தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தீர்மானத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதனைத் தீர்மானிக்க முடியும்.

389

 

SAMSUNG CAMERA PICTURESநடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவருகின்ற இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து ஒரு சாராரும், முள்ளிவாய்க்காலை வைத்து மற்றொரு சாராரும், விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்தினை வைத்து இன்னொரு சாராரும், வடகிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்தியை வைத்து ஒரு சாராரும் தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் வீதிக்கு இறங்கியுள்ளனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் அவர்களுடைய ஒற்றுமையே சர்வதேசம் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக கூறப்போனால் பிரபாகரனின் போராட்ட தந்திரோபாயத்தினால் அவர்களது அரசியல் செயற்பாடுகளை செயற்படுத்துவதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைத்து இயக்கக்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு உருவாக்கம் பெற்றது. அதனுடைய பரிணாம வளர்ச்சி இன்று சர்வதேசத்துடனான பேச்சுவார்த்தைகளிலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச விசாரணைக்கூண்டிலிருந்து தன்னை தப்பவைத்துக்கொள்வதற்காக மஹிந்த அரசாங்கம் தன்னாலான பிராயச்சித்தத்தினை தமிழினத்திற்கு செய்துவருகின்றது. இதற்கு உறுதுணையாக தமிழினத்தினை காட்டிக்கொடுத்த ஒருசில போராளிகளும், அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட ஒருசில போராளிகளும் சரணடைந்த பின்னர் தமது உயிர் அச்சுறுத்தல்களின் காரணமாக அரசுடன் இணைந்து செயற்படும் போராளிகளும், ஏற்கனவே ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக்கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட கட்சிகளும்; அரசாங்கம் செய்வதுதான் சரி என மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்கட்டை ஏறும் நடவடிக்கையாகவே அவர்களுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற யதார்த்தம் தற்பொழுது பரிணாம வளர்ச்சி கண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற வட்டத்திற்குள் நிற்கின்றது. அதுமட்டுமல்லாது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலம் என்பது இன்று சர்வதேசம் திரும்பிப்பார்க்குமளவிற்கு வலுவானதொன்றாக பிரபாகரனினதும், தர்மரட்ணம் சிவராம் (தராகி) இவர்களினுடைய நெறிப்படுத்தல்களிலும் தமது செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். கட்சிக்குள் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு குடும்பத்தில் இடம்பெறும் பிரச்சினைகள் போன்றே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விரைவில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடுகின்றது. தற்பொழுது இருக்கும் பிரச்சினை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது? சரத்பொன்சேகாவா? மஹிந்த ராஜபக்ஷவா? ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது யாரையும் ஆதரிப்பதில்லையா? இவர்களினுடைய தீர்மானத்தினையே ஏனைய கட்சிகள் எதிர்பார்த்தவண்ணமிருக்கின்றன. வடகிழக்கில் செறிந்துவாழக்கூடிய தமிழ்பேசும் மக்கள் தமிழரசுக்கட்சியினதும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினதும் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். தன்மானம் உள்ள தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழியாகவே இத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பரிணாமம் பெற்றது என்பதை மறக்கமாட்டார்கள்.
கூட்டமைப்பிலிருந்து எக்கட்சி வெளியேறினாலும் அவர்கள் தமிழினத்தின் துரோகிகள் எனக் கணிப்பிடப்படுவார்கள். எமது சிறப்புரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் உருவாக்கி வைத்தார். அதனையே சம்பந்தன் ஐயா அவர்களும் கடைப்பிடித்துவருகின்றார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழ்மக்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கப்போகின்றார். இவ்வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றுவாரா? அதற்கான கால அவகாசங்கள் எவ்வாறமையும்? அல்லது எதிர்வரும் அரசாங்கங்கள் எவ்வாறமையும்? என்பதையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும் திறன் தலைவர் சம்பந்தனிடம் நிறையவே இருக்கின்றது. சந்தர்ப்பம் பார்த்து சந்தர்;ப்பவாதியாக தமிழினத்தின் நன்மைகளை கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானங்களை எடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இருப்பினும் மீண்டுமொரு போராட்ட சூழ்நிலை உருவாகப்போகின்றது என அரசாங்கம் புலிகள் புலிகள் என எல்லோருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்கிவருகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்பட்டமையை சாதகமாகவைத்து தற்பொழுது சுவரொட்டிகளிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுவருகின்றது. இது சிங்கள அரசின் இயலாமையின் வெளிப்பாடாகும்.  வடமாகாணசபையில் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றுக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வடகிழக்கில் ஏனைய தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களிலும் தமது உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு சரியாக முடிவுகளை சரியான தருணத்தில் எடுப்பார்கள். அந்த தனித்திறமை சம்பந்தன் அவர்களிடமே சார்ந்திருக்கின்றது.

SHARE