தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படாது! – லண்டனில் மாவை

422

 

News Serviceதமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது என்றும் அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனில் நடந்த விருந்துபசார நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றுமுன்தினம் லண்டன் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு ‘பி.ரி.எவ்.’ முக்கியஸ்தர் ரூட் ரவி, அதன் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்ததன் பின் நிகழ்ந்த இராப்போசன விருந்துபசார நிகழ்விலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார் என செய்திகள் தெரிவித்தன.
‘ரெலோ’ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?’ எனக் கேட்டதற்கே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு பதிலளித்தார். “அப்படியானால் இதனை வெளிப்படையாக மக்கள் முன் சொல்லத் தயாரா?” என்று கேட்டபோது “இதைத் தெரிந்துதான் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஒரு கட்சியாக செயற்படுவதற்கும், கூட்டமைப்பாக செயற்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் உங்களைப் போன்று இந்தக் கேள்விகளை எழுப்புகின்றனர்” என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தனிக் கட்சியாக பதிவு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்வோம் என்ற வாக்குறுதியை நானோ எனது கட்சித் தலைவர்களோ ஒருபோதும் வழங்கியதில்லை. அவரவர் விடுகின்ற அறிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE