நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.
கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு நைஜீரியாவில் கலாபல்ஜ் மாவட்டத்தில் மெனாரி, சான்கயாரி, கராவா ஆகிய 3 கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர். வீடுகளில், புகுந்து மக்களை தாக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கொதித்து எழுந்தனர். வீட்டில் இருந்து அரிவாள், கத்தி, தடி, கற்கள் போன்ற ஆயுதங்களால் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்கினர். அவர்களை அடித்தும், வெட்டியும் கொன்றனர். கிராம மக்களின் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மக்கள் துணிந்து களம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் எஞ்சியவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூற நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனாதன் முடிவு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார்.