சிவஞானம் சிறீதரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
தமிழ்மண் வாசனையில் உலக உருண்டைபிடிக்கும் தினப்புயல்
பத்திரிகைத்துறையில் மிகக்குறுகிய காலத் துள் மக்கள் அபிமானத்தை பெற்றிருக்கக்கூடிய தினப்புயலில் ஒரு மைல் கல் தருணம் இது. பத்திரிகை பயணம் என்பதும் மிகச்சாதாரணமானது ஒன்றல்ல. மக்களோடு பேசும் இந்தத்துறையின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அது கடந்து வந்திருக்கும் இடர்களும், கொடுத்திருக்கும் அர்ப்பணிப்புக்களும் மிக அபாரமானது. அதனால்தான் ஊடகத்துறைக்கு இந்த உலகில் அதிக மதிப்புண்டு. ஊடகம் ஆள்கிற உலகு இது. ஊடகக்காரரின் பேனாமுனையில் உலக மனிதர்களின் நாடுகளின் அரசாங்கங்களின் தலைவிதிகள் இருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் ஊடக சுதந்திரம் பற்றி உலகம் பேசுகின்றது.
உலகில் ஊடகக்காரர் கழுத்துவெட்டியோ அல்லது சுடப்பட்டோ, கடத்தப்பட்டோ கொல்லப்படுகின்றபோது அல்லது காணாமல் போகச் செய்யப்படுகிறபோது இந்த உலகம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றது. இன்று இந்த உலகில் ஊடக சுதந்திரம் என்பது மிக சொற்பமாகி வருகின்றது. சுயாதீனமாக தன் கருத்தை கூற ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியிருக்கின்றது. காரணம் ஒரு வகையான சர்வாதிகாரம் எதேச்சதிகாரம் நாடுகளில் கோலோச்சுகின்றது. இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டிருக்கின்றார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கின்றார்கள். அச்சுறுத்தப்படுகின்றார்கள். இதன் காரணமாக சுதந்திரமாக எழுத நினைக்கின்ற ஏராளம் ஊடகவியலாளர்கள் நாட்டில் வாழமுடியாமல் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டார்கள். இத்தகைய வரலாற்று சூழலில் பின்னணியில்தான் வீசத்தொடங்கிய தினப்புயல் பத்திரிகையை பற்றி சிந்தித்துப்பார்க்கின்றேன். முதலில் தினப்புயல் பத்திரிகை ஆசிரியர் மற்றும் அதன் ஊடகக்காரர்கள், பணியாளர்கள், விநியோகஸ்தர்களை அவர்களின் துணிவுக்காக பாராட்டுகின்றேன்.
தினப்புயல் பத்திரிகை தாகமடங்காதவர்களின் நதியாக இருக்கின்றது. போருக்குப்பின்னான தமிழர்களின் வாழ்வியலில் தினப்புயலின் பங்கு முக்கியமானது. பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடாக பார்க்கப்படுகின்ற கடந்த முப்பது வருடகால ஆயுதவழியிலான தமிழர்களின் முனைப்பும், அதற்கு முன்னதான சாத்வீகவழியிலான முனைப்பும் தற்போது இருக்கின்ற புலம்பெயர் சமுகத்தின் முனைப்பும் நிலத்தில் உள்ள அரசியல் மற்றும் நிர்வாக மயப்பட்ட தமிழர்களின் முனைப்பும் என பரந்திருக்கின்ற தமிழர்களின் உரிமை தழுவிய பயணத்தின் வரலாற்றை எமது சமுகம் திரும்பியும் ஒப்பிட்டும் பார்த்து கொள்கைவழியிலான வாழ்வியலை எப்படி கட்டமைப்பது என்பது தொடர்பான தீர்மானத்துக்குவர தினப்புயல் பத்திரிகையின் பரந்த வெளி துணைநிற்கிறது என்பதில் சந்தேகமில்லை.
குறுகிய காலத்துள் ஒரு ஜனரஞ்சக தனத்தை இந்த பத்திரிகை பெற காரணம் தேடியபோது மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டு பத்திரிகையை வடிவமைத்ததே என தீர்மானத்துக்கு வர முடிகின்றது. தினப்புயலின் ஆசிரிய பீடத்தின் ஆற்றலை நான் பாராட்டுகின்றேன். என்றும் பரபரப்புடன் இயங்கும் பத்திரிகையாக இப்பத்திரிகையை நான் மக்களின் கரங்களில் காண்கிறேன். நமது மண்வாசனையில் உலக உருண்டை பிடிக்கும் தினப்புயல் குடும்பத்துக்கு இந்த மகிழ்வான வெற்றி பெருமிதமான தருணத்தில் என் வாழ்த்துக்கள்.
நன்றி
சிவஞானம் சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்
கிளிநொச்சி.
கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் பத்திரி கையை வாழ்த் துவதை முன்னிட்டு நான் பெருமையடைகின்றேன். கடந்த 02 வருடங்களும் வடகிழக்கு மக்களின் அவலங்கள் தொடர்பாகவும், தமிழ்த்தேசியம் தொடர்பாகவும் பல விழிப்புச் செய்திகளையும், மக்களை சந்தோஷப்படுத்தக்கூடிய கட்டுரைகளையும், சமூகம் சார்ந்த ஆக்கங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. பத்திரிகையின் 100வது இதழாகவிருந்தாலும் மக்களைப்பொறுத்தவரையில் ஒரு பத்திரிகையில் வெளிவருகின்ற கருத்துக்களை தாங்கள் அதனை கடைப்பிடிப்பவர்களாக இருக்கவேண்டும். வெறுமனே வாசித்துவிட்டு அதனை உள்வாங்காத நிலைப்பாடுதான் அதிகம். ஊடகங்கள் மூலம் கருத்துக்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும். அதற்கேற்ப நாங்களும் நடந்துகொள்வதன்மூலம் தான் மாற்றமடைந்த சமுதாயத்தினை கொண்டுவரமுடியும். வவுனியாவிலிருந்து வெளிவரும் இப்பத்திரிகை பல்லாண்டுகாலம் வாழவேண்டும். இன்னும் பல படைப்புக்களை படைத்து உலகமயமாக்கப்படவேண்டும் என மேலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வன்னி மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வாழ்த்துச்செய்தி
கடந்த 02 வருட காலமாக வன்னி மண்ணில் குறிப்பாக எனது மாவட்டத்தில் இத் தினப்புயல் பத்திரிகையானது நூறாவது இதழில் காலடிஎடுத்து வைப்பதையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன். நடுநிலையாக செயற்படும் இப்பத்திரிகையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து கைக்குண்டுத்தாக்குதல், கொலை அச்சுறுத்தல், இராணுவ கெடுபிடிகள் இத்தனையையும் தாண்டி தனது பேனாமுனையை நேர்த்தியாக செயற்படுத்திவருகின்றது. இப்பத்திரிகையானது தொடர்ந்தும் தனது நேர்த்தியான பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்றுகூறி எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களின் வாழ்த்துச்செய்தி
தினப்புயல் பத்திரிகை தனது 100வது இதழை வெளியிடுவதை முன்னிட்டு நான் சந்தோஷமடைகின்றேன். இந்த நாட்டிலே அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டதொரு சமுதாயமாகவே நாம் இருந்துவருகின்றோம். இந்த நிலைமைகள் தொடர்கின்ற காரணத்தினால் இது போன்ற தமிழ் பத்திரிகைகள் தனக்கான பாணியிலே தமிழ் மக்களின் விடயங்களை அல்லது தமிழ் மக்களின் குரல்களை ஒலிக்கச்செய்கின்ற பத்திரிகைகளிலே தினப்புயல் ஏடும் சிறப்பு பங்கை வகிக்கின்றது. செய்தித்தாள்கள் என்பது சாதாரணவிடயமல்ல. மக்களின் குரலாக அது மிளிர்ந்துகொண்டிருப்பதனை நாம் காண்கின்றோம். செய்திகள் இல்லாமல் உலக தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியாது.
யுத்த காலத்திலே இங்கு நடக்கும் விடயங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாகத்தான் நாம் அறிந்துகொண்டோம். அந்த நிலைமை இந்த நாட்டில் இருந்தது. அடக்குமுறை, பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமை போன்ற காரணங்களினால் இதுபோன்ற பத்திரிகைகள் வெளிவருகினற் பொழுதுதான் இந்நாட்டில் இடம்பெறும் விடயங்களை அறியமுடியும். அந்த வரிசையில் தினப்புயல் என்ற செய்தித்தாளும் இலங்கையில் இருக்கும் பத்திரிகைகளில் முன்னணியில் திகழ்கின்றது. இன்று தனது 100வது வார இதழில் கால்பதிப்பதில் நான் பெருமையடைகின்றேன். இதுபோன்று பல பத்திரிகைகள் மிளிரவேண்டும். அப்போதுதான் இங்கே இடம்பெறும் அடக்குமுறைகளை வெளிக்கொணரமுடியும். 100வது இதழை 02 வருடங்கள் கடந்து வெளியிடும் இச்சந்தர்ப்பத்திலே இப்பத்திரிகைக்கும், ஆசிரியர் குழாமிற்கும், ஊழியர்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு.கே.ராஜ்குமார் (அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
100வது வார இதழை எட்டும் தினப்புயல் பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
எழுத்தாளர் பெ.ஸ்ரீ-நேசன்(புயல்),B.A.(hons).,Dip.in.Ed.,M.phil.,(Re…),) தலைவர்;; :- (தாய்மொழி வளர்ச்சி மன்றம்), முன்னாள் பிரதம ஆசிரியர் (தினப்புயல் பத்திரிகை) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமாகிய வன்னி நிலப்பரப்பில் நான்காம் கட்ட ஈழப்போர் நிறைவுக்குப் பின்னர் தொடர்ச்சியாக வாரப்பத்திரிகை ஒன்று வெளிவருவது பாராட்டத்தக்க விடயமாகும். 05.08.2012 ஆண்டு ‘தினப்புயல்’ குழந்தை பிறந்து, தவழத்தொடங்கி, முட்கள் நிரம்பிய பாதையில் வளரத்தொடங்கியது. 15.10.2014 இன்று நூறாவது இதழ் வெளிவருவது பத்திரிகைத்துறைக்கு கிடைத்த வெற்றியாகும்.
தினப்புயலின் பணிப்பாளராகிய சக்திவேற்பிள்ளை பிரகாஷ் அவர்களின் அயராத முயற்சியினாலே, இந்த மண்ணில் நூறாவது இதழாக தினப்புயல் பத்திரிகை மிளிர்கின்றது.
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்றுபவர்’ திருவள்ளுவரின் வாக்குக்கு ஒப்ப இடைவிடாது முயற்சி செய்பவர் விதியையும் வெற்றி கொள்வர்.
இதற்கு அமையவே பணிப்பாளர் முயன்றவர்; முயல்கின்றார். இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக எமது நாட்டில் அதுவும் வன்னிப் பிரதேசத்தில் பத்திரிகையை நடத்தியது நடத்தி வருகின்றது என்பது சாதாரண விடயமல்ல. என்னை ‘பிரதம ஆசிரியராக’ சிறிது காலம் பணியாற்றுமாறு பணிப்பாளர் கேட்டுக்கொண்டார். குழந்தை தவழ்ந்த காலத்தில் பிரதம ஆசிரியராக எனது உதவிகளைப் புரிந்தேன். ஆரம்ப காலத்தின் பொருளாதாரப் பிரச்சினையைக் கடுமையாக இந் நிறுவனம் எதிர்நோக்கியது. பணிப்பாளரின் திறமையால், ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டது செய்யபடுகின்றது. பின்னர் வந்த ஆசிரியர்களால் திறம்பட நடத்தப்பட்டு இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது.
அரசியல், இலக்கியம், மருத்துவம், உலகவிடயம் முதலிய விடயங்களை உள்ளடக்கிய போதும் இப் பத்திரிகை அரசியல் ஆக்கங்களுக்கே அதி முக்கியத்துவம் அளிக்கின்றது. இது காலத்தின் தேவையாகும். இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணம் என்றே கூறலாம். தினப்புயல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது பலர் ஏளனம் செய்ததோடு தங்களின் அபார எதிர்பையும் காட்டினார்கள். இன்று தினப்புயலின் அபார வளர்ச்சியைக் கண்டு உரிமை கொண்டாடுவதோடு தமிழர்களின் அரசியல் தேசிய பத்திரிகையாகவும் ஏற்றுக்கொணடு உள்ளனர். இப் பத்திரிகை நிறுவனத்தில் ஊழியர்கள் விசுவாசமாக பணிபுரிகின்றனர். அதனால்தான் இந்த போட்டி உலகில் நிரந்தரமாக கால்பதிக்க முடிந்தது. இப்பத்திரிகையைப் பலர் பல்வேறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றபோதும் பத்திரிகைத் தர்மத்திற்கேற்ப நடுநிலையாக தனது பணிகளை செவ்வனே செய்துவருகின்றது.
தமிழர்களின் வரலாற்றில் தினப்புயல் பத்திரிகை தனித்துவமான தடம்பதிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இப் பத்திரிகைக்கு எனது பங்களிப்பை நல்கியதினால் பெருமையடைகின்றேன். தமிழர்களின் நிகழ்கால கடந்த கால நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கு எமது பெருமைகளையும், தமிழ் இனம் அடைந்த இன்னல்களையும் வெளிப்படுத்திய வெளிப்படுத்தும் பத்திரிகையாக திகழும். தினப்புயல் தொடர்ந்து வெளிவந்து உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. பத்திரிகை சுதந்திரமின்மைக்கு மத்தியிலும் சோதனைகளை தகர்த்தெறிந்து சாதனைகளைப் படைக்க நூறாவது இதழில் மனமார வாழ்த்துவதில் பூரிப்படைகின்றேன்.
திரு.சோ. சிவகலை (அன்னக்கிளி,சித்திர ஆசிரியர்) அவர்களின் வாழ்த்துச்செய்தி.
நூறாவது இதழ்விரிக்கும் தினப்புயலுக்கு!
வளமான வன்னியின் வவுனியாவில் மையமிட்டு
தளராது நூறாவது இதழ்விரிக்கும் தினப்புயலே!
தமிழரின் தலைவிதி எப்படி போனதென்ற
தடங்கள் அத்தனையும் காட்டி,
கால நகர்வில் நிறம் மாறிப்போன முகங்களையும் காட்டி,
காட்டாத கனகதைகள் அத்தனையும் காட்டி,
காட்டிக்கொடுக்காத முகவாட்டம் காட்டி,
காணாத விடயம் அத்தனையும் காட்டவல்ல திடமும் காட்டி,
நூறுமுறை உந்தன் திருவதனம் காட்டி நிமிர்ந்துள்ளாய்.
வாழ்க! வளர்க!! தொடர்க!!!
என்றும் உன்பணி.
முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் திரு.கனகரத்தினம் அவர்களின் வாழ்த்துச்செய்தி
வன்னி மாவட்டத்திலே தினப்புயல் பத்திரிகையானது மிகவும் சிறந்த முறையிலே தன்னுடைய கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றன. நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாக செய்திகளை பிரசுரித்து வருகின்றார்கள். அந்தவகையிலே இப்பத்திரிகையின் 100வது வெளியீடு என்று அறிந்தேன். எனவே அந்த பத்திரிகையின் சிறப்பம்சங்களை நாங்கள் கூறிக்கொள்ளவேண்டும். இதிலே அரசிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ என்றில்லாமல் மிகவும் சிறந்தமுறையில் கவர்ச்சியான வடிவத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் அவர்களைப் பாராட்டவேண்டும். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து தற்பொழுது வரைக்கும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. எனினும் மக்கள் நேர்மையான பத்திரிகை என்கின்ற அடிப்படையில் அதற்கு முதலிடம் வழங்கி வாசித்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே சில பத்திரிகைகள் நீதிக்குப் புறம்பான முறையில் செயற்படுகின்றன. ஆனால் வன்னி மண்ணிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற இப்பத்திரிகை அப்படியானதொன்றல்ல என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொண்டு தொடர்ச்சியாக இப்பத்திரிகை சிறந்தமுறையில் நேர்மையாக நீண்டகாலம் வெளிவரவேண்டும் என்று மனதார என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.