பிரச்சினைகளை அடிப்படையிலிருந்து ஆராய்ந்து தமிழ் – முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவை வலுவாக்குதற்கு திட்டமிட்டுள்ளோம்-TNA

308

 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே நிலவும் சிறுசிறு பிரச்சினைகள் குறித்து கூட்டாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் தீர்மானம் எடுத்துள்ளன. இதுதொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
imagesஇந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நாம் தொடர்ந்தும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் தரப்புக்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. முதலில் அவற்றைக் களைவதற்காக தொடர்பில் மக்களின் கருத்துக்களை கிராம மட்டத்திலிருந்து பெற்று ஆராயவுள்ளோம். இதற்காக விரைவில் கிழக்கு மாகாணத்துக்கு கூட்டாகச் செல்வதற்கும் எதிர்பார்த்துள்ளோம். பிரச்சினைகளை அடிப்படையிலிருந்து ஆராய்ந்து தமிழ் – முஸ்லிம்களுக்கு இடையிலான நல்லுறவை வலுவாக்குதற்கு திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே நேற்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா, எஸ்.வினோநோகராதலிங்கம், ஈ.சரவணபவன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் ஜனா ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச்செயலாளர் ஹசன் அலி, சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுற்கும் இடையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிரமமான முறையில் பேச்சுக்கள் இடம்பெற்று வந்தன. எனினும் அண்மைக்காலங்களாக அதனை தொடரமுடியாத நிலைமை காணப்பட்டது. இந்த நிலையில் நாம் மீண்டும் மு.காவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளோம். சமகால அரசியல் நிலைமைகள், தமிழ் – முஸ்லிம் உறவு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்ததுடன் எதிர்வரும் காலத்திலும் இரு தரப்பினரிடையே ஆக்கபூர்வமான முறையில் சந்திப்புக்களை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE