தமிழ் பரா விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் இருப்பது 08 நாட்கள்

261

வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பரா விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் 09 நாட்களே உள்ள நிலையில், இதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஆரம்ப பயிற்சிப் போட்டி கடந்த 15 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

வடமாகாண தமிழ் பரா விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திலும், கிழக்கு மாகாண போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

DATA அமைப்பு வடக்கில் உயிரிழை அமைப்புடனும் கிழக்கில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்துடனும் இணைந்து, 2017 ஆம் ஆண்டுக்கான தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்தவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக விழிப்புலனற்றோருக்கான சாத்தப்பந்து போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் இம்முறை வடக்கு தமிழ் பரா விளையாட்டு போட்டியின் முக்கிய அம்சமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டப் போட்டி மற்றும் கால்களை இழந்தவர்களுக்கான ஆசனத்தில் இருந்தவாறான கரப்பந்தாட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.

தமிழ் பரா விளையாட்டுப்போட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு வவுனியா மாநகரசபை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

அதில் இடம்பெற்ற சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இணைந்த அணிகளாக மோதிக்கொண்டனர்.

எனினும் இம்முறை சற்று வித்தியாசமான முறையில் பெண்கள் அணி தனியாக போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இதன் முதற்கட்டமாக பெண்களுக்கான பயிற்சிப் போட்டி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கூடைப்பந்தாட்ட போட்டி விதிமுறைகள் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதோடு, பெண்கள் இரு அணிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர்.

அதன் பின்னர் ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்குமான பயிற்சிப் போட்டியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE