கசினோ போன்ற வர்த்தக நோக்கங்களுக்காக நாட்டின் கலாச்சார விழுமியங்களை விட்டுக்கொடுக்க முடியாது .

585

wimal-weera

நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைசச்சர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்தார்.  அரசாங்கத்துக்கு 12 அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் தீர்மானம் ஒன்றும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது தெரிந்ததே.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின ஊர்வலத்திலோ கூட்டத்திலோ பங்கு கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்த விமல் வீரவன்ச, சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய முறையில் செயற்படா விட்டால் அரசிலிருந்து விலகுவதற்கு தான் தயங்கப்போவதில்லை என சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே கட்சியின் வருடாந்த மாநாட்டில் தனியான பாதையில் செல்ல தாம் தயாராகவிருப்பதாக விமல் நேற்று அறிவித்திருக்கின்றார்.

‘2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான கிந்த சிந்தனைய முற்று முழுதாக தேசிய சக்திகளினாலேயே வரையப்பட்டது’ என நேற்றைய கூட்டத்தில் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, ‘இது விஞ்ஞாபனம் 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது கசினோவையும் உள்ளடக்கும் வகையில் அது திருத்தப்பட்டுள்ளது’ எனக் குற்றஞ்சாட்டினார்.

‘தேசிய சக்திகளின் பாதைக்கு வருமாறு அரசாங்கத்தை நாம் அழைக்கின்றோம். அவ்வாறு அரசாங்கம் வராவிட்டால் அரசாங்கத்ததில் நாம் நீண்ட காலத்துக்கு இருக்கமாட்டோம்.  அண்மையில் கொண்டுவரப்பட்ட சனினோ சட்ட மூலம் அவசரமாகக் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். இதனை ஏற்க நாம் தயாராகவில்லை’ எனவும் விமல் தெரிவித்தார்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் ஜே.என்.பி. கட்சி 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

கட்சியின் இரண்டாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், பிரிவினைவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட கூடாது எனவும் கோரியுள்ளது.

தேவையற்ற சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்தியுள்ளது.

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து வெளிநாட்டு அரசாங்கம் அல்லது வேறும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, நல்லிணக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்ற அடி;பபடையில் தலையீடுகள் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்ற முயற்சிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு இடமளிக்கக் கூடாது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் இயங்கி வரும் சகல அடிப்படைவாத அமைப்பக்களையும் தடை செய்ய வேண்டும்.

உட்கட்டுமானம் நகர அபிவிருத்தி  போன்ற துறைகளில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், நுகர்வோர் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசினோ போன்ற வர்த்தக நோக்கங்களுக்காக நாட்டின் கலாச்சார விழுமியங்களை விட்டுக்கொடுக்க முடியாது எனவும், அதற்காக மாநாயக்க தேரர்கள் அடங்கிய சபையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சியை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை தடுக்கவும் சட்டப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின் கீழ், காவல்துறை மற்றும் படையினர் இணைந்து வினைத்திறனான ஓர் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கி போதைப் பொருள் வர்த்தகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர் பீடத்துக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அரசாங்கத்திடம் 12 கோரிக்கைகளை முன்வைக்கும் தீர்மானம் ஒன்று தேசிய சுதந்திர முன்னணியின் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.

‘நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் மரணப் பொறியைத் தோற்கடிப்போம்’ என்ற தலைப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று நடைபெறுகின்றது. அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இந்த மாநாடு இன்று நடைபெறுகின்றது.

கட்சியின் புதிய செயற்குழு இந்த மாநாட்டில் தெரிவு செய்யப்படவிருக்கும் அதேவேளையில், அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைக்கும் தீர்மானம் ஒன்றும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கின்றது. நாடு முழுவதிலுமிருந்து பெருந்தொகையானவர்கள் இந்த மாநாட்டில் பங்குகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு முரண்பாடுகள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் முக்கியமானவையாகும். கசினோ தொடர்பான சட்டவரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ஆளும் கட்சியினால் நடத்தப்பட்ட மே தினக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு விமல் வீரவன்சவுக்கு அரசாங்கத் தலைமை அழைப்பு விடுத்திருந்த போதிலும் அதனை அவர் மறுத்திருந்தார். அத்துடன் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்களித்த பேட்டி ஒன்றில் அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறலாம் என அவர் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE