பூகோள சகதிக்குள் சிக்கியிருக்கின்ற இலங்கை

353

இன்றைய பூகோள அரசியல் நிலைமை என்பது மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது என்று தான் கூறவேண்டும். காரணம் என்னவென்றால் ஒரு நாட்டை கடன் சுமைக்குள்ளாக்கிவிட்டு நாடு மீள் எழும்பாத வகையிலே பல்வேறு அழுத்தங்களை கொடுக்கின்ற ஒரு சூழல் தான் தற்பொழுது இலங்கை தேசத்திலே உருவாகியிருக்கின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது நாங்கள் அவ்வாறு செய்திருக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. எனவே நாம் நாடுகளை பகைத்துக்கொண்டு ஒருபோதும் வாழமுடியாது. எனவே இந்தியாவை பொறுத்தவரையிலே இலங்கைத்தீவிலே கிட்டத்தட்ட பண்டைய காலத்தில் இருந்து இலங்கை இந்தியா நட்புறவு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அந்த நட்புறவை தற்பொழுது சீரழிக்கும் வகையிலே சீனா தற்பொழுது இலங்கைத் தீவிலே தனது மூக்கை நுழைத்திருக்கின்றது. சீனாவினுடைய அபிவிருத்தி திட்டங்கள் இந்த நாட்டிலே தொடர்ந்தும் வருவதற்கான வாய்ப்புக்கள் தான் இருந்துகொண்டிருக்கின்றன. காரணம் சீனத் துறைமுகம் அம்பாந்தோட்டையில் இருக்கின்றது, அதுபோன்று போர்ட்சிட்டி கொழும்பிலே அமைக்கப்பட்டிருக்கின்றது அதுமட்டுமன்றி இன்னும் பல வர்த்தக நடவடிக்கைகளும் இலங்கை தீவிலே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எனவே இவற்றை காலப்போக்கில் 2040 ஆம் ஆண்டளவிலே இலங்கை நாடானது ஒரு சீன காலனித்துவத்திற்குள் கொண்டுவரப்படுகின்ற ஒரு சூழலே உருவாக்கப்படும். சீனாவை பொறுத்தவரையிலே கடன் பெற்ற நாடுகள் யாராக இருப்பினும் தான் உதவி செய்ய தயாராக இருப்பதாக சீன அரசாங்கம் தற்பொழுது அறிவித்திருக்கின்றது. அதற்கமைய பல்வேறு நாடுகளும் சீனாவையே நம்பி வாழுகின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதனை நாம் சர்வதேச ரீதியாக அணுகுகின்ற பொழுது அமெரிக்கா மறுபுறத்திலே தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகளை வைத்திருக்கின்றது தொழினுட்ப ரீதியாக அல்லது பெற்றோலிய வள ரீதியாக மேற்கத்தைய நாடுகளை தன்வசம் வைத்திருக்கின்றது. ஆனால் இலங்கையை பொறுத்தவரையிலே இலங்கைக்கான ஆசிய பசுபிக் பிராந்தியத்திலே இலங்கையை தன்வசம் வைத்துக்கொண்டால் மாத்திரமே ஒரு போராட்ட சகதிக்குள் இந்த உலக நாடுகள் தள்ளப்படுகின்றபொழுது இலங்கையினுடைய தளம் மிக முக்கியமாக இருப்பதால் இலங்கையின் இயற்கை வளம் கொண்ட திருகோணமலை துறைமுகம் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. எனவே அந்த போர் சூழலை சமாளித்துக்கொள்வதற்கு இலங்கை நாடு அவசியம் என்ற வகையில் மும்முனை போட்டியாக சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே இவர்களை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் அதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றால் மக்கள் புரட்சியின் மூலமாகவே அதை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் வளங்களையும் நிலங்களையும் சுரண்டுகின்றபொழுது ஒரு நாடு அரசியலிலே அல்லது பொருளாதாரத்திலே குட்டிச்சுவடாக போகின்ற வாய்ப்புக்கள் தான் இருக்கின்றனவே தவிர வேறு எந்த மாற்றுக்கருத்துக்களையும் சிந்திக்கமுடியாத அளவிற்கு நிலைமை தள்ளப்படும். நாட்டிலே வறுமை தலைவிரித்து ஆடும் பொழுது அந்த வறுமையை காரணம் காட்டி அந்த நாட்டை தொடர்ந்தும் கடனுக்குள் சிக்கவைக்கின்ற ஒரு நடவடிக்கையையே இந்த மேற்கதேய நாடுகள் செய்துவருகின்றன தற்பொழுது இலங்கையிலும் அந்த நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது. இலங்கைத்தீவை பொறுத்தவரையிலே யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் கூட இந்த கடன் சுமைகள் இருக்கவில்லை. யுத்தத்திற்கு இராணுவ செலவீனங்கள் பன்மடங்காக அதிகரித்த நிலையிலும் அந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையவில்லை. அதுபோன்று யுத்தம் அதிதீவிரமாக இடம்பெற்ற 1990, 1995, 2000 காலப்பகுதியில் கூட வன்னி பெருநிலப்பரப்பிலே பொருளாதார தடை போடப்பட்டிருந்தபொழுதும் கூட பெற்றோல் 3000 ரூபாய், மண்ணெண்ணெய் 1000 ரூபாய், சவர்க்காரம் 200 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் இவ்வாறெல்லாம் விற்ற பொழுதிலும்கூட அந்த மக்கள் வறுமையாக வாழவில்லை. அதற்கேற்ப அனைத்து விதங்களிலும் தம்மை தயார்ப்படுத்திக்கொண்டார்கள். அவர்களுக்கு ஏற்ற பொருளாதாரம் தொடர்ந்தும் இருந்துகொண்டே இருந்தது. இன்றைய காலகட்டத்தை பார்க்கின்ற பொழுது இது ஒரு யுத்தம் நிறைவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலே தற்பொழுது உலக நாடுகள் இலங்கையை குழப்புவதற்காக இலங்கையிலே ஒரு புரட்சியை உருவாக்குவதற்காக அல்லது இலங்கையை மாற்றமடைய செய்வதற்காக பல்வேறுதரப்பட்ட முனைகளிலும் இருந்து இலங்கையை தீண்டிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லது ஆட்சியாளர்களை வைத்து ஆட்சி மாற்றங்களை உருவாக்கி அவர்களை திசை திருப்புகின்ற செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டில் ஒரு தேர்தல் இடம்பெறவேண்டுமாக இருந்தாலும் வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய ஒரு சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்பட்டிருக்கின்றது. அதாவது மாகாணசபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சிமன்ற தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ நடத்துவதாக இருந்தாலும் கூட திரைசேனையில் பணம் இல்லை என்ற விடயமே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் மக்களிடம் கையேந்துகின்ற ஒரு சூழலும் தற்பொழுது உருமாறிவருகின்றது. இதற்கிடையில் தற்பொழுது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது ஆட்சியை நிலை நிறுத்தும் வகையிலே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் எனவே இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கின்றபொழுது இந்த நாட்டு மக்களின் நிலைமையை எடுத்துக்கொண்டால் வறுமைக் கோட்டுக்குள் பொருளாதாரம் சென்றதால் அவர்களும் வறுமையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றார்கள். தற்பொழுது பெற்றோலின் விலை அதிகரித்திருக்கின்றது, மின்சார கட்டணம் அதிகரித்திருக்கின்றது, டக்ஸ் வரி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது இவ்வாறெல்லாம் இடம்பெறுகின்றபொழுது மென்மேலும் மக்களை சுரண்டி அரசாங்கம் வாழும் ஒரு சூழல்; உருவாகிக்கொண்டுவருகின்றது. எனவே இன்று தொழில் அதிபர்கள், பண பலம் படைத்தவர்கள் அவர்கள் ஏதோ ஒரு வகையிலே வாழுகின்ற சூழல் இந்த நாட்டில் இருந்தாலும் கூட இன்று வறுமைக் கோட்டிற்குள் இருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் என்பது அதாள பாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கின்றது. இலங்கையில் வாழும் குறித்த ஒரு நபர் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளம் எடுத்தால் மட்டுமே ஒரு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் நிலைமை தற்பொழுது மாற்றப்பட்டிருக்கின்றது. பேற்றோலின் விலை அதிகரிப்பதன் ஊடாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் ஊடாக இதில் அரசாங்கம் அந்த வரிப் பணத்தை எடுத்து தனது அரசாங்கத்தை நடத்துவதாகத் தான் அது சென்றுகொண்டிருக்கின்றதே தவிர மக்கள் நலனில் அக்கறையுடன் அவர்கள் செயற்படுவதில்லை. பொருளாதாரத்தை வளப்படுத்துகின்றோம் என கூறிக்கொண்டு மின்சாரத்திலும், எரிபொருளிலும் அவர்கள் உடன் கைவைக்கின்றார்கள். எனவே இந்த நாட்டிலே வாகனங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதிகமாக காணப்படுகின்ற பொழுது இந்தியாவிடமிருந்து வாகன கொள்வனவுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்பொழுது இலங்கை அரசு எடுத்துவருகின்றது. இவ்வாறு செய்வதன் ஊடாக அவர்கள் சீனாவிடம் இருந்தும் யப்பானிடம் இருந்தும் வாகன கொள்வனவுகளை செய்வதற்கு முன்னின்றுவருகின்றது. இதனை அறிந்த இந்திய அரசு தற்பொழுது பூதாகரமாக ஒரு பூகோள ரீதியிலான சர்ச்சை ஒன்றை கிளப்பியிருக்கின்றது. பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் வருவார் என மீளவும் ஒரு ஆயுத போராட்டத்திற்கான சமிக்கையை அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். இந்தியா கடந்த காலத்தில் விடுதலைப் போராட்டத்தை வைத்தே இலங்கையை தன்வசம் வைத்திருந்தது என்பது அனைவருக்கும் தெரியும் தற்பொழுது கூட இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் அல்லது இல்லை என்பதற்கு அப்பால் தேசியத் தலைவர் பிரபாகரனை வைத்து அரசியல் செய்கின்ற ஒரு நடவடிக்கையையே தற்பொழுது இந்தியாவில் இருக்கின்ற ரோ புலனாய்வு துறை அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது. பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் ஒரு கருத்தை கூறியதன் அடிப்படையில் இன்று பல விமர்சங்களும் அது தொடர்பான சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலைமையில் இன்று சர்வதேச ரீதியாக ஒரு வேளை பிரபாகரன் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒரு கருத்தையும் அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. இப்படி பல்வேறு நாடுகளும் அது தொடர்பான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றன எதுஎவ்வாறு இருப்பினும் இலங்கையை இராஜதந்திர ரீதியிலே அணுகுகின்ற இந்த நாடுகள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை மூடிமறைப்பதற்கான அடுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது. காரணம் இந்த பூகோள அரசியல் என்பது அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகள் அந்த நாடுகளை சிதைக்கின்ற நடவடிக்கைகளையே தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்றைய காலகட்டத்தில் சர்வதேச நாடுகள் எம் மீது கொடுக்கின்ற அழுத்தங்களில் இருந்து நாம் விடுபடவேண்டும். அழுத்தங்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமாயின் இந்த நாட்டை ஒரு வளமுகம் கொண்ட நாடாக மாற்றியமைக்க உல்லாச பயண வருகையை அதிகப்படுத்த வேண்டும் இந்த நாடு தொடர்ந்தும் போராட்ட சகதிக்குள் சிக்குமாக இருந்தால் இந்த நாட்டிற்கு வருகின்ற உல்லாச பயணிகளின் வருகை குறைவடையும். ஆகவே இந்த நாடு மீண்டும் பொருளாதார சகதிக்குள் சிக்குண்டு ஒரு சோமாலியாவை விட மோசமான நாடாக மாற்றம்பெறும் எனவே அதனை தடுத்து நிறுத்தும் வகையில் மக்களின் புரட்சி தற்பொழுது வெடித்திருக்கின்றது. இந்த அரசாங்கங்கள், அரச இயந்திரங்கள் மக்கள் மீது பலிகளை சுமத்தாது மக்களை பாதுகாத்து தமது சுயலாப அரசியலை கைவிட்டு இந்த நாட்டை முன்னேற்றுவதற்கான சகல வழிகளையும் மேற்கொண்டால் மட்டுமே நாம் இந்த பூகோள அரசியலின் பிடிக்குள் இருந்து மீள வெளியே வந்து எமது நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதே இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது.

SHARE