆங்கில ஊடகம் விளக்கம் அளித்துள்ளது.

இதன்படி தொம்சன் ஆலோசனை குழுவை இவரே இலங்கை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதற்காகவே அவருக்கு மாதாந்த கொடுப்பனவு தொகையாக 7ஆயிரம் டொலர்கள் செலுத்தப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது. இதேவேளை சிறிவர்த்தன வோசிங்டனின் சொகுசு டெக்ஸி டைவராக பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இதுவரை கூறப்பட்ட பணத்தொகைகள் மற்றும் உடன்படிக்கைகள் யாவும் இலங்கையின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படவில்லை. அத்துடன் இலங்கை மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் எத்தனையோ பாடசாலைகள் தளபாடங்கள் இன்றி இயங்குகின்றன. வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் இல்லை. பாடசாலை மாணவர்கள் அப்பியாச கொப்பிகளை வாங்கமுடியாதுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தினால் இவ்வாறான பெருந்தொகை பணவிரயத்தில் வெளிநாட்டுக் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

TPN NEWS

 

 

SHARE