பல நூற்றாண்டுகால தமிழர் இருப்பை பறைசாற்றும் பாரம்பரிய எம் தமிழ்க்கிராமத்தில் இன்று எமது இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது என தென்னமரவடி மக்கள் முறையிட்டுள்ளனர்.
மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளை அடுத்து அங்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பொன்றிலேயே மேற்படி முறையீடுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுச்சிறப்புமிக்க வளம் பொருந்திய எம் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியவில்லை. மீன்பிடிக்க முடியவில்லை. தற்காலிக வீட்டிலேயே நான்கு வருடங்களை தாண்டி பயணிக்கிறது எம் சொந்த மண் வாழ்க்கை என்றும் அவர்கள் முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரமாக கொக்கிளாய் ஆற்றின் ஒரு பகுதியில் திருகோணமலை மாவட்டத்துடன் இருக்கும் தென்னமரவடி கிராமம் மிகவும் பழமை வாய்ந்ததும் பல நூற்றாண்டுகால வரலாற்றை தன்னகத்தே கொண்டதுமான வளம் பொருந்திய தமிழ் கிராமமாகும். இங்கு வசிக்கும் மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் அக்கரைவெளி பகுதிகளிலும் காணிகள் பல உண்டு.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவும் கொடுத்த முறைப்பாடுகளுக்கு அமையவும் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தென்னமரவடி கிராமத்தில் ஏற்படுத்தியிருந்தார்.
காலங்காலமாக தொடர்ச்சியாக நெருக்கடிகளை தாம் சந்தித்துவருவதாகவும் தென்னமரவடி ( தென்னவன் மரபு அடி ) கிராமத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மிக மிக அதிகம் என்றும் தொடர்ச்சியாக பல வழிகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி மெல்ல மெல்ல தமிழ் குடியிருப்புகளை இங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுவருதாக அவர்கள் ரவிகரனிடம் முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரவிகரன்,
இங்கிருக்கும் 525 ஏக்கர் வயல் நிலங்களும் இக்கிராம மக்களின் சொத்து. இலங்கை சுதந்திரம் அடைந்ததாக ஏட்டளவில் சொல்லப்படும் 1948ற்குப்பின் 1952ம் ஆண்டு தொடக்கம் மேற்படி ஏக்கர் காணிகளுக்கு வரிப்பணங்கள் செலுத்தியும் வருடாவருடம் அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தும் ஆண்டாண்டு காலமாக தங்களின் பரம்பரை காணிகளாக பாவித்து வந்திருக்கிறார்கள்.
மேற்படி நிலங்களில் இருந்து 1984 இறுதியில் இடம்பெயர்ந்தாலும் திரும்பவும் மீள்குடியேறி தங்களின் வயல்நிலங்களை பயன்படுத்தி வந்திருப்பதையும் 12ம், 13ம் கொலணிகளில் இருக்கும் சிங்களவர்கள் இந்த நிலங்களில் அத்துமீறி விவசாயம் செய்து வருவதும் அதை மறுத்து தமிழர்கள் மீள அவ்வயல்நிலங்களை பயன்படுத்தவதும் மாறி மாறி நடக்கும் நிகழ்வுகள் என்பதையும் தென்னமரவடி வாழ் மக்களின் முறைப்பாடுகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.
கடந்த மாதம் 12, 24, 30ம் திகதிகளில் மக்களுடன் கலந்துரையாடியபின்னர் சிங்கள மக்களுக்கும் உங்கள் காணிகளில் இடம் கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் இதற்குரிய பிணக்குகள் தீர்க்கப்படும் வரை ஒருவரும் வயல் செய்ய முடியாது என மாகாண காணியாளர் மக்களுக்கு தெரிவித்ததாக அறியமுடிகிறது.
மேலும் காணிகள் கொடுக்கப்படாவிட்டால் சிங்களவர்களால் தாக்கப்படலாம் என்றும் அவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளுக்கு யார் உங்களுக்கு பாதுகாப்பு தருவது என்றெல்லாம் பயமுறுத்தியதாகவும் தங்களை எப்படியாவது விரட்டும் நோக்கோடு செயல்படுவதையே அவதானிக்க முடிகின்றது என்றும் மக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.
250 குடும்பங்கள் அளவில் இடம்பெயர்ந்து பின்பு மீள்குடியேற்றம் செய்த போது மீளக்குடியேறிய 150 குடும்பங்களுக்கும் எதுவித அபிவிருத்திகளும் செய்யப்படாமல் 6 மாத கால உத்தரவாதமாக வழங்கப்படும் தற்காலிக கொட்டில்களிலேயே 4 வருடங்களுக்கும் மேலதிகமாக வசிக்கிறார்கள்.
இவ்வாறு போதுமான அளவு வசதிகள் வழங்கப்படாது இருக்கும் நிலையிலும் சொந்த மண்ணை விட்டு விலகாத 60 குடும்பங்களையும் எப்படியாவது வெளியேற்றவேண்டும் என்று தான் இவர்கள் இவ்வாறான தொடர்ச்சியான நெருக்கடியை கிழக்கு மாகாண காணியாளர் தருவதாக மக்கள் குமுறுகின்றனர்.
இவை ஒரு புறமிருக்க தங்கள் பகுதியான பறையனாற்றின் பக்கம் மணல் ஏற்றி அடுத்த பிரதேச செயலர் பிரிவினுள் கொண்டு செல்கிறார்கள். தட்டிக்கேட்கமுடியவில்லை.
ஆற்றை எடுத்துக்கொண்டால், சட்டம் ஒழுங்குக்கு ஏற்ப வீச்சுத்தொழிலை பாவித்து தாம் மீன்பிடித்துவரும் நிலையில் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்ட தொழில்களை புல்மோட்டை மீனவர்கள் செய்து தமது ஆற்றுவளத்தையும் அழித்துவருவதாக குறைகளை தொடர்ச்சியாக முன்வைத்தவண்ணமே இருந்தனர்.
அங்குள்ள சில பெரியவர்களும் காலங்காலமாக நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பிலும் மக்களின் குறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்கள்.
தொடர்ச்சியான நெருக்கடிகளை கொடுத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய உதவிகளை செய்யாமலும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காமலும் ஒரு பாரம்பரிய கிராமத்தை அபகரிக்கும் நடவடிக்கையானது மனச்சாட்சியற்ற உத்தியோகத்தர்களின் மூலம் அங்கு நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கி றது. தென்னமரவடி தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளும் அங்கு என்னால் சேகரிக்கப்பட்ட விடயங்களும் இனிவரும் காலத்தில் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எங்கெல்லாம் முன்வைக்கமுடியுமோ அங்கெல்லாம் அவையும் முன்வைக்கப்படும். எப்பொழுதும் தொடர்பில் இருங்கள். தமிழர் இருப்புகளை உறுதிப்படுத்துங்கள் என்று அவர்களுக்கு கூறி மக்கள் சந்திப்பை நிறைவு செய்திருந்தேன் என்றார்.