தலிபான்களை அடக்க நவாஸ் ஷெரிப்பிற்கு ராணுவம் ஆலோசனை

483
கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும் முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் முயற்சித்தார்.ஆனால், பலனேதும் ஏற்படாத நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் பாதியில் முடிவடைந்தன.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போராளிகள் உட்பட குறைந்தது 37 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் குறித்து நேற்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில் பிரதமர் நவாஸ் ஷெரிப் பங்கு பெற்றார்.இதில் அவாரது தேசிய பாதுகாப்புக் குழுவினரும் இடம் பெற்றனர்.உஸ்பெகிஸ்தான் போராளிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்ட தலிபான்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி பயங்கரவாதத்தை நிறுத்தவேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தேவையான பல ஆலோசனைத் திட்டங்களை ராணுவமும், தேசிய பாதுகாப்பு உதவியாளர்களும் அளித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

முக்கியமான இடங்களில் மீண்டும் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள தலிபான் இயக்கம் தங்கள் எல்லையை மீறுவதை அடிப்படையாகக் கொண்டு ராணுவம் தங்களின் திட்டங்களை வகுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.இத்தகையத் தண்டனைத் தாக்குதல்களுக்கு அரசு ஒப்புதல் அளித்ததா என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

பிரதமர் தன்னிடம் அளிக்கப்பட்ட பலவிதமான ஆலோசனைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். இருப்பினும் இதற்கான இறுதிமுடிவு வரும் வாரங்களில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுமட்டுமின்றி உள்நாட்டு மற்றும் பிராந்திய பாதுகாப்பு, பழங்குடி பகுதிகள், கராச்சி, பலுசிஸ்தான் போன்ற பகுதிகளின் பாதுகாப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிரதமரின் அலுவலக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.மேலும், சமீபத்திய தாக்குதல்களில் தெரிய வந்துள்ள பூர்வாங்க கண்டுபிடிப்புகளின் அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதனிடையில் கராச்சியில் நடைபெற்ற தாக்குதல்களை தாங்கள் முன் நின்று நடத்தியுள்ளதாக உஸ்பெகிஸ்தான் போராளிகள் இன்று தெரிவித்துள்ளனர். உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதல்களுக்கு பழி வாங்கும்விதத்தில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

SHARE