நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

493
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு  இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய, இந்த விசாரணைகளை மேற்கொள்வதறகுத் தேவையான நிதியைப் பெறுவதற்கு, ஐ.நா பொதுச்சபையினால், கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த விசாரணைகளுக்குத் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்ட, 1,460,900 டொலர் நிதியை ஒதுக்குவது மற்றும் அதனைச் செலவிடுவதற்கான, அங்கீகாரமே ஐ.நா பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டைத் தடுத்து, விசாரணையைத் தாமதப்படுத்த இலங்கை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதற்கு இந்தியாவினது ஆதரவும் கிடைத்திருந்தது.

எனினும், நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் கிடைப்பதை இலங்கையினால் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, பாகிஸ்தானின் உதவியுடன் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை எழுப்பி, விசாரணையைத் தாமதப்படுத்த முயன்றது.

இதையடுத்து, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா விசாரணையைத் தாமதப்படுத்த வாக்களித்த போதும், அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

aaa1117

SHARE