கூட்டமைப்பின் முக்கிய பணிகள் யாவை? என்ன செய்தார்கள்… என்ன செய்கிறார்கள்… என்ன செய்யவேண்டும்? =மு.வே.யோகேஸ்வரன்=

481

தமிழர் கூட்டமைப்பின் முக்கிய பணிகள் யாவை?    என்ன செய்தார்கள்..என்ன செய்கிறார்கள்..என்ன செய்யவேண்டும்?       =மு.வே.யோகேஸ்வரன்=

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர்..அந்த மண்ணில் நடந்தேறிய முக்கிய சம்பவங்களில் சில.. உள்ளத்தை, உடல் என்னும் பெட்டகத்துக்குள் பூட்டி வைத்திருக்கும் அனைவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று..!2009 இல் முள்ளி வாய்க்காலில் ஏற்பட்ட இன அழிப்பை உலகமே மறக்க முடியாது என்றால் உண்மைத் தமிழனால் அவைகளை எப்படி மறக்க முடியும்?

சுமார் ஒன்றரை லெட்சம் தமிழ் மக்கள் அழிக்கப் பட்ட கோரப் படுகளம் வன்னி..சுமார் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் முள்ளு வேலிக்குள் அடைபட்ட கண்ணீர் வரலாறு அது..!..பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்டு, சிறைக்குள் அடைக்கப் பட்ட கொடிய வரலாறு அது!

அவர்களில் பெரும்பாலானோர் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழர்கள்-புலிகள்!..அதில் சிலர் முக்கிய அரசியல் உறுப்பினர்கள்..போரில் சரண் அடைவது ஒன்றும் புதுமையான நிகழ்வல்ல..உலகம் எங்கும் நடைபெற்று வந்த ஒன்றுதான்! சரண் அடைந்தவர்கள் எங்கே..? கேட்டார்களா இந்த தந்திர வாதிகள் அரசிடம்?..ஏன் கேட்கவில்லை தெரியுமா? கேட்டால் பதவி பறிபோய்விடும் ஆட்சிக் கட்டில் சரிந்துவிடும்.அப்படி சரிந்தால்..ஓய்வு பெற்றபின்னும் கொண்டாடும் ஒய்யார வாழ்வு முடிந்துவிடும்..ஒரு கோடி பெறுமதியான கார் பறிபோய் விடும்…உறவினருக்கு வேலை வாய்ப்புகள்..பதவி பட்டங்கள் இல்லாமல் போய்விடும்..! இப்போது எங்கே போனார் அந்த விடுதலை வீரன்..? மாவீரன்..?..கேட்டால் சொல்ல மாட்டார்கள்..இனி மாகாண சபைத் தேர்தல் வர இன்னும் அதிக நாட்கள் உண்டே?
போராடுவது புதுமை இல்லை என்றால்,போராட்டத்தின் ஓர் அங்கம்தான் வெற்றியும் தோல்வியும்!

19 வருடங்களாக தமிழ் நிலத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள் புலிகள்..!..மாற்றான் கால்களைப் பிடித்து வந்த மறுமலர்ச்சி அல்ல இது..
அல்லது மண்டியிட்டு பெற்ற ஆட்சிக் கட்டிலும் அல்ல அது..! அல்லது
பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து பெற்ற பதவி சுகமும் அல்ல அது!

அல்லது, எதிரி போட்ட எலும்புத் துண்டும் அல்ல அது!

 

எங்கள் மண்ணில் நாங்களே குருதி சிந்தி,வியர்வை சிந்தி,எமது அரிய உயிர்களை காணிக்கையாக கொடுத்துப் பெற்ற, எமது தமிழ் அரசின் வெகுமதி அது!.தமிழ் இனத்தின் உரிமை அது!.மாற்றான் பிள்ளைகளை போர்க்களத்தில் பலி கொடுத்துவிட்டு, பிரபாகரன் பெற்ற ஆட்சி அல்ல அது..! அல்லது மாற்றான் பிள்ளைகளை போராட வாருங்கள் என்று,மேடை மேடையாக, வாஞ்சிநாதன் அழைத்துவிட்டு,தன் பிள்ளையை லண்டனுக்கு அனுப்பி விட்டு சுகமாக பெற்ற ஆட்சியும் அல்ல..அது!

தன் பிள்ளையையே அந்த மண்ணுக்கு தாரை வார்த்துத்தான் எங்கள் புலிகள் மாற்றான் பிள்ளைகளை போராட அழைத்தார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அல்லது நாட்டில்.. மாட மாளிகையில்.. கூட கோபுரங்களில் ஒய்யாரக் கட்டிலின்மேல் அமர்ந்து கொண்டு..வாக்குச் சீட்டுகளின் வர்ண ஜாலங்களால் பெற்ற ஆட்சியும் அல்ல!

அந்த ஆட்சி அழிந்து விட்ட ஒன்றல்ல..இழந்துவிட்ட ஒன்று! இழந்ததை மீட்பது என்பது ஒருபோதும் புதுமை அல்ல…எப்போதும் நடக்க கூடிய ஒன்றுதான்..குண்டுக்கும் துப்பாக்கிக்கும் பயந்து,கொல்லைக்குள் பதுங்கும் கொள்கை அற்ற கோமான்களுக்குத்தான் இழப்புகளை எப்படி மீட்பது? என்று தெரியாது..இரத்த்தத்தால் சரிதம் எழுதுவோருக்கு அது நன்றாகவே தெரியும்!..அழிவதற்கும் இழப்பதுக்கும் வேறு பாடு தெரியாத வீணர்கள்தான்.. பிரபாகரன் அழிந்துவிட்டான்..தமிழ் ஈழம் முடிந்துவிட்டது என்று கொக்கரிப்போர் ஆகும்..!..தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள் ..புலிகளின் தலைவன் கொல்லப் பட்டுவிட்டான்..என்ற குதூகலத்தால்தான் அப்போது சிங்களக் கொடியை அரசியல் மேடைகளில் தூக்கி பிடித்தார் ஓர் அரசியல்வாதி என்னும் பெயரில் உள்ள தந்திரவாதி ..! இதை மறக்கத்தான் முடியுமா எங்களால்?

அதுமட்டுமா..? தேர்தலின் பொது என்ன சொன்னார்கள்?..எங்களுக்கு மறதி வியாதி இல்லை என்பதால்.. அப்போது அதை நன்கு பதிய வைத்திருந்தோம் எங்கள் மனத் திரையில்!..எப்படி மறந்து போனது அது தேர்தலுக்கு பின்னர் தந்திரவாதிகளுக்கு? மக்களிடம்
வாக்கு பிச்சை கேட்டபோது.. பிரபாகரன் மாவீரன்..விடுதலை வீரன் என்று முழங்கியது யார்..?..நாங்கள் அல்ல.,..நீங்கள்தான்! எங்கே போனது அந்த பொன்னான வார்த்தைகள் தேர்தலுக்கு பின் வெற்றிகளை குவித்தபின்? புரியவில்லை?..அந்த வெற்றி வந்தது புலிகளால்..மா வீரர்களால்..எப்படி இதை உங்களால் இலகுவில் மறக்க முடிந்தது?

ஆயுதம்தான் தூக்க மாட்டீர்கள் அரசியல் ரீதியாக என்ன கிழித்தீர்கள்? சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் நடாத்தப் படும் சர்வதேச விசாரணை அமைப்புக்கு எத்தனை பாதிக்கப் பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளீர்கள்?..இன்னும் கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள், தம் சொந்த இடங்களுக்கு நிம்மதியாக திரும்பவில்லை..என்ன செய்கிறீர்கள்? 

யாழ்தேவி வருகிறது…வந்துவிட்டது..!.உண்மைதான்..!..ஆனால் .. யாழ் மக்களுக்குத்தான் இன்னும் நம்மதி வரவில்லை! சொந்தக் காணிகளை இழந்த மக்கள் தெருவில் வசிக்கிறார்கள்..இராணுவமோ அவைகளை பிடித்துவைத்துக் கொண்டு டென்னிஸ் விளையாடுகிறது..என்ன செய்கிறீர்கள்?..நாவற்குழியில் சிங்களவனை குடி ஏற்றுகிறார்கள் ..என்ன செய்கிறீர்கள்? ..விபச்சாரம் எமது மண்ணில் தலைவிரித்தாடு கிறது..மதுச்சாரம் வீதியெங்கும் வழிந்து ஓடுகிறது..என்ன செய்கிறீர்கள்?..அட..நம் ஒட்டுமொத்த கலாச்சாரமே செத்துச் சீரழிந்து கொண்டிருக்கிறது..அங்கே….என்ன செய்கிறீர்கள்?..

இவைகளைச் செய்வதற்கு ஆயுதம் ஏந்துவதுதான் வழி என்று நினைக்கிறீர்களோ என்று தெரியவில்லை..?..தமிழ் ஈழம் எமக்கு தேவை இல்லை.. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவாக்கல்தான் வேண்டும் என்று சொல்கிறீர்கள்..சரி..அப்படியே வைத்துக் கொண்டாலும்….அதைக் கூட உங்களால் போராடிப் பெற முடியவில்லையே என்றால் ..பின்பேன் உங்களுக்கு அரச கதிரை?..ஆட்சிக் கட்டில்..ஆள்.. அம்பு.. சேனை..?
கோடி ரூபாயில் ஆடம்பரக் கார்? ..அனுப்பிய பணத்தை செலவழிக்காமல் அது திரும்பி வருகிறது..என்று அவன் சொல்கிறான்..அதைகூட எப்படி என்று? உங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை..நீங்கள் ஆயுதம்தான் பிடிக்கவேண்டாம் .. பேனாவையாவது உறுதியாக பிடியுங்கள்..அது போதும்!..

நன்றி,

-வெளிச்சவீடு-

SHARE