தொடருமா தோனி அலை.: இன்று சென்னை,பெங்களூர் மோதல்

665

 

சென்னை, பெங்களூர் அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இதில், கேப்டன் தோனி மீண்டும் அசத்தும்பட்சத்தில் சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற காத்திருக்கிறது.

இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் ஐ.பி.எல்., போட்டிகள் மீண்டும் துவங்குகின்றன. இன்று ராஞ்சியில் நடக்கும் 42வது லீக் போட்டியில் ஏற்கனவே ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி, பெங்களூருவை சந்திக்கிறது.

சென்னை அணி, இம்முறை பங்கேற்ற 10 போட்டிகளில் 8 வெற்றியுடன், 16 புள்ளிகள் பெற்று, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 2 முறை தோற்றது.

இன்று வெற்றி பெறும்பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேறலாம். வழக்கம் போல, டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம், டுபிளசி இணைந்து கைகொடுக்க காத்திருக்கின்றனர். ‘பினிஷிங்’ மன்னன் தோனி, தன்பங்கிற்கு உதவத்தயாராக உள்ளார்.

யார் ‘ஸ்டார்’:

பவுலிங்கை பொறுத்தவரையில் ‘ஸ்டார்’ பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு இல்லை. எனினும், 18 விக்கெட் வீழ்த்தியுள்ள மோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா (13 விக்.,) அஷ்வின் மற்றும் புதியதாக வந்துள்ள பத்ரீ உள்ளிட்டோர், தங்கள் பணியை சரியாக செய்வதால், அணியின் வெற்றி எளிதாகிறது.

யுவராஜ் எழுச்சி:

பெங்களூர் அணி இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 4ல் மட்டும் வென்றது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால் தான் 16 புள்ளிகள் பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதனால், இன்று அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாது என்பது நிச்சயம். ஏனெனில், அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், கடந்த இரு போட்டிகளில் 83, 68 என, ரன்கள் குவித்து மிரட்டுகிறார்.

இது கேப்டன் கோஹ்லிக்கு உதவலாம். தவிர, டிவிலியர்ஸ், பார்த்திவ் படேலும் கைகொடுக்கின்றனர். அதேநேரம், கெய்ல் முழு ‘பார்முக்கு’ திரும்பாதது ஏமாற்றம் தான்.

பவுலிலிங்கில் மிட்சல் ஸ்டார்க் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். இவருடன் சுழற்பந்துவீச்சாளர் சாகல், ‘சீனியர்’ முரளிதரன், யுவராஜ் சிங்கும்

இணைவது கூடுதல் பலம் தான். வருண் ஆரோன் மீண்டும் இடம் பெறுவாரா என்பது இன்று தான் தெரியும்.

வெற்றி அதிகம் தான்

சென்னை, பெங்களூர் அணிகள் இதுவரை மொத்தம் 15 போட்டிகளில் மோதின. இதில் சென்னை அணி 8ல் வெற்றி பெற்றது. பெங்களூரு 6ல் வென்றது. ஒரு போட்டிக்கு முடிவில்லை

ஜொலிப்பாரா காம்பிர்

ஐதராபாத்: இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் காம்பிரின் கோல்கட்டா, ஷிகர் தவானின் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை தலா 10 போட்டிகளில் பங்கேற்ற கோல்கட்டா 10 புள்ளி (5 வெற்றி), ஐதராபாத் 8 புள்ளியுடன் (4 வெற்றி), பட்டியலில் 4, 5 வது இடத்தில் உள்ளன.

இன்று வெற்றி பெறும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசம் என்பதால் காம்பிர், மணிஷ் பாண்டே, உத்தப்பா என, கோல்கட்டா பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க முயற்சிக்கலாம்.

இதேபோல, ஸ்டைன், புவனேஷ்வர் குமார், டேரன் சமி என, உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ள ஐதராபாத் அணியும் வெற்றிக்கு போராட தயாராக உள்ளது.

 

SHARE