தல தோனி சூப்பர்: சென்னைக்கு புதிய சிக்கல்

617

ஐ.பி.எல்., லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூருவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய சென்னை, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த பெங்களூரு அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹாஸ்டிங்ஸ், நேகி நீக்கப்பட்டு பத்ரீ, நெஹ்ரா சேர்க்கப்பட்டனர்.

பெங்களூரு அணியில் கெய்ல், முரளிதரன், டிண்டா, நேசிம் என, நான்கு பேர்

வெளியேற்றப்பட்டு, ராம்பால், ரோசாவு, விஜய் ஜோல், ஜகாதி இடம் பெற்றனர்.

நெஹ்ரா நம்பிக்கை:

பெங்களூரு அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். நெஹ்ரா வீசிய முதல் ஓவரில், ரோசாவு (1) போல்டானார். நெஹ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டிய மற்றொரு துவக்க வீரர் டகவாலே, பத்ரீயின் சுழலில் மூன்று பவுண்டரி விரட்டினார்.

இவரை 19 ரன்னுக்கு, அஷ்வின் அவுட்டாக்கினார். விஜய் ஜோல் (13) நீடிக்கவில்லை. யுவராஜ் சிங் 25 ரன்கள் எடுத்து திரும்பினார்.

கோஹ்லி அரைசதம்:

அஷ்வின், பத்ரீ பந்துகளில் சிக்சர் அடித்த கேப்டன் விராத் கோஹ்லி, அரைசதம் கடந்தார். டிவிலியர்ஸ் (10), 49 பந்தில் 73 ரன்கள் எடுத்த கோஹ்லி, நெஹ்ரா வேகத்தில் போல்டாகினர்.

பெங்களூரு அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ராணா (5), ஸ்டார்க் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்மித் அதிரடி:

சற்று எளிய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு ஸ்மித், டுபிளசி ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. இருவரும் ராம்பால், ஜகாதி பந்துகளை சிக்சருக்கு விரட்ட, சென்னை அணி 4 ஓவரில், 53 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 34 ரன்களுக்கு அவுட்டானார். ரெய்னா, 18 ரன்னுக்கு நடையை கட்டினார்.

தோனி அதிரடி:

பின் டுபிளசி, தோனி இணைந்து அசத்தினர்.  முதலில் நிதானம் காட்டிய தோனி போகப் போக அதிரடிக்கு மாறினார். யுவராஜ் ஓவரில் அடுத்தடுத்து 2 இமாலய சிக்சர் விளாசினார். தொடர்ந்து ஜகாதி ஓவரில்  தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மறுமுனையில் டுபிளசி, ஜகாதி பந்தை சிக்சருக்கு அனுப்பி, அரைசதம் எட்ட, சென்னை அணி 17.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது.

தோனி (49), டுபிளசி (54) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.

காத்திருக்கும் சிக்கல் 

நேற்று 15.2 ஓவரில் வென்றால், கோல்கட்டா அணி இரண்டாம் இடம் பெறலாம் என்ற நிலை இருந்தது. யூசுப் அதிரடி கைகொடுக்க, வெறும் 14.2 ஓவரில் 161 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதனால், சென்னை அணி, இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இது, பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல்., விதிப்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் மோதும் ‘தகுதிச்சுற்று–1’ல் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

* 3, 4வது இடம் பெறும் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனல் வாய்ப்பை பெற இயலாது. இந்த அணி,  ‘தகுதிச்சுற்று 1’ல் தோற்ற அணியையும் வீழ்த்த வேண்டும்.

* இப்போது சென்னை அணி 3வது இடத்தில் உள்ளதால், இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே, பைனலுக்கு தகுதி பெற முடியும்.

SHARE