நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதில் விக்னேஸ்வரனும் உள்ளடங்குகிறார்.
எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது என்று விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தமக்கு உறுதியளித்தபடி வடக்கின் ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதில்லை என்று ஜனாதிபதி தமக்கு உறுதியளித்திருந்தார்.
எனினும் தற்போது அதனை அவர் மீறிவிட்டார் என்று விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே அவருடைய அமைச்சரவை பகிஸ்கரிப்பு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பை வேலைப்பளு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
மாகாண முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு வேலைப்பளு காரணமாக தன்னால் கலந்து கொள்ள முடியாதுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 12வது அமர்வு நேற்று இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடன் கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் பத்து விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஆனால் இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஏதாவது ஒன்றுக்காவது தனது அனுசரணையைத் தந்திருந்தால் எங்களுக்கு வசதியாக இருந்திருக்கும். நான் வசதி என்ற சொல்லை தான் கூறுகின்றேன். ஆனால் அதுகூட இன்னும் செய்துதரப்படவில்லை.
எங்களைப் பொறுத்தவரையில் சில விடயங்களைக் குறிப்பிட்டோ அல்லது அதற்கு மாறாகவோ நாம் செயற்படவில்லை. முதலமைச்சர்களுக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டிருந்தது. ஆனால், எனக்கு அக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
கடந்த வாரம் முதலமைச்சர்களுக்கு கூட்டம் இடம்பெறவுள்ளதாக கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள் அக்கூட்டம் நடைபெறும் என திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் எனக்குப் பல வேலைகளும் கடமைகளும் இருப்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என கடிதம் அனுப்பியிருக்கின்றேன்.
ஆகவே, எங்களுக்குள்ளே அது சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதைப் போல் நாங்களும் ஒத்துப்போகின்றோம். ஆனால் எங்களுக்குக் கூறுகின்ற எந்தவொரு விடயமும் செய்துதரப்படவில்லை என்றார்.
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பது அல்லது பங்கேற்காமை குறித்து வடமாகாண முதலமைச்சர் தெளிவாக எதனையும் தெரிவிக்கவில்லை
நாளை நடைபெறவுள்ள இலங்கையின் அமைச்சரவை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைத்தமைக்கு அமைய தாம் செல்லப் போவதில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெளிவாக கூறவில்லை என்று வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்கள் தொடர்பில் நேற்று வட மாகாணசபையில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தமக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் அதில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து தெளிவாக எதனையும் கூறவில்லை என்று சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில இணையம் ஒன்று விக்னேஸ்வரன் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்றும், அதற்காக வருத்தம் தெரிவித்து ஜனாதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தமிழ்வின் கேட்ட போதே சிவஞானம் இந்தத் தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கவில்லை: விக்னேஸ்வரன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பினை தாம் நிராகரிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சற்று முன்னர் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை நிராகரிக்கவில்லை.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில கூட்டங்களில் பங்கேற்க வேண்டியிருப்பதனால், எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதனை அறிவித்துள்ளேன்.
அமைச்சரவைக் கூட்டங்களில் முதலமைச்சர்கள் பங்கேற்குமாறு ஜனவரி மாதம் முதல் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அது அமுலுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
TPN NEWS