ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபச்ச உரையாற்றுவதற்கு சிலமணி நேரம் உள்ள நிலையில், வட அமெரிக்கத் தமிழர்கள் பொங்குதமிழ் எழுச்சியோடு ஐ.நா முன் அணிதிரளத் தொடங்கிவிட்டனர்.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரியும் இப்பொங்குதமிழ் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கனடாவில் இருந்து பேருந்துகள் மூலமும், அமெரிக்காவின் பிற மாநிலங்களிலும் இருந்தும் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
இதேவேளை சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உரையினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக, ஐந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து தமிழகத்தில் இடம்பெற்றிருந்ததமிழர் எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்துள்ளனர்.
சென்னையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்ட மாபெரும் நீதிப் பேரணி
சென்னையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டுள்ள நீதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.
இன்று மாலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் இந்தப் பேரணி இடம்பெற்றது.
நீதிப் பேரணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பதைகைளையும், புலிக்கொடிகளைத் தாங்கியவாறு ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இறுதியின் பேரணியில் கலந்து கொண்டவர்களால் மகிந்த ராஜபக்ச மற்றும் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோரின் கொடும்பவிகள் எரிக்கப்பட்டன.