புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்

461

தமிழீழ விடுதலைப் புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தங்களுடைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வட பகுதிக்கான விஜயம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.

ananthasankariயாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் யாழ்தேவி சேவை ஆரம்பிக்கப்பட்டு, மற்றும் பல புதிய திட்டங்கள் அமுல்படுத்துவதையும், வடபகுதி மக்கள் வரவேற்பார்கள்.

எத்தகைய பெறுமதிமிக்க பிரயோசனமான திட்டங்கள் வடபகுதியில் அமுல்படுத்தினாலும், நீங்கள்தான் வடக்கிற்கும், கிழக்கிற்கும் மட்டுமல்ல, முழு இலங்கைக்கும் ஜனாதிபதி என்பதனையும், அனைவரையும் சமமாக நடத்துகின்றீர்கள் என்ற உணர்வும் ஏற்படும் வரையும், தமிழ் மக்கள் தங்களுக்குரிய பாராட்டை மனமகிழ்ந்து தரமாட்டார்கள்.

நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், இசைவாகவும் என்பதோடு மட்டுமல்லாமல், அத்துடன் மற்றும் அனைவரையும் போல, சகல அதிகாரங்களும், உரிமைகளும் பெற்று சமமாகவும் வாழவேண்டும்.

மக்களின் பிரதிநிதிகள் நாட்டு நலனுக்காக உழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளீர்கள். ஆனால் பல ஆண்டுகாலமாக அனுபவித்து வந்த கஸ்டங்களை துன்பங்களை மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள், பலகோடி பெறுமதிமிக்க அவர்களின் சொத்திழப்புகள், அதேபோல பல்லாயிரம் கோடி பெறுமதியான புகையிரத சேவை, தொலைத் தொடர்புசேவை, விமான நிலையம் போன்ற பல இழப்புக்களையும் நேரடியாக கண்டபின்பும் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் அவர்கள்தான் தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும் கூறுபவர்களிடமிருந்து நாம் எவ்வாறு அத்தகைய உழைப்பை எதிர் பார்க்கமுடியும்.

விடுதலைப் புலிகளிடம் அடைவு வைத்த தங்க நகைகளை, வட்டியும் முதலும் அறவிடாமல் சொந்தக்காரர்களிடம் கையளித்தமையை, பாராட்டும் அதேவேளை புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தையும் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகின்றேன்.

வங்கிகளின் வட்டிவிகிதம் குறைக்க எடுத்த நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவிக்கும் அதேவேளை, அதிகமாக நான் கேட்கின்றேன் என நீங்கள் உணராவிட்டால், யுத்தம் முடிந்தவுடன் வங்கிகள் காட்டிய தாராள மனப்பான்மையை பாவித்து பெரும் தொகை பணத்தை மக்கள் கடனாகப் பெற்றனர்.

அதன் பின் தங்கத்தின் விலை குறைந்தபின் மக்களை நகைகளை மீட்குமாறு வற்புறுத்தியும், அதிக விகிதவட்டி அறவிட்டும் மேலும் தண்டனை வட்டி அது இதுவென அறவிட்டமையால் மக்கள் பலவித கஸ்டத்தை அனுபவித்தனர்.

இவ்விடயத்தில் வங்கிகள் பெருந்தொகையான இலாபம் அடைந்தமையால் மக்களிடம் நியாயமற்ற முறையில் அறவிடப்பட்ட பணத்தை அவர்களுக்கு திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகின்றேன்.

என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE