கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது…

717

பதினாறு புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு அவர்களது பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது…

கேள்வி :- இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் நாட்டின் அமைப்புக்கள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கனே டியத் தமிழர் பேரவையும் ஒன்றாகும். இந்நிலையில் இலங்கையின் இத்தடை அறிவிப்பானது கனடாவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?

பதில்:- இலங்கைத் தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும், ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் கனேடியத் தமிழர்பேரவையின் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தம் மிக்க கருத்துக்களும், செயற்பாடுகளும் காரணமாக கொதிப்படைந்துள்ள இலங்கை, இவற்றுக்கு பதில் சொல்ல விரும்பாத நிலையில் அதற்கு ஆதரவாக செயற்பட்ட எங்களை இப்போது தடைசெய்துள்ளதாகக் கூறியுள்ளது. இத்தடையானது கனடாவைப் பொறுத்தவரையில் எந்தவித விளைவு களையும் ஏற்படுத்தாது என்று கனே டிய அதிகாரிகள் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளனர்.

கேள்வி :- கனேடியத் தமிழர் பேரவை இதுவரையில் ஜனநாயக வழியிலே தமிழ்மக்களுக்காக முன்னெடுத்து வந்துள்ள செயற்பாடுகள் எவை என்று கூறமுடியுமா?

பதில்:- குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தை பொறுத்த வரை அமெரிக்கா, கனடா போன்ற நாடுக ளுடன் கனேடியத் தமிழர் பேரவை ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தீர்மானத்தில் நாம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். இதுவரை காலமும் இலங்கையில் பெரும்பான்மை பலத்துடன் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நாங்கள் நெருங்கிய உறவுகளை பேணி அவர்களுக்குத் தேவையான உதவி களை வழங்கி வருகின்றோம். கனடாவிற்கு வருகை தரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் கனேடிய அரசமட்டத்தினருக்கும் இடையி லான சந்திப்புக்களை மேற்கொள்ள தேவையான ஒழுங்குகளைச் செய்து வந்திருக்கின்றோம். மொத்தத்தில் இலங்கை தமிழ் மக்கள் அரசியல்விடிவு பெற எங்களால் முடிந்த பங்களிப்புக்களைத் தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

கேள்வி :- இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் கனடாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு தமிழ்மக்களுக்கு ஆதரவாகச் செயற்படும் செயற்பாட்டாளர்களை கனேடிய அரசுடன் இணைந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது இச்செய்தி உண்மையா?

பதில்:- இச்செய்தியில் எந்தவித உண்மையுமில்லை. கனடா பாதுகாப்புத் துறையுடன் கனே டியத் தமிழர்பேரவை நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது. இதனால் இலங்கை அரசாங்கத்தின் அப்படியான தேவையில்லாத கனவுகள் எப்போதும் பலிக்காது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.
கேள்வி :- முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற போரின் எதிரொலிப்பு இன்றைய ஜெனீவாத் தீர்மானம் என்று பரவலாகக் கூறப்படும் நிலையில், இத்தீர்மானமானது தமிழ்மக்களுக்கு சாதகமான நிலமையை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

பதில்:- ஜெனீவா தீர்மானத்தின் மூலம் இப்பொழுது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு விசாரணைக்கான வழி பிறந்திருக்கிறது இலங்கையிலே நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு இது வழி சமைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களை ஆராய சர்வதேச நிபுணர் குழு ஒன்றின் அவசியமே ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையாகும். ஆகவே அந்த விசாரணைகள் மூலம் பல உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும். இவை எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய பல விடயங்களை உருவாக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை

கேள்வி :- இலங்கையில் வாழும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதனால் தான் இப்பதினாறு அமைப்புக்ககளும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்று கருதலாமா?

பதில்:- இந்த 16அமைப்புகளில்; ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்புகளும் உள்ளடங்குகின்றன. ஆகவே பதினாறு அமைப்புக்கள் என்று சொல்லமுடியாது. கனடா விலே சட்டபூர்வமாகவும் ஜனநாயக ரீதியிலும் இயங்கும் அமைப்புகளை உலக நாடுகளில் ஜனநாயக ரீதியி லும் சட்டபூர்வமாகவும் இயங்கும் அமைப்புகள் என்றுதான் நாம் கூற முடியும்.

அந்த வகையிலே நாங்கள் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்ல எல்லா இன மக்களுக்கும் அவர்களுடைய ஜனநாயக சுதந்திரம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுடைய ஊடக சுதந்திரம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களுடைய அரசியல் சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பாக கனேடிய தமிழர் காங்கிரஸ் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது. தவிர தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்காய் பாடுபடுகின்ற அதே வேளை இலங்கையில் உள்ள மற்றைய இனங்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளையும் நாம் தொடர்ந்து எமது அரசமட்டத்தின் கவனத்திலே கொண்டு வந்திருக்கின்றோம் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி :- இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஓர் ஆயுதக்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- கனேடிய தமிழர் பேரவை யைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கத்தின் இக்கருத்தை அடி யோடு மறுக்கின்றோம். ஜனநா யக வழியில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கை அரசு இப்படியாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாயின் முதலில் அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சவால் விடுக்கின்றோம்.

நாம் தமிழ்மக்களுக்கு மாத்திரம் குரல் கொடுப்பவாகள் அல்ல. இலங்கையில் அநீதி இழைக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் எமது எதிர்ப்புக்களை வெளியிட்டே வந்திருக்கின்றோம் உதாரண மாக உயர்நீதிமன்ற நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிராக இலங்கையரசின் செயற்பாடு குறித்து அப்போது நாம் குரலெழுப்பியிருந்தமை யாவ ரும் அறிந்ததே. தவிர ஊடகவியலாளர்கள், சிங்கள மனித உரிமை ஆர்வலர்க்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் எமது கண்டனங்களை வெளியிட்டிருந்தோம்.

கேள்வி :- இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தப்பட்டியலில் உள்ளவர்களுடன் இலங்கைத் தமிழ்மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடாது என்றும் தடைசெய்யப்பட்டுள்ளவர்கள் இலங் கைக்குள் வரக்கூடாது என்றும் இலங்கை கூறியிருக்கிறதே இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ஆம், இது உலகில் எங்குமே நடைபெ றாத ஒன்று. உறவுக்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறுவதும் அவர்கள் தாய்நாட்டுக்கு வரக்கூடாது என்று கூறுவதும் எவ்வகையிலும் நியாயமில்லாத ஒன்று. அந்தப்பட்டியலிலே என்னுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உண்மையில் நான் கனடாவின் சட்டத்திட்டங்களுக்கோ அல்லது இலங்கையின் சட்டதிட்டங்களுக்கோ அல்லது சர்வதேச சட்டங்களையோ மீறி நடந்தது இல்லை. இதுபோலவே எல்லா அமைப்புக்களும் ஜனநாயக வழியில் செயற்படுவதைத்தான் விரும்புகின்றன. தமிழ்மக்களுக்கும் எமக்கும் இடையிலான நெருக்கமான உறவை விரும்பாத நிலையிலும் சர்வதேச தமிழ்மக்கள் மற்றும் அமைப்புக்களுடன் இலங்கைத் தமிழர்க்கிடையிலான உறவுகளைத் துண்டிப்பதன் ஊடாக இலங்கையில் நடைபெறும் கொடுமைகள் சர்வதேச மட்டத்துக்கு செல்லாது என்று கருதுவதாலேயே இலங்கையரசு இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளது.

கேள்வி :- ஐ.நாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்த இலங்கையின் நன்னமைதரக்கூடிய பிரதிபலிப்புக்கள் இல்லாதுபோனால் சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் மீண்டும் ஓர் ஆயுதப்போராட்டத்தை உருவாக்கும் நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் செயற்படுவதாக தாம் கருதுவதாக இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளமை குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- நிச்சயமாக அப்படி ஒரு நிலைப்பாட்டிற்குள் நாம் செல்லமாட்டோம். போர்க்காலத்திலும் சரி போரின் பின்னரான காலத்திலும் சரி நாம் சமாதானம் எனும் கருத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். ஆனால் வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. அதற்கு அரசாங்கம் கூறும் காரணமே மீண்டுமொரு ஈழப்போரை உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் செயற்படுகின்றனர். ஆனால் இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாம் எப்போதும் தமிழ்மக்களின் நன்மைக்காக குரல்கொடுப்பவர்களே.

நன்றி.

நேர்காணல் :- இரணியன்

 

 

SHARE